பிசிசிஐக்கு ஒரு நியாயம், ஊருக்கே ஒரு நியாயம் – உலகையும் வளரவிடுங்க, இலங்கை ஜாம்பவான் நியாயமான கோரிக்கை

Ganguly
- Advertisement -

உலகப் புகழ்பெற்ற ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் இந்த வருடம் 10 அணிகளுடன் 74 போட்டிகளுடன் 65 நாட்கள் பிரம்மாண்டமாக நடைபெற்று ரசிகர்களுக்கு பல எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த போட்டிகளை விருந்து படைத்து நிறைவு பெற்றது. கடந்த 2008இல் 8 அணிகளுடன் சாதாரண டி20 தொடராக துவங்கப்பட்ட இந்த ஐபிஎல் கடந்த 15 வருடங்களில் ஒவ்வொரு வருடமும் தனக்கு தானே நிறைய பரிணாமங்களை கண்டு இன்று உலகின் நம்பர் ஒன் டி20 தொடராக விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதில் நடைபெறும் பெரும்பாலான போட்டிகள் கடைசி ஓவர் வரை சென்று ரசிகர்கள் எதிர்பாராத முடிவுகளை கொடுப்பதால் ஐசிசி நடத்தும் உலக கோப்பைகளை விட ஐபிஎல் தரமாக உள்ளதென்று ஏபி டிவில்லியர்ஸ் போன்ற நிறைய ஜாம்பவான்கள் பாராட்டியுள்ளனர்.

அதேபோல் இந்த தொடரால் ஒவ்வொரு வருடமும் பல ஆயிரம் கோடிகளை கல்லா கட்டும் பிசிசிஐ சர்வதேச போட்டிகளை நடத்தும் ஐசிசியை விட பணக்கார கிரிக்கெட் வாரியமாக உருவெடுத்துள்ளது. அதிலும் சமீபத்தில் நடைபெற்ற 2023 – 2027 காலகட்டத்திற்கான ஒளிபரப்பு உரிமை 48,930 கோடி என்ற பிரமாண்ட தொகைக்கு ஏலம் போனதால் ஒரு ஐபிஎல் போட்டியின் மதிப்பு 107.5 கோடியாக உயர்ந்துள்ளது. அதனால் எம்பிஎல், ஈபிஎல் போன்ற அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகள் நடத்தும் கால்பந்து கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளை முந்தியுள்ள ஐபிஎல் அதிக வருமானங்களை கொடுக்கும் உலகின் நம்பர் 2 விளையாட்டு தொடராக அசுர வளர்ச்சி கண்டுள்ளது.

- Advertisement -

சுயநலமான பிசிசிஐ:
இதனால் வரும் 2023 – 2027 காலகட்டத்தில் 84, 94 போட்டிகள் கொண்ட தொடராக நடைபெறப்போகும் ஐபிஎல் மேலும் விரிவடைய உள்ளது. இதை ஐசிசியும் தடுக்க முடியாது என்பதால் உலக கிரிக்கெட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் ஒரு அங்கமாக ஐபிஎல் பிரம்மாண்ட வளர்ச்சி கண்டுள்ளது. இதன் வாயிலாக உலக அரங்கில் கிரிக்கெட்டை நம்பர் ஒன் விளையாட்டாகவும் அதிக வருமானத்தை கொடுக்கும் தொடராகவும் ஐபிஎல் மாற்றியுள்ளது. இருப்பினும் இதன் வாயிலாக சர்வதேச டி20 போட்டிகள் அழியும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த ஐபிஎல் தொடரால் பல தருணங்களில் பிசிசிஐ சுயநலமாக நடந்து கொள்வதைப் பார்க்க முடிகிறது. குறிப்பாக ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக வெளிநாட்டு வீரர்களை அனுமதிக்கும் பிசிசிஐ இந்திய வீரர்களை பிக் பேஷ் உட்பட எந்த ஒரு வெளிநாட்டு தொடர்களிலும் அனுமதிப்பதில்லை. அதனால் வெளிநாட்டு டி20 தொடர்களின் தரம் குறைவதுடன் சர்வதேச அரங்கில் அந்நாட்டின் தரமும் குறைகிறது. எடுத்துக்காட்டாக ஒரு காலத்தில் உலகத்தரம் வாய்ந்த வீரர்களைக் கொண்ட தென் ஆப்பிரிக்கா சமீப காலங்களில் சர்வதேச கிரிக்கெட்டில் ரொம்பவே தடுமாறுகிறது.

