தயாராகும் 333 ரன்ஸ் ஆஸி போன்ற தோல்வி.. இந்தியா 107/7.. 12 வருட சாதனையை உடைக்கப் போகும் நியூஸிலாந்து?

IND vs NZ 3
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் 8 வித்தியாசத்தில் தோற்ற இந்தியா சொந்த மண்ணில் 36 வருடங்கள் கழித்து நியூசிலாந்திடம் தோல்வியை சந்தித்து பின்தங்கியது. அதனால் அக்டோபர் 24ஆம் தேதி புனேவில் துவங்கிய இரண்டாவது போட்டியில் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்கியது.

அப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து போராடி 259 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டேவோன் கான்வே 76, ரச்சின் ரவீந்திரா 65 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக தமிழக வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் 7, ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

- Advertisement -

இந்தியா திணறல்:

பின்னர் விளையாடிய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா டக் அவுட்டானார். அடுத்ததாக ஜோடி சேர்ந்த ஜெய்ஸ்வால் 30, சுப்மன் கில் 30 ரன்கள் எடுத்துப் போராடி சுழலுக்கு சாதகமாக மாறிய புனே பிட்ச்சில் அவுட்டானார்கள். அதே போல மிடில் ஆர்டரில் விராட் கோலி 1, ரிஷப் பண்ட் 18, சர்பராஸ் கான் 11 ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை ஏற்படுத்தினர்.

போதாகுறைக்கு அடுத்து வந்த அஸ்வினும் 4 ரன்களில் பெவிலியன் திரும்பியதால் இரண்டாவது நாள் உணவு இடைவேளையில் இந்தியா 107-7 என இந்தியா பெரிய சரிவை சந்தித்துள்ளது. களத்தில் ஜடேஜா 11*, வாஷிங்டன் சுந்தர் 2* ரன்களுடன் உள்ளனர். தற்சமயத்தில் புனே மைதானம் பேட்டிங் செய்வதற்கு அதிக சவாலாக மாறியுள்ளதால் இந்தியா 200 ரன்கள் தாண்டுவதே கடினமாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

12 வருட சாதனை:

அத்துடன் 2017ஆம் ஆண்டு இங்கே நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 260, 285 ரன்கள் அடித்து இந்தியாவை 105, 107 ரன்களுக்கு சுருட்டி 333 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது. அதே போல இந்தப் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. அப்படி நடந்தால் 2012க்குப்பின் 12 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் இந்தியா முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்தித்து தலை குனியும்.

இதையும் படிங்க: டக் அவுட்டாகி சச்சின் சாதனையை சமன் செய்த ரோஹித் சர்மா.. என்ன தெரியுமா? – விவரம் இதோ

உலகிலேயே சொந்த மண்ணில் அதிக வருடங்கள் தொடர்ந்து வெல்லும் அணியாக இந்தியா தற்போது உலக சாதனை படைத்து வருகிறது. அது பறிபோவதுடன் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கும் இந்தியா தகுதி பெறுவதற்கான வாய்ப்பு வெகுவாக குறையும். இந்த இரண்டையும் நியூசிலாந்து செய்யுமா அல்லது இந்தியா மேஜிக் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Advertisement