இங்கிலாந்தை சாய்க்க ரோஹித் தலைமையில் தயாராகும் இந்தியாவின் பயிற்சி டெஸ்ட் போட்டி ! எங்கே, எப்போது, எதில் பார்க்கலாம் – முழுவிவரம்

Rohith
- Advertisement -

வரும் ஜூலை 1-ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் கடந்த வருடம் கிடப்பில் போட்டு வந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் இந்தியா களமிறங்குகிறது. கடந்த வருடம் சொதம்டன் நகரில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக தோற்ற பின் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்தை சந்தித்த விராட் கோலி தலைமையிலான இந்தியா முதல் 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை பெற்று அசத்தியது. நாட்டிங்காம் நகரில் துவங்கிய அந்த தொடரின் முதல் போட்டி இந்தியா வெற்றி பெறும் நிலையில் மழை வந்து குறுக்கிட்டதால் டிராவில் முடிந்தது.

அதைத் தொடர்ந்து லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2-வது போட்டியில் கேஎல் ராகுல் சதமடித்து 129 ரன்கள் எடுக்க பந்துவீச்சில் 2 இன்னிங்சிலும் முகம்மது சிராஜ் தலா 4 விக்கெட்டுகள் எடுத்ததால் இங்கிலாந்தை மடக்கிய இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது. ஆனால் லீட்ஸ் நகரில் நடந்த 2-வது போட்டியில் இந்தியாவை முதல் இன்னிங்சிலலேயே வெறும் 78 ரன்களுக்கு சுருட்டிய இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் வெறித்தனமான வெற்றியை பதிவு செய்து பதிலடி கொடுத்தது.

- Advertisement -

வெல்லப்போவது யார்:
அதனால் 1 – 1 என சமனடைந்த அந்த தொடரின் 4-வது போட்டியில் முதல் இன்னிங்சில் 191 ரன்களுக்கு சுருண்ட இந்தியா 2-வது இன்னிங்சில் ரோகித் சர்மாவின் 127 ரன்கள் அதிரடி சதத்தால் 157 ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் அற்புதமான வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றது. அப்போது கரோனா பரவல் ஏற்பட்டதையடுத்து அந்த தொடரை பாதியிலேயே நிறுத்திவிட்டு நாடு திரும்பிய இந்திய அணியினர் அதன்பின் ஐபிஎல் தொடரில் பங்கேற்றனர். அப்படி பாதியில் நின்று போன அந்த தொடர் இப்போது நிறைய மாற்றங்களுடன் மீண்டும் நடைபெற உள்ளது.

ஆம் அப்போது கேப்டன் விராட் கோலி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி என இருந்த இந்திய கூட்டணி இப்போது ரோகித் சர்மா – ராகுல் டிராவிட் என மாறியுள்ளது. அதேபோல் இங்கிலாந்து தரப்பிலும் ஜோ ரூட் – சில்வர்வுட் என இருந்த தலைமை இப்போது பென் ஸ்டோக்ஸ் – பிரண்டன் மெக்கலம் என அதிரடி கூட்டணியாக மாறியுள்ளது. இருப்பினும் ஏறக்குறைய அதே வீரர்கள் மீண்டும் இப்போட்டியில் மோதுவதால் இந்த போட்டியில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

- Advertisement -

இதில் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் பிரண்டன் மெக்கலம் உத்வேகத்தில் புதிய அவதாரம் எடுத்துள்ள இங்கிலாந்து தற்போது நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்றுவரும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 2 போட்டிகளில் அதிரடியான வெற்றிகளைப் பெற்று கடந்த வருடத்தை விட வலுவான அணியாக காட்சியளிக்கிறது. எனவே இந்தியாவுக்கு எதிரான கடைசி போட்டியில் வென்று சொந்த மண்ணில் இந்த தொடரை ட்ரா செய்து தலைநிமிர அந்த அணி போராட உள்ளது.

மறுபுறம் புதிய முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா முதல்முறையாக வெளிநாட்டில் இந்தப் போட்டியின் வாயிலாக இந்தியாவை வழி நடத்த உள்ளார். மேலும் கடைசியாக கடந்த 2007இல் தற்போதைய பயிற்சியாளர் டிராவிட் தலைமையில் 1 – 0 (3) என இங்கிலாந்தில் இந்தியா டெஸ்ட் தொடரை வென்றது. எனவே அவரது பயிற்சியில் ரோஹித் தலைமையில் விராட் கோலி கொண்டு வந்த முக்கால்வாசி வெற்றியை பினிஷிங் செய்து 15 வருடங்கள் கழித்து இங்கிலாந்து மண்ணில் வெற்றிக் கொடியை இந்தியா பறக்க விடுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

பயிற்சி போட்டி:
இந்த அனல் பறக்கப்போகும் போட்டிக்காக ஏற்கனவே இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணியினர் போட்டி நடைபெறும் பர்மிங்காம் நகரில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த போட்டிக்கு தயாராகும் வகையில் ஜூலை 23-ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு லீசெஸ்டர்ஷைர் கவுன்டி அணிக்கு எதிராக 4 நாட்கள் கொண்ட உள்ளூர் பயிற்சி டெஸ்ட் போட்டியில் இந்தியா களமிறங்குகிறது.

இங்கிலாந்தின் லெய்ஸ்ஸ்டர்ஷைர் நகரில் இருக்கும் கிரேஸ் ரோட் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியை ரசிகர்கள் தொலைக்காட்சியில் பார்க்க முடியாது என்றாலும் லெய்ஸ்ஸ்டர்ஷைர் போக்ஷெஸ் டிவி அதாவது லெய்ஸ்ஸ்டர்ஷைர் கவுன்டி அணியான அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் நேரலையாக இலவசமாக கண்டுகளிக்க முடியும்.

Advertisement