வங்கதேசத்திற்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 3 போட்டியில் கொண்ட ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்து அதிர்ச்சி தோல்விகளை சந்தித்து 0 – 2* என்ற கணக்கில் கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்ட இந்தியா பெரிய அவமானத்தை சந்தித்தது. குறிப்பாக 2023 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இத்தொடரில் முதலிரண்டு போட்டிகளில் கையில் வைத்திருந்த வெற்றியை கடைசி நேரத்தில் சொதப்பி எதிரணிக்கு பரிசளித்த இந்தியா டிசம்பர் 10ஆம் தேதியன்று நடைபெற்ற சம்பிரதாய போட்டியில் வைட்வாஷ் தோல்வியை தவிர்க்க களமிறங்கியது. சட்டக்கிரோம் மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதை தொடர்ந்து காயத்தால் வெளியேறிய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு பதில் இளம் வீரர் இஷான் கிசான் ஷிகர் தவானுடன் களமிறங்கினார். அதில் ஷிகர் தவான் வழக்கம் போல 3 (8) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றினாலும் அடுத்து களமிறங்கிய விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த இசான் கிசான் ஆரம்பத்தில் நிதானமாகவும் நேரம் செல்ல செல்ல அதிரடியாகவும் ரன்களை சேர்த்தார். பவர் பிளே ஓவரில் பொறுமையை காட்டிய இந்த ஜோடியில் ஒருபுறம் விராட் கோலி பொறுமையுடன் விளையாட மறுபுறம் வங்கதேச பவுலர்களை அடித்து நொறுக்கிய இசான் கிசான் வேகமாக ரன்களை சேர்த்து சதமடித்தார்.
சாதனை ஸ்கோர்:
நேரம் செல்ல செல்ல வங்கதேசத்துக்கு சிம்ம சொப்பனமாக மாறிய இந்த ஜோடி பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்க விட்டு 2வது விக்கெட்டுக்கு 290 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்த போது எரிமலையைப் போல் மிரட்டலாக பேட்டிங் செய்த இஷான் கிசான் 24 பவுண்டரி 10 சிக்ஸருடன் இரட்டை சதமடித்து 210 (131) ரன்களை விளாசி ஒரு வழியாக ஆட்டமிழந்தார். குறிப்பாக 126 பந்திலேயே இரட்டை சதமடித்த அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக இரட்டை சதமடித்த வீரர் என்ற கிறிஸ் கெயில் சாதனையை தகர்த்து இளம் வயதில் இரட்டை சதமடித்த வீரர் என்ற ரோகித் சர்மாவின் சாதனையையும் உடைத்து 2 புதிய உலக சாதனைகளை படைத்து அவுட்டானார்.
அவரை தொடர்ந்து வந்த ஷ்ரேயஸ் ஐயர் 3 (6) ரன்களிலும் கேப்டன் கேஎல் ராகுல் 8 (10) ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் அட்டகாசமாக செயல்பட்ட விராட் கோலி தனது பங்கிற்கு சதமடித்து 11 பவுண்டரி 2 சிக்சருடன் 113 (91) ரன்கள் குவித்து அவுட்டானார். அவரைத் தொடர்ந்து வந்த அக்சர் பட்டேல் 20 (17) ரன்களும் வாஷிங்டன் சுந்தர் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 37 (27) ரன்களும் எடுத்து அதிரடியாக விளையாட முயன்று அவுட்டானார்கள். இருப்பினும் இசான் கிசான் மற்றும் விராட் கோலி ஆகியோரது ஆரம்பக்கட்ட அதிரடியான ஆட்டத்தால் 50 ஓவர்களில் இந்தியா 409/8 ரன்கள் எடுத்து அசத்தியது.
இதையும் படிங்க: IND vs BAN : வங்கதேசத்தை அடித்து நொறுக்கிய இஷான் கிசான் – கெயில், சச்சின், சேவாக், ரோஹித்தை மிஞ்சி புதிய உலக சாதனை
இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் வங்கதேசத்துக்கு எதிராக தன்னுடைய அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த இந்தியா புதிய வரலாற்று சாதனை படைத்தது. இதற்கு முன் கடந்த 2011ஆம் ஆண்டு மிர்பூரில் நடைபெற்ற ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வீரேந்தர் சேவாக் (175 ரன்கள்) மற்றும் விராட் கோலி (100* ரன்கள்) ஆகியோரது அதிரடியில் 50 ஓவர்களில் இந்தியா 370/4 ரன்கள் விளாசியதே முந்தைய சாதனையாகும்.