இந்தியாவில் சயீத் முஸ்டாக் அலி டி20 கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகின்றது. அத்தொடரில் டிசம்பர் 6ஆம் தேதி ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்ற எலைட் குரூப் சி பிரிவின் லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் சர்வீசஸ் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற சர்வீசஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவரில் அதிரடியாக பேட்டிங் செய்து 223/6 ரன்களை குவித்து அசத்தியது. அந்த அணிக்கு நல்ல ஃபார்மில் இருக்கும் கேப்டன் அபிஷேக் ஷர்மா 8 பவுண்டரி 3 சிக்ஸர்களை பறக்க விட்டு 62 (34) ரன்கள் குவித்து அசத்தினார். அவருடன் பிரப்சிம்ரன் சிங் 50 (28), நமன் திர் 54 (22), அன்மோல்ப்ரீத் சிங் 34 (23) ரன்கள் அடித்து கை கொடுத்தனர்.
2025இல் 100 சிக்ஸர்கள்:
சர்வீசஸ் அணிக்கு அதிகபட்சமாக அபிஷேக் திவாரி, விஷால் கௌர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அடுத்ததாக விளையாடிய சர்வீசஸ் அணி தடுமாற்றமாக பேட்டிங் செய்து 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது. அதிகபட்சமாக ரவி சவுகான் 33, அபிஷேக் திவாரி 40 ரன்கள் எடுத்தனர்.
பஞ்சாப்புக்கு அதிகபட்சமாக கேப்டன் அபிஷேக் சர்மா, சன்விர் சிங், ஹர்ப்ரீத் ப்ரார் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள். அதனால் 73 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற பஞ்சாப்புக்கு ஆல் ரவுண்டராக வெற்றியில் முக்கிய பங்காற்றிய கேப்டன் அபிஷேக் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார். இப்படி தொடர்ச்சியாக உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் அசத்தியதால் அவருக்கு கடந்த வருடம் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.
அபிஷேக் வரலாற்று சாதனை:
அந்த வாய்ப்பில் அடித்து நொறுக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அபிஷேக் ஷர்மா ஐசிசி டி20 தரவரிசையில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக ஜொலித்து வருகிறார். அத்துடன் 2025 ஆசியக் கோப்பையில் தொடர்நாயகன் விருது வென்ற அவர் இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். அந்த வகையில் இந்திய அணியின் புதிய மேட்ச் வின்னராக உருவெடுத்துள்ள அவர் இப்போட்டியில் அடித்த 3 சிக்சரையும் சேர்த்து 2025ஆம் ஆண்டில் விளையாடிய டி20 போட்டிகளில் 100 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.
இதையும் படிங்க: 9இல் 1408 ரன்ஸ்.. ஸ்டூவர்ட் ப்ராடை முந்திய ஸ்டார்க் புதிய உலக சாதனை.. ஆஸியிடம் திணறும் இங்கிலாந்து
இதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் 100 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அபிஷேக் சர்மா படைத்துள்ளார். இதற்கு முன் ரோஹித் சர்மா, சூரியகுமார் ஆகியோர் கூட இந்த சாதனையைப் படைத்ததில்லை. அந்தப் பட்டியல்:
1. அபிஷேக் சர்மா: 100* (2025)
2. அபிஷேக் சர்மா: 87 (2024)
3. சூர்யகுமார் யாதவ்: 85 (2022)
4. சூர்யகுமார் யாதவ்: 71 (2023)
5. ரிஷப் பண்ட்: 66 (2018)



