
ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற கையுடன் ஜிம்பாப்வே மண்ணில் நடைபெற்ற 20 ஓவர் தொடரை 4 – 1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இதைத் தொடர்ந்து இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா அங்கு மூன்று டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அந்தத் தொடரிலிருந்து கௌதம் கம்பீர் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக இணைய உள்ளார்.
இந்நிலையில் அந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக நடைபெறும் டி20 தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அந்த தொடரில் ரோஹித் சர்மா ஓய்வு பெற்று விட்டதால் ஹர்திக் பாண்டியா இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்படுவார் என்று ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரை மொத்தமாக கழற்றி விட்டுள்ள தேர்வுக் குழு சாதாரண வீரராக மட்டுமே தேர்ந்தெடுத்துள்ளது.
புதிய கேப்டன்:
ஏனெனில் பாண்டியாவை துணை கேப்டனாக கூட தேர்வு செய்யாத தேர்வுக் குழு அந்த இடத்திற்கு சுப்மன் கில்லை கொண்டு வந்துள்ளது. குறிப்பாக ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக இந்தியா விளையாடும் அனைத்து தொடர்களிலும் முழுமையாக விளையாடுவதில்லை. எனவே அவருக்கு பதிலாக சூரியகுமாரை 2026 டி20 உலகக் கோப்பையின் கேப்டனாக வளர்க்க கௌதம் கம்பீர் பரிந்துரைத்ததாக செய்திகள் வெளியாகின.
தற்போது பாண்டியா கேப்டன்ஷிப் பதவியில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளதால் அது உறுதியாகியுள்ளது என்றே சொல்லலாம். அந்த வகையில் சூரியகுமார் யாதவ் தலைமையில் அறிவிக்கப்பட்ட இந்திய டி20 அணியில் ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், ரவி பிஸ்னோய், ரியான் பராக் இளம் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதே போல ரிஷப் பண்ட், அர்ஷ்தீப் சிங், சஞ்சு சாம்சன் போன்ற இளம் வீரர்கள் மீண்டும் அணிக்கு திருப்பியுள்ளனர்.
அத்துடன் வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் தேர்வாகியுள்ளனர். ஆனால் ஜஸ்ப்ரித் பும்ரா ஓய்வெடுக்கும் இந்த தொடரில் இலங்கையை தெறிக்க விடக்கூடிய முகமது சிராஜ், கலீல் அஹ்மத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மொத்தத்தில் ஜூலை 27இல் துவங்கும் இலங்கை டி20 தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள முழுமையான இந்திய அணி பின்வருமாறு.
இதையும் படிங்க: டென்ஷன் இருந்ததை பாத்தேன்.. டெல்லி பயிற்சியாளராக பாண்டிங் விலகியது ஏன்? பின்னணியை பகிர்ந்த ஹீலி
சூரியகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), யசஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், ரியான் பராக், ரிஷப் பண்ட் (கீப்பர்), சஞ்சு சாம்சன் (கீப்பர்), ஹர்டிக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஸ்னோய், கலீல் அஹ்மத், அர்ஷ்தீப், முகமத் சிராஜ்