ஐசிசி 2025 மகளிர் உலகக் கோப்பையை இந்திய அணி சொந்த மண்ணில் முதல் முறையாக வென்று சாதனை படைத்தது. அதைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி தங்களது சொந்த மண்ணில் இலங்கைக்கு எதிராக 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றது. அந்தத் தொடரின் முதல் 2 போட்டிகளில் வென்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது.
அடுத்ததாக 3வது போட்டி டிசம்பர் 26ஆம் தேதி கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் இரவு 7.00 மணிக்கு நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை மகளிரணி மீண்டும் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் தடுமாற்றமாக விளையாடி 20 ஓவரில் 112/7 ரன்கள் மட்டுமே எடுத்தது.
தீப்தி உலக சாதனை:
அதிகபட்சமாக ஹாசினி பெரேரா 25, இமேஷா துலானி 27, கவிசா திலாரி 20 ரன்கள் எடுத்தார்கள். இந்தியாவுக்கு அதிகபட்சமாக ரேணுகா சிங் 4 தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளை சாய்த்தார்கள். இதையும் சேர்த்து இந்தியாவுக்காக தீப்தி சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 151* விக்கட்டுகளை சாய்த்துள்ளார். அதன் வாயிலாக மகளிர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீராங்கனை என்ற உலக சாதனையை தீப்தி சமன் செய்துள்ளார்.
இதற்கு முன் ஆஸ்திரேலியாவை சேர்ந்த நட்சத்திர வீராங்கனை மேகன் ஸ்கட்’டும் 151 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார். அது மட்டுமின்றி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை சாய்த்த இந்திய வீராங்கனை என்ற வரலாற்றையும் தீப்தி படைத்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. தீப்தி சர்மா: 20*
2. ஏக்தா பிஸ்த்: 19
3. பூனம் யாதவ்: 17
இந்தியா வெற்றி:
அடுத்ததாக 113 என்ற எளிய இலக்கைத் துரத்திய இந்தியாவுக்கு நம்பிக்கை நட்சத்திரம் ஸ்மிருதி மந்தனா 1 ரன்னில் கவிசா பந்தில் அவுட்டானார். ஆனால் மற்றொரு துவக்க வீராங்கனை ஷபாலி வெர்மா பட்டாசாக விளையாடி இலங்கை பவுலர்களை அடித்து நொறுக்கினார். மறுபுறம் வந்த ஜெமிமா ரோட்ரிகஸ் 9 (15) ரன்களில் கவிசா பந்தில் அவுட்டாகி சென்றார்.
இதையும் படிங்க: வெறும் 7 ரன்ஸ்.. உள்ளூரிலும் நாயகனான கிங் கோலி.. பண்ட் தலைமையில் டெல்லி த்ரில் வெற்றி
ஆனால் இந்தப் பக்கம் தொடர்ந்து அதிரடி காட்டிய ஷபாலி 24 பந்துகளில் அரை சதமடித்து இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தார். அவருடன் கைகோர்த்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் நிதானமாக விளையாடி 21* (18) ரன்கள் எடுத்தார். இறுதியில் கடைசி வரை அவுட்டாகாத ஷபாலி 11 பவுண்டரி 3 சிக்ஸருடன் 79* (42) ரன்களை விளாசி ஃபினிஷிங் செய்தார். அதனால் 13.2 ஓவரிலேயே 116/2 ரன்களை எடுத்த இந்திய மகளிரணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 3 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரையும் ஆரம்பத்திலேயே வென்றுள்ளது.



