
ஐசிசி 2025 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் உச்சகட்டத்தை தொட்டுள்ளது. அந்தத் தொடரில் இலங்கை மற்றும் பாகிஸ்தானை தோற்கடித்த இந்திய அணி தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்திடம் ஹாட்ரிக் தோல்வியை சந்தித்தது. இருப்பினும் நியூசிலாந்துக்கு எதிரான வாழ்வா – சாவா போட்டியில் இந்தியா அபார வெற்றி கண்டது.
அதனால் சொந்த மண்ணில் செமி ஃபைனலுக்கு தகுதி பெற்று இந்தியா நிம்மதி பெருமூச்சு விட்டது. அந்த நிலையில் இந்தியா தங்களது கடைசி லீக் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொண்டது. அக்டோபர் 26ஆம் தேதி நவி மும்பையில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசம் தடுமாற்றமாக பேட்டிங் செய்து 27 ஓவரில் 119/9 ரன்கள் எடுத்த போது மழை வந்ததால் போட்டி நிறுத்தப்பட்டது. அதிகபட்சமாக சர்வின் அக்தர் 36, சோபனா மோஸ்ட்ரே 26 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ராதா யாதவ் 3, ஸ்ரீ சரிணி 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அடுத்ததாக இந்தியா வெற்றி பெற 27 ஓவரில் 126 ரன்கள் தேவை என்ற புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
அதைத் துரத்திய இந்திய அணிக்கு மந்தானா 34*, அமன்ஜோத் கௌர் 15* ரன்களை எடுத்தனர். அப்போது இந்தியா 57/0 ரன்களுடன் மீண்டும் மழை வந்ததால் போட்டி ரத்து செய்யப்பட்டது. அதனால் இரு அணிக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்து கொடுக்கப்பட்டது. இதையும் சேர்த்து 7 போட்டிகளில் 3 வெற்றிகளைப் பெற்ற இந்தியா 7 புள்ளிகளுடன் 4வது இடத்தைப் பிடித்தது.
அதனால் செமி ஃபைனலில் தோல்வியே சந்திக்காமல் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியா அணியை இந்தியா எதிர்கொள்கிறது. அது இந்திய ரசிகர்களிடம் மிகப்பெரிய கலக்கத்தை உண்டாக்கியுள்ளது. ஏனெனில் மகளிர் கிரிக்கெட்டில் அசுரனாக கருதப்படும் ஆஸ்திரேலியா 7 முறை உலகக் கோப்பைகளை வென்று சாதனை படைத்துள்ளது.
அப்படிப்பட்ட ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மகளிர் உலகக் கோப்பையில் விளையாடிய 14 போட்டிகளில் இந்தியா 11 தோல்விகளை சந்தித்துள்ளது. வெறும் 3 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. 2025 உலகக் கோப்பையில் இந்தியா அடித்த 330 ரன்களை அசால்டாக சேசிங் செய்த ஆஸ்திரேலியா உலக சாதனை வெற்றி பெற்றது. அப்படிப்பட்ட வலுவான ஆஸ்திரேலியாவைத் தாண்டி இந்தியா ஃபைனல் செல்வது சிம்ம சொப்பனமாக இருக்கும் என்றே சொல்லலாம்.
இதையும் படிங்க: எப்படா வீட்டுக்கு அனுப்பலாம்ன்னு பாத்தவங்களுக்கு பதிலடி கொடுத்த.. விராட், ரோஹித் தெ.ஆ’வில் தேவை.. ஃகைப் பேட்டி
அதனால் சொந்த மண்ணில் இந்தியா உலகக் கோப்பையை வெல்லும் கனவு உடைகிறதா? என்று இந்திய ரசிகர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இருப்பினும் 2017 மகளிர் உலகக் கோப்பையின் செமி ஃபைனலில் ஹர்மன்ப்ரீத் கௌர் 171 ரன்கள் அடித்து ஆஸ்திரேலியாவை தனியாளாக சாய்த்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். அது போல இம்முறையும் ஆஸ்திரேலியாவை வீழ்த்த இந்தியாவுக்கு யாராவது மேஜிக் செய்ய வேண்டும் என்று குறிப்பிடத்தக்கது.