
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அண்டர்-19 கிரிக்கெட் அணி அங்கே 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டி ஜூன் 27ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 3.30 ஹோவ் நகரில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அண்டர் 19 அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அண்டர் 19 அணியை அபாரமாக பவுலிங் செய்த இந்தியா 42.2 ஓவரில் 174 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கியது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ராக்கி ப்ளின்டாஃப் 56, ஐசக் முஹம்மது 42 ரன்களை எடுத்தார்கள். பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா அண்டர் 19 அணிக்கு கணிசிக் சௌஹான் 3, முகமத் இனான் 2, ஹெனில் படேல் 2, அம்ரிஷ் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்கள்.
அடுத்ததாக 175 ரன்களை துரத்திய இந்தியா அண்டர் 19 அணிக்கு கேப்டன் ஆயுஷ் மாத்ரே நிதானமாக விளையாடினார். ஆனால் எதிர்ப்புறம் வைபவ் சூரியவன்சி பட்டாசாக விளையாடி இங்கிலாந்து பவுலர்களை அடித்து நொறுக்கினார். கடந்த ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த அவர் குஜராத்துக்கு எதிராக 35 பந்தில் சதத்தை அடித்தார்.
சிஎஸ்கே அணிக்கு எதிரான கடைசிப் போட்டிகளிலும் அசத்திய அவர் தற்சமயத்தில் நல்ல ஃபார்மில் இருக்கிறார். அதே வேகத்தில் இந்த போட்டியிலும் இங்கிலாந்து பவுடர்களை புரட்டி எடுத்த சூர்யவன்சி 3 பவுண்டரி 5 சிக்சர்களை பறக்க விட்டார். அதனால் அரை சதத்தை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் 19 பந்தில் 48 ரன்களை 252.63 ஸ்ட்ரைக் ரேட்டில் அவுட்டானார்.
அவருடன் சேர்ந்து 70 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ஆயுஸ் 21 (30) ரன்களில் அவுட்டானார். மிடில் ஆர்டரில் விகான் மல்கோத்ரா 18, மௌலியராஜ் சிங் சவ்டா 16 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றத்தைக் கொடுத்தனர். ஆனால் அபிக்யான் குண்டு அதிரடியாக 45* (34) ரன்கள் எடுத்தார். அவருடன் ராகுல் குமார் 17* (25) ரன்கள் எடுத்ததால் 24 ஓவரிலேயே 178/4 ரன்களை எடுத்த இந்தியா அண்டர் 19 அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: எங்க ஆளையே ரசிக்க வைத்த சைன்ஸ் பைத்தியம் ரிஷப் பண்ட்.. கில்கிறிஸ்ட், தோனி மாதிரி.. மைக்கேல் வாகன்
அதனால் 1 – 0* (5) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே இந்திய அண்டர்-19 அணி முன்னிலை பெற்றுள்ளது. ஐபிஎல் தொடரில் அசத்திய சூரியவன்சி இந்தியாவுக்காகவும் அதிரடியாக விளையாடி அனைவருக்கும் கவனத்தை ஈர்த்ததுடன் தம்மை வருங்கால நம்பிக்கையை நட்சத்திரமாக அடையாளப்படுத்தியுள்ளார். இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக ஃஏஎம் பிரன்ச் 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.