இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் அக்டோபர் 16ஆம் தேதி பெங்களூருவில் துவங்கியது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெற அத்தொடரில் வெல்லும் முனைப்புடன் இந்தியா விளையாடுகிறது. இருப்பினும் நேற்று துவங்கிய முதல் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது.
ஆனால் இன்று மழைக் கருணை காட்டியதால் போட்டி கொஞ்சம் முன்னதாகவே துவங்கியது. அதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். குறிப்பாக மழையால் முதல் நாள் முழுவதும் பிட்ச் தார்பாய் கொண்டு மூடப்பட்டிருந்ததாக ரோகித் சர்மா தெரிவித்தார். அது ஆரம்பத்தில் சவாலை கொடுத்தாலும் பின்னர் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருக்கலாம் என்று ரோஹித் கூறினார்.
2 மாற்றம்:
அதே போல இந்திய அணியில் சுப்மன் கில் மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் விளையாடவில்லை என்று ரோஹித் சர்மா அறிவித்தார். சுப்மன் கில் பயிற்சி எடுக்கும் போது கழுத்தில் காயத்தை சந்தித்ததாக செய்திகள் வெளியாகின. எனவே அவருக்கு பதிலாக சர்பராஸ் கான் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டது. அதே போல பெங்களூரு பிட்ச் நாட்கள் செல்ல செல்ல சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால் ஆகாஷ் தீப்புக்கு பதிலாக குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்படுவதாக ரோகித் சர்மா அறிவித்தார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய உள்ளோம். பிட்ச் தார்பாய்க்கு கீழே இருந்தது. ஆரம்பத்தில் அது கொஞ்சம் சவாலாக இருக்கும் என்று நாங்கள் புரிந்து கொள்கிறோம். ஆனால் இந்த பிட்ச்சில் இயற்கையாக நீங்கள் பேட்டிங் செய்து பெரிய ரன்கள் எடுக்க விரும்புவீர்கள்”
இந்திய அணி:
“நீங்கள் விரும்பும் முடிவை பெற விரும்புவீர்கள். நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் பார்க்க வேண்டும். கடந்த சில டெஸ்ட் போட்டிகளில் நாங்கள் சிறப்பாக விளையாடினோம். இது புதிய தொடர் என்பதால் புத்துணர்ச்சியாக துவங்க விரும்புறோம். சுப்மன் கில், ஆகாஷ் ஆகியோருக்கு பதிலாக சர்பராஸ், குல்தீப் ஆகியோர் அணிக்குள் வருகிறார்கள்” என்று கூறினார்.
இதையும் படிங்க: உண்மையான பேன்ஸ் இருக்குற ஐ.பி.எல் டீம்னா அது அந்த டீம் தான் – ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்து
இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), யசஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல் ராகுல், விராட் கோலி, சர்பராஸ் கான், ரிஷப் பண்ட் (கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்ப்ரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ்.



