இந்திய மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜூலை இரண்டாம் தேதி பர்மிங்கம் நகரில் துவங்கியது. அதில் முதலில் 587 ரன்களை குவித்து ஆரம்பத்திலேயே வலுவான துவக்கத்தைப் பெற்றது. அதிகபட்சமாக கேப்டன் சுப்மன் கில் 269, ரவீந்திர ஜடேஜா 89, ஜெய்ஸ்வால் 87, வாசிங்டன் சுந்தர் 42 ரன்கள் குவித்தார்கள். இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக சோயப் பஷீர் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
அடுத்து விளையாடிய இங்கிலாந்தை சிறப்பாக பவுலிங் செய்த இந்தியா 407 ரன்களுக்கு சுருட்டி அசத்தியது. அதிகபட்சமாக ஜேமி ஸ்மித் 184*, ஹாரி ப்ரூக் 158 ரன்கள் எடுத்தனர். இந்திய அணிக்கு முகமது சிராஜ் 6, ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அடுத்ததாக 180 ரன்கள் முன்னிலையுடன் விளையாடிய இந்தியாவுக்கு ஜெய்ஸ்வால் 28, கருண் நாயர் 26 ரன்னில் அவுட்டானார்கள்.
இமாலயத்தில் இந்தியா:
இருப்பினும் கேஎல் ராகுல் சிறப்பாக விளையாடி 55 ரன்கள் குவித்து விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக வந்த கேப்டன் கில் நிதானமாக விளையாடிய நிலையில் எதிர்ப்புறம் வந்த ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி 65 (58) ரன்களை விளாசி இந்தியாவை வலுப்படுத்தினார். மறுபுறம் மீண்டும் சிறப்பாக விளையாடிய கில் சதத்தை அடித்து இந்தியாவின் முன்னிலையை 500 ரன்கள் தாண்ட உதவினார்.
அவருடன் ஜோடி சேர்ந்த ஜடேஜா தம்முடைய பங்கிற்கு நிதானமாக விளையாடி அரை சதத்தை அடித்து இங்கிலாந்தை கடுப்பேற்றினார். இந்தப் பக்கம் தொடர்ந்து அசத்தலாக விளையாடிய கில் சதத்தையும் தாண்டி 161 ரன்கள் குவித்து ரசிகர்களின் பாராட்டுடன் அவுட்டாகி சென்றார். இறுதியில் ரவீந்திர ஜடேஜா 69*, வாஷிங்டன் சுந்தர் 12* ரன்கள் எடுத்த போது இந்தியா தங்களுடைய இன்னிங்ஸை முடித்துக் கொள்வதாக அறிவித்தது.
இந்தியாவின் சவால்:
2வது இன்னிங்ஸில் மொத்தம் 427/6 ரன்கள் குவித்த இந்தியா இப்போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற 608 என்ற இமாலய ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக வந்தது முதல் பஸ்பால் என்ற பெயரில் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல விளையாடும் இங்கிலாந்து சொந்த மண்ணில் அதிரடியாக சேசிங் செய்து வெற்றி கண்டு வருகிறது. கடந்தப் போட்டியில் கூட 371 ரன்கள் எளிதாக அடித்து இங்கிலாந்து வெற்றியும் பெற்றது.
இதையும் படிங்க: ஒரே போட்டியில் 269, 100 ரன்ஸ்.. கவாஸ்கர், கோலியின் வாழ்நாள் சாதனைகளை தூளாக்கிய கில்.. 3 சரித்திர சாதனை
450 அல்ல 500 ரன்களை இலக்காக கொடுத்தாலும் அடித்து வெல்வோம் என்று இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக் முதல் போட்டியின் முடிவில் தெரிவித்துள்ளார். அப்படிப்பட்ட இங்கிலாந்துக்கு “முடிந்தால் இப்போது சேசிங் செய்து உங்களுடைய பஸ்பால் திறமையைக் காட்டுங்கள்” என்ற வகையில் இந்தியா உலக சாதனை இலக்கை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. ஏனெனில் வரலாற்றில் வேறு எந்த அணியும் 450 ரன்களை கூட வெற்றிகரமாக சேசிங் செய்ததில்லை. 2003ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் 418 ரன்களை சேசிங் செய்ததே அதிகபட்ச வெற்றியாகும்.