வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டி தலைநகர் டெல்லியில் இரவு 7 மணிக்கு துவங்கியது. அதில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் 10 (7), அபிஷேக் சர்மா 15 (11) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.
அடுத்ததாக வந்த கேப்டன் சூரியகுமாரும் 8 (10) ரன்களில் முஸ்தபிசூர் ரகுமான் வேகத்தில் அவுட்டானார். அதனால் 41-3 என தடுமாற்றமான துவக்கத்தை பெற்ற இந்திய அணிக்கு அடுத்ததாக நித்திஷ் ரெட்டி மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். வேகப்பந்து வீச்சாளர்களை நிதானமாக எதிர்கொண்ட அந்த ஜோடி ஸ்பின்னர்களை அடித்து நொறுக்கியது.
அசத்திய நிதிஷ்:
குறிப்பாக மெகதி ஹசன் வீசிய 13வது ஓவரின் 2, 3, 4, 5வது பந்துகளில் 6, 4, 2, 6 என 3 பவுண்டரிகளை பறக்கவிட்ட நித்திஷ் ரெட்டி தனது முதல் அரை சதத்தை அசத்தினர். அதே வேகத்தில் மிகச் சிறப்பாக விளையாடிய அவர் 4வது விக்கெட்டுக்கு ரிங்குவுடன் சேர்ந்து 108 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை காப்பாற்றி அவுட்டானார். குறிப்பாக கடந்த போட்டியில் அறிமுகமாகி இப்போட்டியில் அசத்திய அவர் 4 பவுண்டரி 7 சிக்ஸருடன் 74 (34) ரன்கள் குவித்து அவுட்டானார்.
இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4வது இளம் வயதில் அரை சதமடித்த இந்திய வீரர் என்ற ஜெய்ஸ்வால் சாதனையையும் நிதிஷ் ரெட்டி (21 வருடம் 136 நாட்கள்) உடைத்துள்ளார். இதற்கு முன் 21 வருடம் 227 நாட்களில் ஜெய்ஸ்வால் அரை சதமடித்ததே முந்தைய சாதனை. முதல் 3 இடங்களில் ரோஹித் சர்மா (20 வருடம் 143 நாட்கள்), திலக் வர்மா (20 வருடம் 271 நாட்கள்), ரிஷப் பண்ட் (21 வருடம் 38 நாட்கள்) உள்ளனர்.
சாதனை ஸ்கோர்:
தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் அவருடன் சேர்ந்து விளையாடிய ரிங்கு சிங் தம்முடைய ஸ்டைலில் அரை சதமடித்து 5 பவுண்டரி 3 சிக்ஸருடன் 53 (29) ரன்களில் அவுட்டானார். அடுத்ததாக வந்த ஹர்திக் பாண்டியா 2 பவுண்டரி 2 சிக்ஸருடன் 32 (19), ரியான் பராக் 2 சிக்ஸருடன் 15 (6) ரன்கள் விளாசி அவுட்டானார்கள். இறுதியில் அர்ஷ்தீப் 6 (2) ரன்கள் எடுத்த உதவியுடன் இந்தியா 20 ஓவரில் 221-9 ரன்கள் குவித்தது.
இதையும் படிங்க: 51க்கு 49 பந்தயம்.. அதைத்தவிர சச்சின் சாதனையை ரூட் உடைப்பதை யாராலும் நிறுத்த முடியாது.. அலெஸ்டர் குக்
இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வங்கதேசத்துக்கு எதிராக முதல் முறையாக 200 ரன்கள் அடித்துள்ள இந்தியா தங்களுடைய அதிகபட்ச ஸ்கோரையும் பதிவு செய்து சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் கடந்த 2024 டி20 உலகக் கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா அடித்ததே முந்தைய அதிகபட்ச ஸ்கோர். வங்கதேசத்துக்கு அதிகபட்சமாக ரிஷத் ஹொசைன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.



