
இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா தங்களது சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றது. கொல்கத்தாவில் துவங்கிய அந்த தொடரின் முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த நிலையில் இந்த தொடரின் இரண்டாவது போட்டி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இருக்கும் எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் ஜனவரி 25ஆம் தேதி இரவு 7 மணிக்கு துவங்கியது.
அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தார். இந்திய அணியில் நித்திஷ் ரெட்டி காயத்தை சந்தித்ததால் இந்தப் போட்டியில் விலகுவதாகவும் அவர் அறிவித்தார். அதே போல ரிங்கு சிங் லேசான காயத்தை சந்தித்ததால் இந்தப் போட்டியில் விளையாடவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த போட்டியில் விளையாடிய அவர்கள் இருவருமே வலைப் பயிற்சியில் காயத்தை சந்தித்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அவர்களுக்கு பதிலாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் இப்போட்டியில் விளையாடுவதாக சூரியகுமார் கூறினார். மேலும் ரிங்குவுக்கு பதிலாக துருவ் ஜூரேல் விளையாடுவதாகவும் அவர் அறிவித்தார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நாங்கள் முதலில் பவுலிங் செய்ய பார்க்கிறோம். பிட்ச் நன்றாக இருக்கிறது நேற்று கொஞ்சம் பனி இருந்தது. எனவே பிட்ச் நேரம் செல்ல செல்ல நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன். அது கொஞ்சம் கடினமாக இருப்பதாக தெரிவதால் அப்படியே இருக்கும் என்று நம்புகிறேன். கடந்த போட்டியில் அனைத்து துறைகளிலும் நாங்கள் பங்காற்றிய அதே அடிப்படை மற்றும் அணுகுமுறைகளை இன்றும் பின்பற்ற விரும்புகிறோம்”
“இந்தப் போட்டிக்காக நாங்கள் ஆவலுடன் உள்ளோம். ஃபீல்டிங் துறையில் நன்றாக செயல்படுவது களத்தில் எங்களுக்கு நிறைய எனர்ஜி மற்றும் நேர்மறைத் தன்மையை கொண்டு வருகிறது. நிதிஷ் குமார் காயத்தால் விலகியுள்ளார். ரிங்கு இன்னும் ஓரிரு போட்டிகளுக்கு பின் குணமடைந்து வருவார். அவர்களுக்கு பதில் லோக்கல் பாய் வாஷிங்டன் சுந்தர் மற்றும் துருவ் ஜுரேல் ஆகியோர் எங்களுக்கு விளையாட உள்ளார்கள்” என்று கூறினார்.
இதையும் படிங்க: ஐசிசி விருதில் பாபர் அசாம், டிராவிஸ் ஹெட்டை முந்திய அர்ஷ்தீப் சிங்.. வேறு எந்த இந்தியரும் செய்யாத சாதனை
இரண்டாவது டி20 போட்டிக்கான இந்திய அணி: சஞ்சு சாம்சன் (கேப்டன்), அபிஷேக் ஷர்மா, சூரியகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, துருவ் ஜுரேல், வாஷிங்டன் சுந்தர், அக்சர் பட்டேல், ரவி பிஸ்னோய், அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி