இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அக்டோபர் 16ஆம் தேதி துவங்குகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போப்பை ஃபைனலுக்கு தகுதி பெற இத்தொடரில் வெற்றி பெறும் முனைப்புடன் 2 அணிகளும் களமிறங்குகின்றன. அதில் சமீபத்தில் இலங்கையில் 2 – 0 (2) என்ற கணக்கில் நியூசிலாந்து படுதோல்வியை சந்தித்தது.
எனவே அதிலிருந்து மீண்டெழுந்து இந்தியா மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெல்ல நியூசிலாந்து போராட உள்ளது. மறுபுறம் சமீபத்தில் வங்கதேசத்தை அடித்து நொறுக்கிய இந்தியா 2 – 0 (2) என்ற கணக்கில் வென்று நல்ல ஃபார்மில் இருக்கிறது. அதனால் இத்தொடரில் வென்று 12 வருடங்களாக சொந்த மண்ணில் போடும் வெற்றி நடையை இந்தியா தொடர முயற்சிக்கவுள்ளது.
வரலாற்று புள்ளிவிவரம்:
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் வரலாற்றில் 62 டெஸ்ட் போட்டிகளில் மோதியுள்ளன. அதில் இந்தியா 22 வெற்றிகளும் நியூசிலாந்து 13 வெற்றிகளும் பெற்றன. 27 போட்டிகள் டிராவில் முடிந்தன. இத்தொடர் நடைபெறும் இந்திய மண்ணில் இவ்விரு அணிகளும் 36 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் இந்தியா 17 வெற்றிகளை பெற்று வலுவான அணியாக உள்ளது. நியூசிலாந்து 2 வெற்றிகளை மட்டுமே பெற்றது. 17 போட்டிகள் டிராவில் முடிந்தன.
பெங்களூரு மைதானம்:
இத்தொடரின் முதல் போட்டி பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் காலை 9.30 மணிக்கு துவங்குகிறது. 1969ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டு தற்போது 40000 ரசிகர்கள் அமரும் வகையில் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ள இம்மைதானத்தில் 1974 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
அதில் 24 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 9 வெற்றிகளையும் 6 தோல்விகளையும் சந்தித்துள்ளது. 9 போட்டிகள் டிராவில் முடிந்தன. ஆனால் நியூசிலாந்துக்கு எதிராக இங்கு விளையாடிய 3 போட்டிகளிலும் இந்தியா 3 வெற்றிகளை பெற்றுள்ளது. இந்த மைதானத்தில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்துள்ள அணி இந்தியா: 626, பாகிஸ்தானுக்கு எதிராக, 2007
பிட்ச் ரிப்போர்ட்:
பெங்களூரு பிட்ச் முதல் 2 – 3 நாட்களில் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும். அதே சமயம் இம்முறை வானம் மேகமூட்டத்துடன் கூடிய மழை பெய்வதற்கான சூழ்நிலை காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்விங் செய்து தாக்கத்தை ஏற்படுத்தி விக்கெட்டுகளை எடுக்கலாம்.
இதையும் படிங்க: பெங்களூருவில் கொட்டும் மழை.. இந்தியா – நியூஸிலாந்து முதல் டெஸ்ட் நடக்குமா? வெதர் ரிப்போர்ட் இதோ
இருப்பினும் கடைசி 2 ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்தி வெற்றியைத் தீர்மானிப்பவர்களாக இருப்பார்கள். வரலாற்றில் இங்கு நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் 354, 324, 206, 174 என்பது சராசரி 4 இன்னிங்ஸ்களின் ஸ்கோராகும். இங்கே 10 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும் 5 முறை 2வதாக பேட்டிங் செய்த அணியும் வென்றுள்ளது. எனவே டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானிப்பது வெற்றியை கொடுக்கலாம்.



