ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபியில் மார்ச் 2ஆம் தேதி துபாயில் கடைசி லீக் போட்டி நடைபெற்றது. அதில் ஏற்கனவே செமி ஃபைனலுக்கு தகுதி பெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதின. இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா 15 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். மறுபுறம் தடுமாறிய கில்லை 7 ரன்னில் காலி செய்த மாட் ஹென்றி அடுத்ததாக வந்த நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலியையும் 11 ரன்னில் கிளன் பிலிப்ஸ் அபார கேட்ச்சில் அவுட்டாக்கினார். அதனால் 30/3 என இந்தியா ஆரம்பத்திலேயே தடுமாறியது.
ஸ்ரேயாஸ் அசத்தல்:
அப்போது மிடில் ஆர்டரில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். எளிதாக விக்கெட் விடக்கூடாது என்ற நோக்கத்துடன் மெதுவாக விளையாடிய அந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 98 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்தது. அதில் அக்சர் பட்டேல் 42 ரன்னில் ரவீந்திரா சுழலில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார்.
அவருடன் சேர்ந்து விளையாடிய ஸ்ரேயாஸ் அரை சதமடித்து மிகச் சிறப்பாக விளையாடி 79 ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார். அதே போல மறுபுறம் நிதானமாக விளையாட முயற்சித்த கேஎல் ராகுல் 28 ரன்களில் அவுட்டாகி கொடுத்தார். அதற்கடுத்ததாக வந்த ரவீந்திர ஜடேஜா 16 ரன்னில் கேன் வில்லியம்சனின் அபார கேட்ச்சால் ஏமாற்றத்துடன் வெளியேறினார்.
இந்தியா வெல்லுமா:
இருப்பினும் அவருடன் சேர்ந்து விளையாடிய ஹர்திக் பாண்டியா நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார். கடைசி நேரத்தில் நல்ல அதிரடியைக் காட்டிய அவர் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 45 (45) ரன்கள் குவித்து இந்தியாவை ஓரளவு காப்பாற்றினார். இறுதியில் ஷமி 5, குல்தீப் 1* ரன்கள் எடுத்த உதவியுடன் 50 ஓவரில் இந்தியா 249-9 ரன்களை போராடி எடுத்தது.
இதையும் படிங்க: 9 என்ற வித்யாச கொண்டாடத்தின் அர்த்தம் என்ன? இந்திய வாய்ப்பு என் கையில் இல்ல.. கருண் நாயர் பேட்டி
நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக மாட் ஹென்றி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர் என்ற உலக சாதனையை அவர் படைத்தார். இப்போட்டியில் கிளன் பிலிப்ஸ், கேன் வில்லியம்சன் ஆகியோர் அபார கேட்ச் பிடித்தது போல நியூசிலாந்து அணி ஃபீல்டிங் துறையில் கச்சிதமாக செயல்பட்டு குறைந்தது 20 – 30 ரன்களை சேமித்தது என்றே சொல்லலாம்.



