
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் விளையாடும் 2024 – 25 பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் வரும் நவம்பர் மாதம் துவங்குகிறது. கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய 2 தொடர்களையும் முதல் முறையாக வென்ற இந்தியா இம்முறை ஹாட்ரிக் வெற்றியை பெறும் முனைப்புடன் விளையாட உள்ளது. இந்நிலையில் அந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ரோஹித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள அந்த அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முகமது ஷமி தேர்வு செய்யப்படவில்லை. கடந்த உலகக் கோப்பையில் சந்தித்த காயத்துக்காக அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் ஒரு வருடமாகியும் இன்னும் விளையாடவில்லை. இருப்பினும் இந்த தொடரில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் இன்னும் முழுமையாக குணமடைந்து உள்ளூர் போட்டிகளில் கூட விளையாடவில்லை.
அதனால் ஷமி ஆஸ்திரேலிய தொடரில் தேர்ந்தெடுக்கப்படவில்லை. ரோகித் சர்மாவுடன் ஜெய்ஸ்வால் துவக்க வீரராகவும் அபிமன்யு ஈஸ்வரன் பேக்-அப் துவக்க வீரராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சுப்மன் கில், விராட் கோலி, சுமாரான ஃபார்மில் இருக்கும் கேஎல் ராகுல் ஆகியோர் ஆஸ்திரேலியாவில் விளையாட தேர்வாகியுள்ளனர். அதே போல நியூசிலாந்து தொடரில் அசத்திய இளம் வீரர் சர்பராஸ் கானும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
விக்கெட் கீப்பர்களாக ரிஷப் பண்ட், துருவ் ஜூரேல் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டர்களாக தமிழக வீரர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவீந்திர ஜடேஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். ஆனால் அக்சர் பட்டேல் தேர்ந்தெடுக்கப்படாதது ஆச்சரியமாக அமைந்துள்ளது.
குல்தீப் யாதவ் காயத்தால் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல சர்துல் தாக்கூர் போன்ற வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை. மாறாக சமீபத்திய வங்கதேச டி20 தொடரில் அசத்திய நித்திஷ் ரெட்டி தேர்வாகியுள்ளார். பும்ரா, சிராஜ், ஷமிக்கு பதிலாக ஆகாஷ் தீப் ஆகியோர் வேகபந்து வீச்சு துறையில் தேர்வாகியுள்ளனர். 2024 – 25 ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி:
இதையும் படிங்க: எமெர்ஜிங் ஆசிய கோப்பை: 20 ரன்ஸ்.. இந்தியாவை வீட்டுக்கு அனுப்பிய ஆப்கானிஸ்தான்.. ஃபைனலில் மோதுவது யார்?
ரோஹித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), யசஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், சுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் (கீப்பர்), துருவ் ஜூரேல் (கீப்பர்), சர்பராஸ் கான், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, நித்திஷ் குமார், வாஷிங்டன் சுந்தர்
ரிசர்வ் வீரர்கள்: முகேஷ் குமார், நவ்தீப் ஷைனி, கலீல் அகமது