தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 25 வருடங்கள் கழித்து இந்தியா தங்களது சொந்த மண்ணில் தோற்றது. அடுத்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றன. அதனால் சமநிலைப் பெற்ற அத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசிப் போட்டி டிசம்பர் 6ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் மதியம் 1.30 மணிக்கு துவங்கியது.
அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய தெனாப்பிரிக்கா 47.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 270 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக குவிண்டன் டீ காக் சதத்தை அடித்து 106 ரன்கள் எடுத்தார். அவருடன் கேப்டன் தெம்பா பவுமா 48, தேவால்ட் ப்ரேவிஸ் 29 ரன்கள் எடுத்த போதிலும் மற்ற பேட்ஸ்மேன்கள் ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.
இந்தியா அசத்தல்:
இந்திய அணிக்கு அதிகபட்சமாக பிரசித் கிருஷ்ணா மற்றும் குல்தீப் யாதவ் தலா 4 விக்கெட்டுகள் எடுத்தார்கள். அடுத்து விளையாடிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் ஜோடி சேர்ந்து அசத்தலாக விளையாடினார்கள். ஆரம்பத்தில் நிதானத்தைக் காட்டிய அந்த ஜோடி நேரம் செல்ல செல்ல அதிரடியாகவும் பேட்டிங் செய்து 155 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்தியாவுக்கு நல்ல துவக்கத்தைக் கொடுத்தது.
அதில் 7 பவுண்டரி 3 சிக்சரை பறக்க விட்ட ரோஹித் சர்மா அரை சதமடித்து 75 (73) ரன்கள் குவித்து கேசவ் மகாராஜ் சுழலில் அவுட்டானார். மறுபுறம் நிதானமாக விளையாடிய ஜெயஸ்வால் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் அரை சதத்தை அடித்தார். அடுத்து வந்த விராட் கோலி வழக்கத்திற்கு மாறாக அதிரடியாக விளையாடி தென் ஆப்பிரிக்காவை பந்தாடினார்.
இந்தியா வெற்றி:
அதைப் பார்த்து தம்முடைய பங்கிற்கு அதிரடி காட்டிய ஜெய்ஸ்வால் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை அடித்து அசத்தினார். நேரம் செல்ல செல்ல அதிரடி காட்டிய அந்த ஜோடி கடைசி வரை அவுட்டாகாமல் போட்டியை முடித்தனர். அதில் விராட் கோலி 6 பவுண்டரி 3 சிக்சருடன் 65* (45), ஜெய்ஸ்வால் 12 பவுண்டரி 2 சிக்சருடன் 116* (121) ரன்கள் குவித்ததால் 39.5 ஓவரிலேயே 271/1 ரன்களை குவித்த இந்தியா 9 விக்கெட் வென்றது.
இதையும் படிங்க: 100 சிக்ஸ்.. ரோஹித், சூர்யகுமார் உட்பட இந்தியர்கள் யாருமே செய்யாத வரலாறு படைத்த அபிஷேக் சர்மா
அதனால் 2 – 1 (3) என்ற கணக்கில் இத்தொடரை வென்ற இந்தியா டெஸ்ட் தொடரில் சந்தித்த தோல்விக்கு தென்னாப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுத்துள்ளது. இப்போட்டியையும் சேர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக முறை அவுட்டாகாமல் 50க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்த வீரர் என்ற எம்எஸ் தோனியின் உலக சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. எம்எஸ் தோனி/விராட் கோலி: தலா 36 முறை
2. ஜேக் காலிஸ்: 35 முறை
3. இன்சமாம்-உல்-ஹக்: 32 முறை



