இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் 5 சதங்கள் அடித்தும் பரிதாபமாக தோற்றது. அதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டி ஜூலை இரண்டாம் தேதி பர்மிங்காம் நகரில் துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 587 ரன்கள் குவித்து அமர்க்களப்படுத்தியது.
இந்திய அணிக்கு அபாரமாக விளையாடிய கேப்டன் சுப்மன் கில் இரட்டை சதத்தை அடித்து 269 ரன்கள் குவித்தார். அவருடன் ரவீந்திர ஜடேஜா 89, ஜெய்ஸ்வால் 87, வாஷிங்டன் சுந்தர் ரன்கள் அடித்து கை கொடுத்தனர். இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக சோயப் பசீர் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்தை சிறப்பாக பவுலிங் செய்த இந்தியா 407 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது.
இந்தியா அபாரம்:
அதிகபட்சமாக 303 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய ஹாரி ப்ரூக் 158, ஜேமி ஸ்மித் 184* ரன்கள் எடுத்தார்கள். இந்தியாவுக்கு சிராஜ் 6, ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்கள். அடுத்ததாக 180 ரன்கள் முன்னிலையுடன் விளையாடிய இந்தியா மீண்டும் சிறப்பாக பேட்டிங் செய்து 427/6 ரன்களை அடித்து டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.
அதிகபட்சமாக கேப்டன் கில் மீண்டும் சதத்தை அடித்து 161 ரன்கள் விளாசி நிறைய சாதனைகளைப் படைத்தார். அவருடன் ரிஷப் பண்ட் 65, ஜடேஜா 69*, ராகுல் 55 ரன்கள் அடித்து அசத்தினர். இறுதியில் 608 என்ற இமாலய இலக்கைத் துரத்திய இங்கிலாந்துக்கு ஜாக் கிராவ்லி ஆரம்பத்திலேயே சிராஜ் வேகத்தில் டக் அவுட்டானார். பென் டக்கெட் 25, ஓலி போப் 24, ஜோ ரூட் 6, ஹாரி ப்ரூக் 23 ரன்களில் ஆகாஷ் தீப் வேகத்தில் விக்கெட்டை இழந்தார்கள்.
வரலாறு காணாத வெற்றி:
மிடில் ஆர்டரில் நங்கூரத்தைப் போட முயற்சித்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 33 ரன்களில் வாஷிங்டன் சுந்தர் சுழலில் சிக்கினார். அதே போல ஜேமி ஸ்மித் இந்தியாவுக்கு மீண்டும் சவாலை கொடுத்து 88 ரன்கள் குவித்து போராடி அவுட்டானார். இறுதியில் பிரைடன் கார்ஸ் 37 ரன்கள் எடுத்தும் இங்கிலாந்தை 271க்கு சுருட்டிய இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதன் வாயிலாக பர்மிங்காம் எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் முதல் முறையாக ஒரு டெஸ்ட் போட்டியில் வென்று இந்திய அணி வரலாறு காணாத சாதனை சரித்திர வெற்றியைப் பெற்றுள்ளது. அம்மைதானத்தில் 1967 முதல் 2022 வரை 58 வருடங்களில் விளையாடிய 9 போட்டிகளில் இந்தியா 8 தோல்வியை சந்தித்தது. 1986இல் மட்டும் கபில் தேவ் தலைமையில் இந்தியா போராடி டிரா செய்தது.
இதையும் படிங்க: டெஸ்ட் கேப்டனாக தோனியின் சாதனையை முறியடித்த சுப்மன் கில்.. இதுவேறயா? – விவரம் இதோ
அந்த வகையில் இங்கிலாந்தின் கோட்டையாக இருந்து வந்த பர்மிங்காமமை சுப்மன் கில் தலைமையில் உடைத்துள்ள இளம் இந்திய அணி எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் மூவர்ணக் கொடியைப் பறக்க விட்டுள்ளது. அத்துடன் பர்மிங்காம் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் வென்ற முதல் ஆசிய அணி என்ற சரித்திரத்தையும் இந்தியா படைத்துள்ளது. இதற்கு முன் பாகிஸ்தானின், இலங்கை போன்ற அந்த ஆசிய அணியும் இங்கே வென்றது கிடையாது. அதனால் 1 – 1* (5) என்ற கணக்கில் தொடரை சமன் செய்து பஸ்பால் இங்கிலாந்துக்கு மாஸ் பதிலடி கொடுத்துள்ள இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஆகாஷ் தீப் 6 விக்கெட்டுகள் எடுத்தார்.