என்னை மன்னிச்சுடுங்க டிராவிட், 25 வருட பழைய நிகழ்வுக்காக வருந்திய ஆலன் டொனால்ட் – டிராவிட் பதில் என்ன

Rahul Dravid Allan Donald
- Advertisement -

சர்வதேச அரங்கில் முதன்மை அணிகளில் ஒன்றாக ஜொலிக்கும் தென் ஆப்பிரிக்கா ஐசிசி தொடர்களில் சொதப்பினாலும் இதர நாட்களில் ஆஸ்திரேலியா போன்ற டாப் அணிகளை தெறிக்க விடும் செயல்பாடுகளை வெளிப்படுத்துவது வழக்கமாகும். குறிப்பாக 90களின் இறுதியில் அந்த அணியில் விளையாடிய அத்தனை வீரர்களுமே ஜாம்பவான்களாக உருவாகும் அளவுக்கு தரமானவர்களாக எதிரணிகளை தெறிக்க விட்டார்கள் என்று சொல்லலாம். அந்த தரமான வீரர்களில் வேகப்பந்து வீச்சாளர் ஆலன் டொனால்ட் ஒருவர் ஆவார். 1991 முதல் 2003 வரை சர்வதேச அரங்கில் விளையாடிய அவர் 330 டெஸ்ட் விக்கெட்டுகளையும் 272 ஒருநாள் விக்கெட்டுகளையும் எடுத்து தென்னாபிரிக்காவின் நிறைய சரித்திர வெற்றிகளில் பங்காற்றியுள்ளார்.

அதை விட தனது வேகத்தால் உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்களையும் திணறடித்த அவர் ஒரு முறை இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் ஆதர்டனை தனது அசர வேகத்தால் திணறடித்ததை யாராலும் மறக்க முடியாது. அதே போல் சச்சின் டெண்டுல்கர் உட்பட இந்திய வீரர்களுக்கு எதிராவும் சவாலாகவே செயல்பட்டுள்ள அவர் ஸ்லெட்ஜிங் செய்து விக்கெட்டுகளை எடுப்பதிலும் கில்லாடியாக திகழ்ந்தார். இந்நிலையில் 1997ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு போட்டியில் இந்திய முன்னாள் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் மற்றும் தற்போதைய பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டை மிகவும் மோசமாக ஸ்லெட்ஜிங் செய்து விக்கெட் எடுத்ததற்காக ஆலன் டொனால்ட் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுள்ளார்.

- Advertisement -

மன்னிச்சுடுங்க டிராவிட்:

கடந்த 1997ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் இந்தியா அணிகள் மோதிய முத்தரப்பு ஒருநாள் தொடர் நடைபெற்றது. அதில் அசத்தலாக செயல்பட்ட தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகள் மோதவிருந்த ஃபைனல் மழையால் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் ரிசர்வ் நாளில் மீண்டும் நடைபெற்ற அப்போட்டியில் கேரி கிறிஸ்டன் 51, குல்லினன் 60, ஜான்டி ரோட்ஸ் 41, காலிஸ் 49 ஆகியோரது பொறுப்பான ரன் குவிப்பால் தென்னாப்பிரிக்கா 278/8 ரன்கள் சேர்த்தது.

அதை துரத்தும் போது மழை குறுக்கிட்டதால் 40 ஓவரில் 252 என்ற புதிய இலக்கை துரத்திய இந்தியாவுக்கு கங்குலி ஆரம்பத்திலேயே அவுட்டானாலும் சச்சின் – டிராவிட் ஆகியோர் அதிரடியாக ரன்களை சேர்த்தனர். அதில் குறிப்பாக டொனாலட் உட்பட தென்னாப்பிரிக்க பவுலர்களை வெளுத்து வாங்கிய டிராவிட் 84 (94) ரன்கள் குவித்த போதிலும் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இருப்பினும் ஆட்டநாயகன் விருது வென்ற ராகுல் டிராவிட்டை ஒரு கட்டத்தில் மோசமாக ஸ்லெட்ஜிங் செய்து அவுட்டாக்கிய டொனால்ட் அது என்னவென்று வெளியே சொல்ல முடியாது என்றாலும் அதற்காக தற்போது மன்னிப்பு கேட்டுள்ளார்.

- Advertisement -

குறிப்பாக அப்போது வீரர்களாக மோதிக்கொண்ட அவர்கள் தற்போது இந்தியா மற்றும் வங்கதேச அணிகளின் பயிற்சியாளர்களாக மோதிக்கொள்ளும் நிலையில் சட்டோகிராம் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இது பற்றி டொனால்ட் பேசியது பின்வருமாறு. “டர்பன் மைதானத்தில் நடந்த ஒரு மோசமான நிகழ்வை பற்றி நான் பேச விரும்பவில்லை. அப்போட்டியில் அவரும் சச்சின் டெண்டுல்கரும் எங்களை அடித்து நொறுக்கினார்கள். அப்போது ஒரு தருணத்தில் நான் வரம்பு மீறி விட்டேன்”

“இருப்பினும் ராகுல் மீது நான் பெரிய மரியாதை வைத்திருக்கிறேன். அதனால் தற்போது அவருடன் பயணித்து அமைதியான சூழ்நிலையில் அமர்ந்து அந்த நாளில் என்ன நடந்ததோ அதற்காக மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். அந்த சமயத்தில் நான் ஒரு வெறுக்கத் தகுந்தவற்றை செய்து அவருடைய விக்கெட்டை எடுத்தேன். ஆனால் அன்றைய நாளில் நான் சொன்ன அந்த வார்த்தைகளுக்காக இன்று மன்னிப்பு கேட்கிறேன். அவர் அற்புதமான மனம் கொண்டவர். ராகுல் டிராவிட் இதை நீங்கள் கேட்டால் உங்களுடன் ஒரு இரவு மனம் விட்டு பேச நான் விரும்புகிறேன்” என்று கூறினார்.

இதையும் படிங்க: IND vs BAN : அசத்திய அஷ்வின் ஜோடி, பெரிய ஸ்கோர் குவித்து பந்து வீச்சில் மிரட்டும் இந்தியா – தேனீர் இடைவேளை நிலவரம் இதோ

அவர் பேசிய வீடியோவை சோனி ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ராகுல் டிராவிட்டுக்கு போட்டு காட்டியது. அதைப் பார்த்து மனமுவந்த ராகுல் டிராவிட் பழையவற்றை எதையுமே மனதில் வைக்காமல் நகைச்சுவையாக பதிலளித்தது பின்வருமாறு. “கண்டிப்பாக உங்களை சந்திக்க நானும் காத்திருக்கிறேன். குறிப்பாக அந்த இரவு டின்னருக்கு நீங்கள் பணம் கொடுக்க விரும்பினால் நிச்சயம் நாம் சந்திக்கலாம்” என்று கலகலப்பாக பதிலளித்தார். ஒரு காலத்தில் வீரர்களாக நாட்டுக்காக மோதிக் கொண்ட டொனால்ட் தற்போது பயிற்சிளாக 25 வருடங்கள் கழித்து ராகுலிடம் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுள்ளது உண்மையாகவே பாராட்டத்தக்கதாகும்.

Advertisement