சந்திரமுகி பங்களா போல இந்தியாவை காலம் காலமாக மிரட்டும் நியூலேண்ட்ஸ் மைதானம்.. காரணம் என்ன?

Newlands Stadium India
- Advertisement -

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்யாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது. அதனால் தென்னாப்பிரிக்க மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்ற கனவை நிஜமாக்க தவறிய இந்தியா குறைந்தபட்சம் தோல்வியை தவிர்க்க 2வது போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது.

இதைத்தொடர்ந்து இத்தொடரின் 2வது போட்டி ஜனவரி 3ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் இருக்கும் நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. பின்பகுதிகளில் மலைத்தொடர்களை கொண்ட இந்த மைதானம் உலகிலேயே ரசிகர்கள் மனம் கவர்ந்த அழகிய மைதானங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது.

- Advertisement -

சந்திரமுகி நியூலேண்ட்ஸ்:
ஆனால் அழகு உள்ள இடத்தில் ஆபத்து இருக்கும் என்று சொல்வது போல் இந்த மைதானம் இந்தியாவுக்கு காலம் காலமாக பெரிய சவாலை கொடுத்து வருகிறது என்றே சொல்லலாம். ஏனெனில் இங்கு முதல் முறையாக கடந்த 1993ஆம் ஆண்டு முகமது அசாருதீன் தலைமையில் களமிறங்கிய இந்தியா கடுமையாக போராடியும் வெற்றி காண முடியாமல் டிராவை மட்டுமே சந்தித்தது.

அதன் பின் 1997ஆம் ஆண்டு இங்கே 2வது முறையாக விளையாடிய போட்டியில் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் 169 ரன்கள் குவித்து போராடியும் தென் ஆப்பிரிக்காவுக்கு ஈடு கொடுக்க முடியாத இந்தியா 2வது இன்னிங்ஸில் 144 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 282 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. அதைத்தொடர்ந்து 2007ஆம் ஆண்டு இப்போதைய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தலைமையில் விளையாடிய இந்தியாவை கிரேம் ஸ்மித் தலைமையிலான தென்னாப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக தோற்கடித்தது.

- Advertisement -

இருப்பினும் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் எம்எஸ் தோனி தலைமையிலான இந்தியா கடுமையாக போராடி டிரா செய்தது. ஆனால் 2018 மற்றும் 2022 ஆகிய வருடங்களில் இங்கு நடைபெற்ற போட்டியில் மகத்தான விராட் கோலி தலைமையிலான இந்தியா முறையே 72 ரன்கள் மற்றும் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இதையும் படிங்க: 166 ரன்ஸ்.. வலுவான ஆப்கானிஸ்தானை தோற்கடித்த யூஏஈ.. சாதனை வெற்றியுடன் பதிலடி

மொத்தத்தில் இந்த மைதானத்தில் இதுவரை விளையாடிய 6 டெஸ்ட் போட்டிகளில் 4 தோல்விகளை பதிவு செய்த இந்தியா 2 முறை போராடி டிரா செய்துள்ளது. 20 வருடங்களாகியும் ஒரு முறை கூட வெற்றி காண முடியவில்லை. அந்த வகையில் பிரபல தமிழ் திரைப்படமான சந்திரமுகியில் வரும் பேய் பங்களாவை போல மிரட்டி வரும் இம்மைதானத்தில் இம்முறையாவது இந்தியா சாதிக்குமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Advertisement