IND vs WI : மிரட்டல் பவுலிங், வெ.இ அணியை சுருட்டி வீசிய இந்தியா – 1997க்குப்பின் 25 வருடங்கள் கழித்து அசத்தல் சாதனை

IND vs WI 1
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1 – 0 என்ற கணக்கில் வென்ற இந்தியா அடுத்ததாக அக்டோபர் மாதம் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் களமிறங்கியுள்ளது. அத்தொடரின் முதல் போட்டி ஜூலை 27ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு பார்படாஸ் நகரில் துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். மேலும் இந்திய அணியில் முகேஷ் குமார் அறிமுகமாக சேர்க்கப்பட்ட நிலையில் சஞ்சு சாம்சன் மீண்டும் தேர்வு செய்யப்படாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஆரம்பத்திலேயே தடுமாறிய கெய்ல் மேயர்ஸ் 2 (9) ரன்களில் ஹர்திக் பாண்டியா வேகத்தில் அவுட்டாக அடுத்ததாக வந்த இளம் வீரர் அலிக் அதனேஷ் அதிரடியாக 3 பவுண்டரி 1 சிக்சருடன் 22 (18) ரன்கள் எடுத்த போதிலும் முகேஷ் குமார் வேகத்தில் ரவீந்திர ஜடேஜாவின் சிறப்பான கேட்ச்சால் பெவிலியன் திரும்பினார். அடுத்த ஓவரிலேயே மறுபுறம் தடுமாறிய ப்ரண்டன் கிங் 17 (23) ரன்களில் தாக்கூர் வேகத்தில் க்ளீன் போல்ட்டாகி ஏமாற்றத்தை கொடுத்ததால் 45/3 என ஆரம்பத்திலேயே வெஸ்ட் இண்டீஸ் தடுமாறியது.

- Advertisement -

அசத்தல் பவுலிங்:
அந்த நிலைமையில் கேப்டன் ஷாய் ஹோப் நிதான பேட்டிங்கை வெளிப்படுத்திய நிலையில் எதிர்ப்புறம் 2 வருடங்கள் கழித்து தேர்வு செய்யப்பட்ட சிம்ரோன் ஹெட்மேயர் சரிவை சரி செய்வதற்காக போராடினார். ஆனால் 11 (19) ரன்களில் அவரை கிளீன் போல்ட்டாக்கிய ரவீந்திர ஜடேஜா அடுத்ததாக வந்த அதிரடி வீரர் ரோவ்மன் போவலையும் 4 (4) ரன்களில் காலி செய்தார். போதாக்குறைக்கு அடுத்து வந்த ரோமாரியா செஃபர்டையும் ரவீந்திர ஜடேஜா டக் அவுட்டாக்கியதால் வெஸ்ட் இண்டீஸ் 96/6 என சரிந்து பெரிய வீழ்ச்சியை சந்தித்தது.

அந்த நிலையில் அடுத்ததாக வந்த டாமினிக் ட்ரெக்ஸ் 3, யானிக் கேரி 3 என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களை ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாக்கிய குல்தீப் யாதவ் மறுபுறம் சரிவை சரி செய்வதற்காக போராடிய கேப்டன் ஷாய் ஹோப்பையும் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 43 (45) ரன்களில் எல்பிடபிள்யூ முறையில் அவுட்டாக்கினார். அப்படி ஆரம்பம் முதலே ஒரு பார்ட்னர்ஷிப் கூட அமைக்காத வெஸ்ட் இண்டீஸ் சீரான இடவெளிகளில் இந்தியாவின் தரமான பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்ததால் 23 ஓவரிலேயே வெறும் 114 ரன்களுக்கு பரிதாபமாக ஆல் அவுட்டானது.

- Advertisement -

அந்தளவுக்கு பந்து வீச்சில் மிரட்டிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் யாதவ் 4 விக்கெட்டுகளையும் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் ஹரிதிக் பாண்டியா முகேஷ் குமார் மற்றும் ஷார்துள் தாகூர் தலா 1 விக்கெட்டும் சாய்த்தனர். இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணியை அதன் சொந்த மண்ணில் மிகவும் குறைந்த ரன்களுக்கு அவுட்டாக்கி இந்தியா அசத்தல் சாதனையும் படைத்தது.

இதற்கு முன் கடந்த 1997ஆம் ஆண்டு போர்ட் ஆஃப் ஸ்பெயின் நகரில் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் அபய் குருவில்லா, நோல் டேவிட் தலா 3 விக்கெட்டுகளும் வெங்கடேஷ் பிரசாத், அனில் கும்ப்ளே ஆகியோர் தலா 2 விக்கெட்களும் எடுத்த அசத்தலான பந்து வீச்சில் வெஸ்ட் இண்டீஸ் 121 ரன்களுக்கு ஆல் அவுட்டானதே முந்தைய சாதனையாகும்.

இதையும் படிங்க:IND vs WI : மிரட்டல் பவுலிங், வெ.இ அணியை சுருட்டி வீசிய இந்தியா – 1997க்குப்பின் 25 வருடங்கள் கழித்து அசத்தல் சாதனை

மேலும் அந்தப் போட்டியில் 10 வித்தியாசத்தில் வென்ற இந்தியா இந்த போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் அணியை தோற்கடித்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெறும் முனைப்புடன் விளையாடி வருகிறது. குறிப்பாக இலக்கு எளிதாக இருப்பதன் காரணமாக ரோகித் சர்மாவுக்கு பதிலாக இசான் கிசான் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் புதிய தொடக்க வீரர்களாக களமிறங்கி விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement