IND vs AUS : ஆஸி மாதிரியே இந்தியாவும் தப்பு பண்ணிட்டாங்க, அது தான் தடுமாற காரணம் – இந்திய பேட்ஸ்மேன்களை விளாசும் கம்பீர்

Gautam gambhir 2
- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் ஆஸ்திரேலியா முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து ஆரம்பத்திலேயே கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டது. இருப்பினும் 3வது போட்டியில் பட் கமின்ஸ் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாமலேயே ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் கொதித்தெழுந்த ஆஸ்திரேலியா தாறுமாறாக சுழன்ற இந்தூரில் இந்தியாவை 109, 163 ரன்களுக்கு சுருட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனால் தங்களாலும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ள அந்த அணி தங்களது நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்து ஒயிட் வாஷ் தோல்வியை தவிர்த்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்று அசத்தியுள்ளது.

IND

- Advertisement -

மறுபுறம் 2 – 1* (4) என்ற கணக்கில் முன்னிலை வகித்தாலும் அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் கடைசி போட்டியில் வென்றால் தான் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு செல்ல முடியும் என்ற நிலைமைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் தங்களது சொந்த மண்ணில் தோற்கடித்த இந்தியாவை இம்முறை அவர்களது சொந்த மண்ணில் தோற்கடித்து 2004க்குப்பின் தொடரை வெல்லும் முனைப்புடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அதற்காக ஆரம்பத்திலேயே பிட்ச் பற்றி தேவையற்ற விமர்சனங்களை வைத்தது.

தப்பு பண்ணிட்டீங்க:
ஆனால் வாயில் பேசியதை செயலில் காட்டத் தவறிய ஆஸ்திரேலியா இந்த தொடருக்கு முன்பாக ஒரு பயிற்சி போட்டியில் கூட விளையாடி இந்திய சூழ்நிலைகளுக்கு தங்களை உட்படுத்திக் கொள்ள தவறியதே தோல்விக்கான முக்கிய காரணம் என்று முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில் இந்த தொடருக்கு முன்பாக முக்கிய இந்திய பேட்ஸ்மேன்கள் ரஞ்சிக் கோப்பை உள்ளூர் தொடரில் விளையாடி பயிற்சி எடுக்காததே இத்தொடரில் தடுமாறுவதற்கு காரணம் என்று முன்னாள் இந்திய வீரர் கெளதம் கம்பீர் விமர்சித்துள்ளார்.

Pujara

இந்த தொடரில் விராட் கோலி, புஜாரா உள்ளிட்ட முக்கிய பேட்ஸ்மேன்கள் தடுமாறும் நிலையில் ரோகித் சர்மாவும் முதல் போட்டியில் சதமடித்ததை தவிர்த்து பெரிய ரன்களை குவிக்கவில்லை. மாறாக அக்சர் படேல், அஷ்வின், ஜடேஜா ஆகிய லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் முக்கிய ரன்களை எடுத்ததாலேயே இந்தியா முதலிரண்டு போட்டிகளில் வென்றது. அந்த வகையில் பயிற்சி போட்டியில் விளையாடாமல் நேரடியாக களமிறங்கி தடுமாறும் ஆஸ்திரேலியாவை போல் இந்த தொடருக்கு முன்பாக விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் ஓய்வெடுத்ததற்கு பதிலாக ரஞ்சி கோப்பையில் விளையாடியிருக்க வேண்டுமென தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ஆம் அவர்கள் ரஞ்சிக் கோப்பையில் 100% அல்ல 200% கண்டிப்பாக விளையாடியிருக்க வேண்டும். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்திய பேட்ஸ்மேன்கள் நிச்சயமாக சில ரஞ்சிக்கோப்பை போட்டியில் விளையாடியிருக்க வேண்டும். அதை அவர்கள் ஒரு தயாராகும் இடமாக மட்டும் பார்த்திருக்கக் கூடாது. ஏனெனில் என்ன தான் நீங்கள் 20 நாட்கள் பயிற்சி முகாமில் கலந்து கொண்டாலும் அல்லது வலைப்பயிற்சி செய்தாலும் இது போன்ற உள்ளூர் போட்டிகளில் விளையாடும் அனுபவம் கிடைக்காது”

Gautam Gambhir

“எடுத்துக்காட்டாக இத்தொடருக்கு முன்பாக பயிற்சி போட்டிகளில் விளையாடாத காரணத்தாலேயே முதலிரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியினர் மனதளவில் தடுமாறினார்கள். ஆனால் இப்போதெல்லாம் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதை எதிர்மறையாக நிறைய வீரர்கள் பார்க்கின்றனர். இந்திய பேட்ஸ்மேன்களுக்கும் அது பொருந்தும். இது போன்ற முக்கிய டெஸ்ட் தொடருக்கு முன்பாக நீங்கள் எப்போதும் சில சிவப்பு நிற பந்து போட்டிகளில் விளையாட வேண்டியது அவசியமாகும்” என்று கூறினார்.

இதையும் படிங்க:வீடியோ : சதமடிச்சு சாதனை படைச்சு என்ன புண்ணியம், பாபர் அசாமை விளாசிய சைமன் டௌல் – நடந்தது என்ன

அவர் கூறுவது போல ஒரு காலத்தில் சச்சின், கங்குலி போன்ற முன்னாள் வீரர்கள் அதுவும் ஆஸ்திரேலியா போன்ற பெரிய அணிக்கு எதிரான தொடருக்கு முன்பாக ரஞ்சி கோப்பையில் விளையாடுவார்கள். ஆனால் இப்போதுள்ள விராட் கோலி, ரோஹித் சர்மா போன்றவர்கள் நட்சத்திர அந்தஸ்து பார்க்கிறார்களா இல்லையா என்று தெரியவில்லை ஆனால் ஆஸ்திரேலியா போன்ற முக்கிய தொடருக்கு முன்பாக பணிச்சுமை என்ற பெயரில் ஓய்வெடுத்தார்களே தவிர உள்ளூர் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடவில்லை.

Advertisement