இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அங்கு முதலாவதாக நடைபெற்ற டி20 தொடரை 3 – 2 (5) என்ற கணக்கில் வென்றது. அடுத்ததாக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி சௌதம்டன் நகரில் நடைபெற்றது. ஜூலை 16ஆம் தேதி நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து 50 ஓவரில் சிறப்பாக விளையாடி 258/6 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக எம்மா லேம்ப் 39, கேப்டன் நட் ஸ்கீவர் 41, சோபியா டுங்லி 83, டேவிட்சன் ரிச்சர்ட்ஸ் 53 ரன்கள் எடுத்து அசத்தினார்கள். இந்திய அணிக்கு அதிகபட்சமாக கிராந்தி கௌட் 2, ஸ்னே ராணா 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்கள்.
இந்தியா அசத்தல்:
அடுத்ததாக 259 ரன்களை துரத்திய இந்திய அணிக்கு 48 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ஸ்ம்ரிதி மந்தனா 28 ரன்களில் அவுட்டானார். அவருடன் சேர்ந்து விளையாடிய பிரதிகா ராவல் 36 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். 3வது இடத்தில் விளையாடிய ஹர்லின் தியோல் தடுமாற்றமாக பேட்டிங் செய்து 27 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அதே போல கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் 17 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்ததால் 124/4 என இந்தியா தடுமாறியது. அப்போது ஜோடி சேர்ந்த ஜெமிமா ரோட்ரிகஸ் மற்றும் தீப்தி சர்மா ஆகியோர் நங்கூரமாக விளையாடினார்கள். 5வது விக்கெட்டுக்கு 90 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடி இந்தியாவை சரிவிலிருந்து மீட்டெடுத்தது.
சாதனை சேசிங்:
அதில் ஜெமிமா அரை சதத்தை நழுவ விட்டு 48 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக வந்த ரிச்சா கோஸ் 10 ரன்னில் அவுட்டாகி சென்றார். இருப்பினும் மறுபுறம் சிறப்பாக விளையாடிய தீப்தி சர்மா அரை சதத்தை அடித்து 62* (64) ரன்கள் குவித்தார். இறுதியில் அமஞ்ஜோத் கௌர் 20* (14) ரன்களை எடுத்த உதவியுடன் ஓவரிலேயே 262/6 ரன்கள் எடுத்த இந்திய மகளிரணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 1 – 0* (3) கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
அத்துடன் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா தங்களுடைய அதிகபட்ச இலக்கை (259) வெற்றிகரமாக சேசிங் செய்து சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் 2022 ஹோவ் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 228 ரன்களை சேசிங் செய்ததே முந்தைய சாதனையாகும். அதே போல மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 6 அல்லது அதற்குக் கீழாக களமிறங்கி அதிகபட்ச ஸ்கோர் அடித்த வீராங்கனை என்ற சாதனையை தீப்தி சர்மா படைத்துள்ளார்.
இதையும் படிங்க: 8 விக்கெட்ஸ்.. இலங்கையை சொந்த மண்ணில் சாய்த்த வங்கதேசம் பதிலடி.. வரலாறு காணாத புதிய வெற்றி
இதற்கு முன் வேதா கிருஷ்ணமூர்த்தி மற்றும் ரிச்சா போஸ் தலா 52 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை. மறுபுறம் இங்கிலாந்துக்கு சார்லி டீன் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை எடுத்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.



