ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் விளையாடிய இந்திய அணி ஏற்கனவே தோல்வியை சந்தித்து தொடரின் ஆரம்பத்திலேயே பூஜ்யத்திற்கு ஒன்று (0-1) என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.
சச்சினை சமன் செய்த ரோஹித் சர்மா :
அதன் காரணமாக அடுத்து வரும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என்ற இக்கட்டான நிலையில் இந்திய அணி இருக்கிறது. இந்நிலையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது அக்டோபர் 24-ஆம் தேதியான நேற்று புனே நகரில் துவங்கியது.
இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்று பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 259 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பாக பந்துவீச்சில் கலக்கிய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஷ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
அதனை தொடர்ந்து தற்போது தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் இந்திய அணியானது இரண்டாம் நாள் ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் விளையாடி வருகிறது. இந்நிலையில் நேற்றைய முதல் நாள் ஆட்டநேர இறுதியின் போது விளையாடிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 9 பந்துகளை சந்தித்து டக் அவுட்டாகி வெளியேறினார்.
அவர் இப்படி டக் அவுட்டானதன் மூலம் இந்திய முன்னாள் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கரின் மோசமான சாதனையை சமன் செய்துள்ளார். அந்த வகையில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக முறை டக் அவுட்டான இந்திய வீரர்களின் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 34 முறை டக் அவுட்டாகி ஆறாவது இடத்தில் இருக்கிறார். அவரது இந்த மோசமான சாதனையை தான் தற்போது ரோகித் சர்மா சமன் செய்துள்ளார்.
இதையும் படிங்க : இப்படி ஒரு மாற்றத்தை நான் பார்த்ததே இல்ல.. என்ன இதெல்லாம்.. இந்திய அணியை – விமர்சித்த சுனில் கவாஸ்கர்
இந்த பட்டியலில் அதிகமுறை டக் அவுட்டாகிய வீரராக ஜாகிர் கான் 43 முறை டக் அவுட்டாகி முதல் இடத்திலும், விராட் கோலி 38 முறை டக் அவுட்டாகி மூன்றாவது இடத்திலும், இஷாந்த் சர்மா 40 முறை டக் அவுட்டாகி இரண்டாவது இடத்திலும் உள்ளனர். அதேபோன்று சர்வதேச கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவை நேற்று வீழ்த்திய டிம் சவுதி 14-வது முறையாக ரோஹித்தின் விக்கெட்டை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



