வங்கதேசத்துக்கு எதிரான சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு எளிதாக தகுதி பெற இந்தத் தொடரில் இந்தியா வெற்றி பெறுவது அவசியமாகிறது. எனவே நல்ல ஃபார்மில் இருக்கும் இந்தியா சொந்த மண்ணில் நியூசிலாந்தை வீழ்த்த தயாராகியுள்ளது.
மறுபுறம் சமீபத்தில் இலங்கையில் 2 – 0 (2) என்ற கணக்கில் தோல்வியை சந்தித்த நியூஸிலாந்து அதிலிருந்து மீண்டெழுந்து இந்தியாவில் வெற்றி பெற போராட உள்ளது. அதனால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்தொடரின் முதல் போட்டி அக்டோபர் 16ஆம் தேதி பெங்களூருவில் துவங்க உள்ளது. ஆனால் பெங்களூருவில் மழை பெய்வதற்கு அதிகப்படியான வாய்ப்பு காணப்படுவதால் அப்போட்டி நடைபெறுமா என்பது சந்தேகமாக உள்ளது.
கொட்டும் மழை:
தற்போது தமிழ்நாடு, கர்நாடகா போன்ற தென் மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது. சொல்லப்போனால் தமிழ்நாட்டில் சென்னையில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்தளவுக்கு தென் மாநிலங்களில் இப்போதே லேசான மழை துவங்கியுள்ளது. அதற்கு விதிவிலக்காக இல்லாத பெங்களூரு நகரிலும் தற்போது ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
குறிப்பாக போட்டி நடைபெறும் எம் சின்னசாமி மைதானத்தை சுற்றிய பகுதிகளில் அக்டோபர் 16ஆம் தேதி 100% மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவிக்கிறது. அக்டோபர் 17ஆம் தேதி 80% மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது. அக்டோபர் 18ஆம் தேதி மட்டுமே 50 – 60% மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது. அக்டோபர் 19, 20 ஆகிய தேதிகளில் சராசரியாக 60% மழை பொழிவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
போட்டி சந்தேகமே:
அதனால் இந்தப் போட்டி முழுமையாக நடைபெறுவதற்கு வாய்ப்பில்லை என்றே சொல்லலாம். இருப்பினும் இந்தியாவில் இருப்பதிலேயே பெங்களூரு மைதானத்தில் மழை நின்றால் அரை மணி நேரத்தில் நீரை வெளியேற்றும் அளவுக்கு உச்சக்கட்ட நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளது. எனவே ஒரு மணி நேரம் மழை நின்றாலும் பெங்களூரு மைதானத்தில் போட்டி மீண்டும் துவங்க வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: உங்க மாதிரி ஃபிக்சிங் பண்ணலயே.. பும்ராவை கலாய்த்த பாகிஸ்தான் ரசிகரை நோஸ்கட் செய்த ஆகாஷ் சோப்ரா
அதனால் முடிந்தளவுக்கு மைதானப் பராமரிப்பாளர்கள் மழையை தாண்டி இப்போட்டியை நடத்துவதற்கு போராட உள்ளனர். இருப்பினும் 5 நாட்களும் 50% க்கும் மேற்பட்ட சராசரியில் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது. எனவே இயற்கையை மனிதர்களால் வெல்வது மிகவும் கடினம் என்றே சொல்லலாம். அதனால் இந்த போட்டி முழுமையாக நடைபெறுமா? முழுமையாக நடக்க இயற்கை அன்னை வழி விடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்



