இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி வந்த ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச போட்டிகளிலிருந்து விடை பெறுவதாக அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பு இந்திய ரசிகர்களுக்கு ஆச்சரியமாகவும் ஏமாற்றமாகவும் சோகமாகவும் அமைந்தது. ஏனெனில் 2012 – 2024 வரை இந்தியா சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோற்காமல் இருக்க முக்கிய பங்காற்றிய அவர் 2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் ட்ராபி வெற்றியாளர் ஆவார்.
அத்துடன் இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் 2வது அதிக விக்கெட்டுகள் (765) எடுத்த வீரராகவும் அஸ்வின் சாதனை படைத்துள்ளார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் அதிக தொடர்நாயகன் விருதுகள் வென்ற வீரர் என்ற முத்தையா முரளிதரன் உலக சாதனையையும் அஸ்வின் சமன் செய்துள்ளார். அப்படிப்பட்ட அவர் ஃபிட்டாக இருப்பதால் தொடர்ந்து விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அப்பாவின் ஆதங்கம்:
இருப்பினும் இவ்வளவு சாதனைகள் படைத்து வெற்றிகளில் பங்காற்றியும் வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் அவருக்கு இந்திய அணி வாய்ப்பு கொடுப்பதில்லை. அதனால் தற்போது நடைபெறும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் பாதியிலேயே அஸ்வின் 38 வயதில் இளம் வீரர்களுக்கு வழிவிட்டு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் என்று சொல்லலாம். அந்த நிலையில் நீண்ட காலமாகவே அஸ்வின் மனதிற்குள் அவமானமும் ஆதங்கமும் இருந்ததாக அவருடைய தந்தை ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்தார்.
அதனாலேயே தம்முடைய மகன் ஓய்வு பெற்றிருக்கலாம் என்றும் அவர் கூறினார். மேலும் ஓய்வு முடிவு தங்களுக்கே கடைசி நிமிடத்தில் தான் தெரியும் என்றும் ரவிச்சந்திரன் தெரிவித்திருந்தார். அதிலிருந்து வெளிநாடுகளில் வாய்ப்பு கொடுக்காமல் இந்திய அணி அவமானப்படுத்திய காரணத்தாலேயே அஸ்வின் ஓய்வு பெற்றார் என்பது உறுதியானது.
அப்பாவை விட்ருங்க:
அந்த செய்தி சமூக வலைதளங்களிலும் உடனடியாக தீயாகப் பரவியது. அது பற்றி தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல விளையாட்டு தொகுப்பாளர் சுமந்த் சி ராமன் ட்விட்டரில் அஸ்வினிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு அஸ்வின் பதிலளித்துள்ளது பின்வருமாறு. “செய்தியாளர்களை சந்திக்கும் அளவுக்கு என்னுடைய தந்தை பயிற்சி எடுத்தவர் கிடையாது. டேய் அப்பா என்ன இதெல்லாம்”
இதையும் படிங்க: 40 எஸ்ட்ராஸ்.. 54க்கு ஆல் அவுட்.. ஜிம்பாப்வே அணியை மிரட்டிய ஆப்கானிஸ்தான்.. மாபெரும் சாதனை வெற்றி
“அதே சமயம் கள்ளம் கபடம் இல்லாத கலாச்சாரம் நிறைந்த நம்முடைய தந்தைகளின் கருத்தை நீங்கள் பின்பற்றுவீர்கள் என்று நான் எப்போதும் நினைத்ததில்லை. உங்கள் அனைவரிடமும் என்னுடைய தந்தையை மன்னித்து தனியாக விடுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறினார். அதாவது தம்முடைய ஓய்வு பற்றி தனது தந்தை சொன்ன கருத்துக்களை நம்ப வேண்டாம் என்று அஸ்வின் கேட்டுக் கொண்டுள்ளார்.



