வீடியோ : எழுதப்பட்ட புதிய சரித்திரம், உதயமான புதிய வருங்காலம் – அண்டர் 19 உ.கோ’யை வென்ற இந்திய மகளிரணி

Indian Womens
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் வருங்கால நட்சத்திரங்களை அறிமுகப்படுத்தும் அண்டர்-19 உலககோப்பை கடந்த 2000 முதல் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. அதனால் மிகவும் மகிழ்ச்சியடைந்த ஐசிசி இந்த வருடம் மகளிர் கிரிக்கெட்டிலும் அண்டர்-19 உலகக் கோப்பையை அறிமுகப்படுத்தியுள்ளது. உலகம் முழுவதிலும் இருந்து மொத்தம் 16 அணிகள் பங்கேற்ற இத்தொடர் தென்னாபிரிக்காவில் கடந்த ஜனவரி 14ஆம் தேதியன்று துவங்கியது. இத்தொடரில் ஏற்கனவே 16 வயதில் அறிமுகமாகி அதிரடியாக விளையாடி லேடி சேவாக் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் ஷபாலி வர்மா தலைமையில் குரூப் டி பிரிவில் இடம் பிடித்திருந்த இந்தியா லீக் சுற்றில் தென் ஆப்பிரிக்கா, அமீரகம், ஸ்காட்லாந்து ஆகிய அணிகளை தோற்கடித்து புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்தது.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற சூப்பர் 6 சுற்றில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்தாலும் இலங்கைக்கு எதிரான கடைசி வாய்ப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்தியா ரன் ரேட் அடிப்படையில் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது. அதைத்தொடர்ந்து நியூசிலாந்தை முதல் அரையிறுதி போட்டியில் எதிர்கொண்ட இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று பைனலுக்கு தகுதி பெற்றது. வரலாற்றில் ஐசிசி தொடர்களில் ஆடவர் அணி கூட நியூசிலாந்திடம் மண்ணை கவ்வி வரும் நிலையில் மகளிர் அணியினர் அசால்டாக தோற்கடித்தது ரசிகர்களை திருப்பி பார்க்க வைத்தது.

- Advertisement -

எழுதப்பட்ட வரலாறு:
அந்த நிலையில் மகளிர் 2023 அண்டர்-19 டி20 உலக கோப்பை தொடரின் மாபெரும் இறுதி போட்டி ஜனவரி 29ஆம் தேதியன்று சென்வஸ் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 5.15 மணிக்கு துவங்கியது. அதில் லீக், சூப்பர் 6 சுற்றுகளில் வென்று அரை இறுதியில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்த இங்கிலாந்தை இந்தியா எதிர்கொண்டது. அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து முதல் ஓவரிலிருந்தே அனலை தெறிக்க விட்ட இந்தியா வீராங்கனைகளிடம் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

குறிப்பாக கேப்டன் ஸ்கிரிவேன்ஸ் 4, ஹீப் 0, ஹோலண்ட் 10, ஸ்மேல் 3, மெக்டொனால்ட்-கே 19, பாவ்லே 2 என முக்கிய வீராங்கனைகள் இந்தியாவின் அதிரடி பந்து வீச்சில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதனால் 46/6 என்ற மோசமான தொடக்கத்தைப் பெற்று தடுமாறிய அந்த அணிக்கு அடுத்து வந்த வீராங்கனைகளும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் 17.1 ஓவரிலேயே இங்கிலாந்தை 68 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக அர்ச்சனா தேவி, டைட்டஸ் சாது, பார்சவி சோப்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

- Advertisement -

அதைத் தொடர்ந்து 69 என்ற சுலபமான இலக்கை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் சபாலி வர்மா 1 பவுண்டரி 1 சிக்ஸருடன் 15 (11) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்த நிலையில் இத்தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீராங்கனையாக சாதனை படைத்துள்ள ஸ்வேதா செராவத் 5 (6) ரன்னில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினார். அதனால் 20/2 என தடுமாற்றத் தொடக்கத்தைப் பெற்று தடுமாறிய இந்தியாவுக்கு அடுத்ததாக களமிறங்கி நங்கூரமாக பேட்டிங் செய்த திரிஷா – சௌமியா திவாரி ஆகியோர் பொறுப்புடன் ரன்களை சேர்த்தனர்.

3வது விக்கெட்டுக்கு 46 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை உறுதி செய்த இந்த ஜோடியில் திரிஷா 3 பவுண்டரியுடன் 24 (29) ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் அசத்திய திவாரி 3 பவுண்டரியுடன் 24* (29) ரன்கள் குவித்து ஃபினிஷிங் கொடுத்தார். அதனால் 14 ஓவரிலேயே 69/3 ரன்கள் எடுத்த இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2023 ஐசிசி மகளிர் டி20 அண்டர்-19 உலக கோப்பையை வென்று சாதனை படைத்து மகளிர் கிரிக்கெட்டின் முதல் அண்டர் 19 சாம்பியனாக வரலாறு படைத்துள்ளது.

- Advertisement -

முன்னதாக ஆடவர் கிரிக்கெட்டில் 1983ஆம் ஆண்டு முதல் முறையாக உலக கோப்பையை வென்ற இந்தியா மகளிர் கிரிக்கெட்டில் இதுவரை ஒரு ஐசிசி கோப்பையை கூட வென்றதில்லை. குறிப்பாக மிதாலி ராஜ், ஹர்மன்ப்ரீத் கௌர் போன்ற ஜாம்பவான் வீராங்கனைகள் தலைமையில் சீனியர் கிரிக்கெட்டில் அதிகபட்சமாக ஃபைனல் வரை சென்று இந்தியா தோல்வியை சந்தித்தது.

ஆனால் மகளிர் கிரிக்கெட்டின் வருங்கால நட்சத்திரங்களை அடையாளப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த உலகக் கோப்பையின் முதல் வருடத்திலேயே சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஷபாலி வர்மா தலைமையிலான இளம் அணி சீனியர் வீராங்கனைகளுக்கே பாடம் எடுத்துள்ளது.

இதையும் படிங்க: நீங்க இப்படி பண்ணா ரசிகர்களும் ரோஹித்தை பத்தி தப்பா தான் நெனைப்பாங்க – அஷ்வின் வெளிப்படை

அதை விட இந்த வெற்றி மகளிர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்கு சவால் கொடுக்கும் வகையில் இந்தியாவின் வருங்காலம் பிரகாசமாக இருப்பதையும் இப்போதே காட்டியுள்ளது இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisement