IND vs BAN : பேட்டிங்கை விட பந்து வீச்சில் மாஸ் காட்டும் இந்தியா, மீண்டும் சவாலை கொடுக்கும் தனி ஒருவன் – 2வது நாள் ஸ்கோர் இதோ

Shubman Gill
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்கும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 14ஆம் தேதியன்று சட்டோகிராம் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை பைனலுக்கு செல்ல இத்தொடரை வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ள இந்தியா நேற்று துவங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு சுப்மன் கில் 20, கேப்டன் கேஎல் ராகுல் 22 என தொடக்க வீரர்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் விராட் கோலி 1 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.

அதனால் 48/3 என்ற தடுமாற்றமான தொடக்கத்தை பெற்ற இந்தியாவை அடுத்து களமிறங்கி புஜாாராவுடன் இணைந்து 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ரிஷப் பண்ட் தமக்கே உரித்தான அதிரடி பாணியில் 46 (45) ரன்களை விளாசி ஆட்டமிருந்தார். அவருக்கு பின் வந்த ஸ்ரேயாஸ் ஐயர் நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்தி புஜாராவுடன் கை கோர்த்து 5வது விக்கெட்டுக்கு 149 ரன்கள் பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை தூக்கி நிறுத்தினார். அதில் அரைசதம் கடந்து நங்கூரமாக பேட்டிங் செய்த புஜாரா துரதிஷ்டவசமாக 10 பவுண்டரியுடன் சதமடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டு 90 ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

மிரட்டும் இந்தியா:
அடுத்து வந்த அக்சர் பட்டேல் 14 ரன்களில் அவுட்டானாலும் முதல் நாளில் 278/6 ரன்கள் சேர்த்திருந்த இந்தியாவுக்கு 82* ரன்களுடன் களத்தில் இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் இன்று துவங்கிய 2வது நாளில் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் நாளில் பெய்ல்ஸ் விழாத அதிர்ஷ்டத்தை வீணடிக்கும் வகையில் 10 பவுண்டரியுடன் 86 ரன்களில் அவுட்டான அவருடன் களமிறங்கிய ரவிச்சந்திரன் அஷ்வின் அடுத்து வந்த குல்தீப் யாதவுடன் இணைந்து வங்கதேசத்துக்கு தொல்லை கொடுத்தார். 8வது விக்கெட்டுக்கு முக்கியமான 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடி இந்தியாவை 400 ரன்கள் கடக்க உதவிய போது 58 (113) ரன்கள் குவித்து அஷ்வின் அவுட்டானார்.

அவருடன் தனது பங்கிற்கு அசத்திய குல்தீப் யாதவ் 40 ரன்களில் அவுட்டாக இறுதியில் உமேஷ் யாதவ் 15* (10) ரன்கள் எடுத்த போதிலும் சிராஜ் 4 ரன்னில் ஆட்டமிழந்தால் இந்தியா முதல் இன்னிங்ஸில் 404 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக தைஜூல் இஸ்லாம் மற்றும் மெஹதி ஹசன் ஆகியோர் தலா 4 விக்கெட் சாய்த்தனர். அதை தொடர்ந்து முதல் இன்னிசை தொடங்கிய வங்கதேசத்துக்கு முதல் பந்திலேயே சாண்டோவை அவுட்டாக்கி சிராஜ் அதிர்ச்சி கொடுத்த நிலையில் அடுத்து வந்த யாசிர் அலியை 4 ரன்களில் போல்டாக்கி உமேஷ் யாதவ் மேலும் அதிர்ச்சி கொடுத்தார்.

- Advertisement -

அதனால் 5/2 என்ற மோசமான தொடக்கத்தை பெற்ற அந்த அணிக்கு அனுபவத்தை காட்ட வேண்டிய லிட்டன் தாஸ் அதிரடியாக விளையாட முயன்று 24 ரன்களிலும் அறிமுகப் போட்டியில் நிதானத்தை காட்ட முயன்ற ஜாகிர் ஹுசைன் 20 ரன்களிலும் சிராஜிடம் ஆட்டமிழந்தனர். அதனால் மேலும் சரிந்த அந்த அணியை பொறுப்புடன் காப்பாற்ற வந்த அனுபவ வீரர் சாகிப் அல் ஹசனை 3 ரன்களில் காலி செய்த ஸ்பின்னர் குல்தீப் யாதவ் நுருள் ஹசனை 16 ரன்களில் அவுட்டாக்கி அதிர்ச்சி கொடுத்தார்.

அதை விட மற்றொரு புறம் நங்கூரத்தை போட முயன்ற அனுபவ வீரர் முஸ்பிக்கர் ரஹீமையும் 28 ரன்களில் காலி செய்த அவர் டைஜுல் இஸ்லாமையும் டக் அவுட்டாக்கி வங்கதேசத்தின் பாதி கதையை முடித்தார். இருப்பினும் 102/8 என சுருண்ட அந்த அணியை நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரில் தனி ஒருவனாக தண்ணி காட்டி இந்தியாவை தோற்கடித்த மெஹதி ஹசன் டெயில் எண்டருடன் மீண்டும் கை கொடுத்து சவால் கொடுக்கும் வகையில் பேட்டிங் செய்து வருகிறார்.

- Advertisement -

இதர பேட்ஸ்மேன்களை விட நங்கூரமாக காட்சியளிக்கும் அவர் 16* (35) ரன்களும் எபோதத் ஹாசன் 13* (27) ரன்களும் எடுத்த போது 2வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. தற்போது நிலைமையில் வங்கதேசம் 133/8 ரன்களை எடுத்து இந்தியாவை விட 271 ரன்கள் வித்தியாசத்தில் பின் தங்கியுள்ளது.

இதையும் படிங்க: வீடியோ : என்னை மன்னிச்சுடுங்க டிராவிட், 25 வருட பழைய நிகழ்வுக்காக வருந்திய ஆலன் டொனால்ட் – டிராவிட் பதில் என்ன

நாளை மெஹதி ஹசனை விரைவாக அவுட்டாக்க வேண்டிய இந்தியா 200 ரன்களுக்கு மேல் முன்னிலை பெறும் பட்சத்தில் இப்போட்டியில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகிவிடும். அதை தற்போது வரை அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் எடுத்துள்ள குல்தீப் யாதவ் மற்றும் 3 விக்கெட் எடுத்துள்ள முகமது சிராஜ் ஆகியோர் சாத்தியமாக்கி காட்டுவார்கள் என்று நம்பலாம்.

Advertisement