ஐசிசி மகளிர் 2025 உலகக் கோப்பை செப்டம்பர் 30ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்குகிறது. அத்தொடருக்கு தயாராகும் வகையில் நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா தங்களது சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டி செப்டம்பர் 14ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் இருக்கும் முல்லான்பூர் நகரில் நடைபெற்றது.
மதியம் 1.30 மணிக்கு துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணிக்கு நம்பிக்கை நட்சத்திரம் ஸ்மிருதி மந்தனா நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார். அவருடன் சேர்ந்து விளையாடிய இளம் வீராங்கனை பிரதிகா ராவல் நங்கூரமாக பேட்டிங் செய்து ஆஸ்திரேலியாவுக்கு சவாலைக் கொடுத்தார்.
இந்தியா நல்ல பேட்டிங்:
அந்த வகையில் 22 ஓவர்கள் வரை ஆஸ்திரேலியாவுக்கு சவாலைக் கொடுத்த அந்த ஜோடியில் மந்தனா அரை சதத்தை அடித்து 58 (63) ரன்களில் ரன் அவுட்டானார். அவருடன் சேர்ந்து விளையாடிய ராவல் தம்முடைய பங்கிற்கு அரை சதத்தை அடித்து 64 (96) ரன்களில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த ஹர்லின் தியோல் சிறப்பாக விளையாடிய நிலையில் எதிர்புறம் வந்த கேப்டன் ஹர்மன்பிரீத் 11 (9) ரன்னில் அவுட்டானார்.
இருப்பினும் இந்தப் பக்கம் பொறுப்புடன் விளையாடிய தியோல் அரை சதத்தை அடித்து 54 (57) ரன்கள் விளாசி விக்கெட்டை இழந்தார். லோயர் ஆர்டரில் ஜெமிமா ரோட்ரிகஸ் நிதானமாக விளையாடி 18 ரன்னில் அவுட்டான போதிலும் ரிச்சா கோஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 25 (20) ரன்கள் குவித்து அவுட்டானார். கடைசியில் ராதா யாதவ் அதிரடியாக 19* (14) ரன்கள் எடுத்தார்.
2வது அதிகபட்ச ஸ்கோர்:
அவருடன் இணைந்து விளையாடிய தீப்தி சர்மா 2 பவுண்டரியுடன் அவுட்டாகாமல் 20* (16) ரன்கள் எடுத்ததால் 50 ஓவரில் இந்தியா 281/7 ரன்களை குவித்தது. அதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா தங்களுடைய 2வது அதிகபட்ச ஸ்கோரை எடுத்தது. 2023 மும்பை வான்கடே போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 282/8 ரன்கள் அடித்ததே இந்தியாவின் முதல் அதிகபட்ச ஸ்கோர்.
இதையும் படிங்க: உங்களுடைய பிறந்தநாளில் இந்தியாவிற்கு இந்த பரிசை தாருங்கள்.. கேப்டனுக்கு ரசிகர்கள் வேண்டுகோள் – விவரம் இதோ
மறுபுறம் ஆஸ்திரேலியா அணிக்கு அதிகபட்சமாக மேகன் ஸ்கட் தம்முடைய 100வது ஒருநாள் போட்டியில் 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். இதைத் தொடர்ந்து 282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா விளையாடுகிறது. அதைக் கட்டுப்படுத்தி வெற்றி பெற இந்திய பவுலர்கள் முயற்சித்து வருகின்றனர்.



