ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அண்டர்-19 கிரிக்கெட் அணி அங்கு 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அந்தத் தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியது. அதை அடுத்து சம்பிரதாய கடைசிப் போட்டி செப்டம்பர் 27ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் இருக்கும் இயன் ஹீலி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து ஆட்டத்தை துவங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ஆயுஷ் மாத்ரே 4, வைபவ் சூர்யவன்சி 16 ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அடுத்ததாக வேதாந் திரிவேதி – விகான் மல்கோத்ரா ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடினர்.
இளம் இந்தியா அசத்தல்:
3வது விக்கெட்டுக்கு 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடியில் விஹான் மல்கோத்ரா 40 (52) ரன்கள் குவித்து விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த ராகுல் குமார் சிறப்பாக விளையாடிய நிலையில் எதிர்புறம் அசத்திய திரிவேதி அரை சதத்தை அடித்தார். 4வது விக்கெட்டுக்கு 99 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடியில் திரிவேதி அரை சதத்தை அடித்து 86 (92) ரன்கள் குவித்து அவுட்டானார்.
அடுத்து வந்த ஹர்வன்ஸ் பங்காலியா 23 (19) ரன்கள் விளாசி அவுட்டான நிலையில் மறுபுறம் அசத்திய ராகுல் குமார் தம்முடைய பங்கிற்கு 62 (84) ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார். இறுதியில் கிளன் படேல் அதிரடியாக 20* (11) ரன்கள் எடுத்த உதவியுடன் 50 ஓவரில் இந்தியா அண்டர் 19 அணி 280/9 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணிக்கு அதிகபட்சமாக வில் பைரோம் 3, கேசி பார்டன் 3 விக்கெட்டுகள் எடுத்தார்கள்.
ஆஸியில் ஒய்ட்வாஷ் வெற்றி:
அடுத்ததாக 281 ரன்களை துரத்திய ஆஸ்திரேலிய அண்டர்-19 அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாட முடியாமல் திண்டாடியது. அந்தளவுக்கு நேர்த்தியாக பந்து வீசிய இளம் இந்திய பவுலர்கள் 28.3 ஓவரில் 113 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணியை ஆல் அவுட்டாக்கினர். அதிகபட்சமாக அலெக்ஸ் டர்னர் 32, டாம் ஹோகன் 28 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணிக்கு கிளன் படேல் 4, உதவ் மோகன் 3, கனிஸ்க் சௌஹான் 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
இதையும் படிங்க: இந்த ஆசிய கோப்பை தொடரில் நம்ம பிளேயர்ஸ் நிறைய கேட்ச் விட இதுவே காரணம் – வருண் சக்ரவர்த்தி
அதனால் 167 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்ற இந்தியா அண்டர்-19 அணி 3 – 0 (3) என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை அதனுடைய சொந்த மண்ணில் ஒய்ட்வாஷ் செய்து கோப்பையை வென்றது. கடந்த மாதம் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற தொடரையும் ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அண்டர்-19 அணி 4 – 1 (5) என்ற கணக்கில் வென்றது. தற்போது ஆஸ்திரேலிய மண்ணிலும் வென்றுள்ள இளம் அணி இந்திய கிரிக்கெட்டின் வளமான வருங்காலத்திற்கு ஆணிவேராக வளர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.



