இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2024 உலகக் கோப்பை வெற்றியுடன் ஜாம்பவான் ராகுல் டிராவிட் பயிற்சிளர் பதவியிலிருந்து விடை பெற்றார். அதை தொடர்ந்து 2007 மற்றும் 11 உலகக் கோப்பைகளை இந்தியா வெல்ல முக்கிய பங்காற்றிய அனுபவத்தை கொண்ட கௌதம் கம்பீர் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து அவருடைய தலைமையில் இந்திய அணியில் கண்டிப்பாக சில மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வாருங்காலத்தை கருத்தில் கொண்டு சீனியர் வீரர்களை கம்பீர் கொஞ்சம் கொஞ்சமாக கழற்றி விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சொல்லப்போனால் அவருடைய அழுத்தத்தாலேயே விராட், ரோஹித், ஜடேஜா சீனியர்கள் உலகக்கோப்பை வென்ற கையுடன் ஒரே நாளில் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதாக ரசிகர்கள் நம்புகின்றனர்.
அஸ்வின் – ஷமி:
இந்நிலையில் 35 வயதை கடந்துவிட்ட முகமது ஷமி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரிடம் வருங்காலத்தைப் பற்றி கௌதம் கம்பீர் பேச வேண்டும் என பராஸ் மாம்ப்ரே தெரிவித்துள்ளார். ஏனெனில் சீனியர்கள் வெளியேறியதும் உடனடியாக இளம் வீரர்கள் உள்ளே வந்து அசத்தி விட முடியாது என்று அவர் கூறியுள்ளார். எனவே இப்போதே சீனியர்களுடன் சேர்ந்து இளம் வீரர்களை விளையாட வைத்து அனுபவத்தை கற்றுக் கொடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் விடைபெற்ற இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளரான பராஸ் மாம்ப்ரே இது பற்றி பேசியது பின்வருமாறு. “முகமது ஷமி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரிடம் அவர்களுடைய வருங்காலத் திட்டங்கள் பற்றி விவாதிப்பது மிகவும் முக்கியம். அந்த விவாதத்துக்கு பின் அவர்களால் தங்களுடைய வருங்காலம் பற்றி முடிவெடுக்க முடியும்”
“நாங்கள் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க முடிவெடுத்த போது அவர்கள் தனியாக இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்தோம். எனவே அர்ஷ்தீப், ஆவேஷ் கான் போன்ற பவுலர்கள் சீனியர் வீரர்களுடன் சேர்ந்து பந்து வீசுவதை நாங்கள் உறுதி செய்தோம். அதற்கான கால நேரத்தை உங்களால் வரையறுக்க முடியாது. அதற்கு நீங்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும்”
இதையும் படிங்க: கெளதம் கம்பீர் மாதிரி கேரக்டர் தான் சரி.. இல்லனா அவங்கள அடக்க முடியாது.. திசாரா பெரேரா பேட்டி
“இது போன்ற திட்டத்தை நாங்கள் 2015இல் கையிலெடுத்தோம். அதனுடைய முடிவு 2020இல் தான் எங்களுக்கு கிடைத்தது. எடுத்துக்காட்டாக 2018 அண்டர்-19 உலகக்கோப்பையில் அசத்திய அர்ஷ்தீப் சிங் 2024இல் முதன்மை பவுலராக வருவதற்கு முன்பு 2022 முதலே இந்திய அணிக்காக விளையாடி வந்தார். அந்த வகையில் ஒரு இளம் வேகப்பந்து வீச்சாளர் தனது உச்சத்தை தொடுவதற்கு 4 – 5 வருடங்களை எடுத்துக் கொள்வார்” என்று கூறினார்.



