வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. அந்தத் தொடரின் முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றன. அதனால் சமனில் இருந்த அந்த தொடரின் வெற்றியாளரின் நிர்ணயிக்கும் மூன்றாவது போட்டி டிசம்பர் 19ஆம் தேதி மும்பை டிஒய் பாட்டில் மைதானத்தில் நடைபெற்றது.
அதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீசுவதாக செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு உமா சேத்ரி டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தாலும் கேப்டன் ஸ்மிருதி மந்தனா அதிரடியாக விளையாடினார். அவருடன் இரண்டாவது விக்கெட்டுக்கு 98 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜெமிமா 39 ரன்களில் அவுட்டானார்.
மந்தனா அசத்தல்:
மறுபுறம் தொடர்ந்து வெளுத்து வாங்கிய மந்தனா 13 பவுண்டரி 1 சிக்ஸருடன் 77 (47) ரன்கள் விளாசி அவுட்டானார். அடுத்து வந்த ரிச்சா கோஸ் பட்டாசாக விளையாடி 18 பந்தில் 50 ரன்கள் கடந்து 54 (21) ரன்களை விளாசி அவுட்டானார். அதன் வாயிலாக சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் வேகமாக அரை சதமடித்த இந்திய வீராங்கனை என்ற சாதனையும் அவர் படைத்தார். இறுதியில் ராகவி பிஸ்த் 31* (22), சஞ்சீவன் ஷஜனா 4* (1) ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் இந்தியா 217-4 ரன்கள் எடுத்தது.
அதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய மகளிரணி தங்களுடைய அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்து சாதனை படைத்தது. இதற்கு முன் இதே வருடம் தம்புலாவில் நடைபெற்ற அமீரக அணிக்கு எதிரான போட்டியில் 201-5 ரன்கள் எடுத்ததே முந்தைய சாதனை. அதையடுத்து 218 ரன்கள் துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அதிரடியாக விளையாட முயற்சித்தாலும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 20 ஓவரில் 157-9 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.
இந்தியா வெற்றி:
அதிகபட்சமாக சின்லே ஹென்றி 43 (16), கேப்டன் ஹெய்லே மேத்தியூஸ் 22 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ராதா யாதவ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். அதனால் 60 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 2 – 1 (3) என்ற கணக்கில் இத்தொடரை வென்றது. இதன் வாயிலாக சொந்த மண்ணில் 5 வருடங்கள் கழித்து இந்திய மகளிரணி ஒரு டி20 தொடரை வென்று சாதனை படைத்தது.
இதையும் படிங்க: என்னோட அப்பாவை மன்னிச்சு விட்ருங்க.. இதெல்லாம் இன்னுமா நம்புறீங்க.. ஓய்வு பற்றி அஸ்வின் விளக்கம்
இப்போட்டியில் அடித்த 77 ரன்கள் சேர்த்து இந்த வருடம் நடைபெற்ற டி20 போட்டிகளில் ஸ்ம்ரிதி மந்தனா இந்தியாவுக்காக மொத்தம் 763 ரன்களை அடித்துள்ளார். அதன் வாயிலாக மகளிர் டி20 கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற உலக சாதனையை அவர் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ஸ்ம்ரிதி மந்தனா (இந்தியா): 763, 2024*
2. சமாரி அட்டப்பட்டு (இலங்கை): 720, 2024
3. ஈஷா ஓசா (அமீரகம்): 711, 2024