இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி அக்டோபர் 16ஆம் தேதி பெங்களூரு நகரில் துவங்கியது. அப்போட்டியில் மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்றைய இரண்டாவது நாளில் துவங்கியது. அதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
இந்திய அணியில் ஆகாஷ் தீப் மற்றும் சுப்மன் கில் ஆகியோருக்கு பதிலாக குல்தீப் யாதவ், சர்பராஸ் கான் தேர்வு செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து பேட்டிங்கை துவக்கிய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா ஆரம்பத்திலேயே 2 ரன்களில் டிம் சவுதி வேகத்தில் போல்டானார். அதற்கடுத்ததாக விராட் கோலி பேட்டிங் செய்ய வந்தது ஆச்சரியமாக அமைந்தது.
சுமாரான நம்பர் 3:
ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் பெரும்பாலும் நான்காவது பேட்டிங் இடத்தில் விளையாடுவது வாடிக்கையாக்கும். சொல்லப்போனால் கடைசியாக 2016ஆம் ஆண்டு கிராஸ் ஐஸ்லெட் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக அவர் 3வது இடத்தில் விளையாடினார். ஆனால் அந்த இடத்தில் 14*, 34, 1, 41, 3, 4 ரன்கள் மட்டுமே எடுத்த அவர் ஒரு முறை கூட அரை சதம் அடிக்காமல் சுமாராகவே செயல்பட்டுள்ளார்.
அப்படிப்பட்ட 3வது இடத்தில் 8 வருடங்கள் கழித்து இப்போட்டியில் களமிறங்கிய அவர் வில்லியம் ஓ’ரோர்கே வேகத்தில் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அடுத்ததாக வந்த சர்பராஸ் கான் டக் அவுட்டானதால் 10-3 என ஆரம்பத்திலேயே இந்தியா திணறியது. இதன் வாயிலாக 14 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டியில் 10 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து இந்தியா பெரிய சரிவை சந்தித்தது.
தவறான முடிவு:
இதற்கு முன் கடைசியாக கடந்த 2010ஆம் ஆண்டு அகமதாபாத் நகரில் இதே நியூசிலாந்துக்கு எதிராக 2-3 என்ற மோசமான துவக்கத்தை இந்தியா பெற்றிருந்தது. அந்த வகையில் பெங்களூருவில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் காரணத்தால் பிட்ச் பேட்டிங் செய்வதற்கு சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதையும் தாண்டி தைரியமாக கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார்.
இதையும் படிங்க: உலகிலேயே அதுல அஸ்வின் தான் பெஸ்ட்.. அவர்கிட்ட கத்துக்கிட்டது பாகிஸ்தானில் சதமடிக்க உதவுச்சு.. பென் டக்கெட்
ஆனால் அந்த முடிவு இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. அதே போல தற்போது விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் கொஞ்சம் தடுமாற்றமாக விளையாடி வருகிறார். அப்படிப்பட்ட அவரை 3வது இடத்தில் 8 வருடங்கள் கழித்து களமிறங்கியதும் தவறான முடிவாகவே அமைந்தது. அந்த நிலையில் சரிவை சரிவு செய்வதற்காக ஜெய்ஸ்வால் – ரிஷப் பண்ட் ஆகியோர் போராடி வருகிறார்கள்.