- Advertisement -

டீ சில்வா கோரிக்கை:
அதற்கு காரணம் ஜாம்பவான்கள் ஓய்வுக்குப் பின் தற்போதைய காலத்தில் விளையாடும் வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுகிறார்கள். ஆனால் அந்நாட்டில் நடக்கும் டி20 தொடரில் இந்திய வீரர்கள் பங்கேற்பதில்லை. அதற்கும் இதற்கும் கொஞ்சமும் சம்பந்தமில்லையே என்று கேட்க வேண்டாம்.

ஏனெனில் தரமான இந்திய வீரர்கள் பங்கேற்காமல் அந்நாட்டில் நடைபெறும் டி20 தொடரில் விளையாடும் தென்ஆப்பிரிக்க வீரர்களும் தரமான போட்டியில் பங்கேற்க முடியாத்தால் தரமான வீரர்களாக மாறமுடியாமல் போவதற்கு மறைமுக காரணமாகிறது. இந்நிலையில் தென்னாப்பிரிக்கா, இலங்கை, ஜிம்பாப்வே போன்ற நாடுகளின் வளர்ச்சிக்காக இந்திய வீரர்களை வெளிநாட்டு தொடர்களில் விளையாட பிசிசிஐ அனுமதிக்க வேண்டும் என்று இலங்கை ஜாம்பவான் அரவிந்தா டீ சில்வா கேட்டுக்கொண்டுள்ளார்.

தற்போது ஊருக்கே ஒரு நியாயம் தங்களுக்கு ஒரு நியாயம் என்ற வகையில் செயல்பட்டு வரும் பிசிசிஐ தங்களது எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள அவர் இதுபற்றி பேசியது பின்வருமாறு. “இது அந்த காலத்தில் கவுண்டி கிரிக்கெட் தொடர்கள் இங்கிலாந்து வீரர்களுக்கு சாதகமாக இருந்ததை போல் அமைகிறது. இருப்பினும் ஐபிஎல், பிக்பேஷ் போன்ற அனைத்து தொடர்களும் வீரர்களின் தரத்தை உயர்த்தும் இடமாகவே இருக்க வேண்டும். சர்வதேச அரங்கில் ஆதிக்கம் செலுத்தும் நாட்டை ஐபிஎல் தொடரிலிருந்து உங்களால் பார்க்க முடியும். அவர்கள் இதர பிரிமியர் தொடர்களை காட்டிலும் ஏகபோகமாக நடத்துகிறார்கள்”

“ஏனெனில் இந்திய வீரர்கள் இதர லீக் போட்டிகளில் அனுமதிக்கப்படுவதில்லை. இந்த நிலைமை தொடர்ந்தால் இதர லீக் தொடர்களில் தரம் இல்லாமல் போனால் ஒரு கட்டத்தில் சர்வதேசப் போட்டிகளின் தரம் பாதிக்கப்படும். எனவே இதற்கான தீர்வை கண்டுபிடித்து இதர நாடுகளுக்கு தேவையான ஆதரவை கொடுக்கும் வகையில் இந்தியா செயல்பட வேண்டும். இல்லையேல் அது கிரிக்கெட்டுக்கு எதிர்மறையான நிகழ்வுகளை ஏற்படுத்தும். இந்த அனைத்து நாடுகளும் இணைந்து வளர்வதை உறுதி செய்வது உலக கிரிக்கெட்டை நிர்வகிக்கும் ஐசிசியின் பொறுப்பாகும். இல்லையெனில் ஜிம்பாப்வே, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளைப் போன்ற சூழ்நிலையை பார்க்க நாங்கள் விரும்பவில்லை” என்று கூறினார்.

Advertisement