நியூஸிலாந்தில் பறக்கும் இந்திய கொடி – நியூஸிலாந்து மண்ணில் அதன் சாதனையை தகர்த்து இந்தியா படைத்த புதிய வரலாற்று சாதனை

INDia Hardik pandya
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ஏமாற்றத்தை சந்தித்த இந்தியா அடுத்ததாக நியூசிலாந்துக்கு பயணித்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் ஓய்வெடுப்பதால் ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் அணி களமிறங்கிய இத்தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. இருப்பினும் 2வது போட்டியில் சூரியகுமாரின் அதிரடியான சதத்தால் 65 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா ஆரம்பத்திலேயே இத்தொடரில் முன்னிலை பெற்றது. அந்த நிலையில் நவம்பர் 22ஆம் தேதியன்று நடைபெற்ற வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தாலும் சுமாராக செயல்பட்டு 19.4 ஓவரில் 160 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அந்த அணிக்கு ஃபின் ஆலன் 3, மார்க் சாப்மேன் 12 என முக்கிய வீரர்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினாலும் 3வது விக்கெட்டுக்கு 86 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த டேவோன் கான்வே 5 பவுண்டரி 2 சிக்சருடன் 59 (49) ரன்களும் கிளன் பிலிப்ஸ் 5 பவுண்டரி 3 சிக்சருடன் 54 (33) ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். அதை பயன்படுத்திய இந்தியா கடைசி நேரத்தில் டார்ல் மிட்சேல் 10, ஜிம்மி நீசம் உள்ளிட்ட முக்கிய வீரர்களை சொற்ப ரன்களில் காலி செய்து நியூசிலாந்தை 200 ரன்கள் எடுக்க விடாமல் செய்தது. அந்த அளவுக்கு பந்து வீச்சில் அசத்திய இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் மற்றும் அரஷ்தீப் சிங் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

- Advertisement -

அபார சாதனை:
அதை தொடர்ந்து 161 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு இசான் கிசான் 10, ரிசப் பண்ட் 11, ஸ்ரேயாஸ் ஐயர் 0 என முக்கிய வீரர்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் நடையை கட்டிய நிலையில் நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமாரும் 13 (10) ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் முக்கிய கட்டத்தில் கேப்டன் பாண்டியா அதிரடியாக 30* (18) ரன்கள் எடுத்ததால் 9 ஓவர்களில் 75/4 ரன்களை இந்தியா குவித்திருந்த போது மழை வந்தது. ஆச்சரியப்படும் வகையில் அந்த நேரத்தில் டிஎல்எஸ் முறைப்படி தேவையான ஸ்கோரை கச்சிதமாக இந்தியா எடுத்திருந்ததால் இப்போட்டி டையில் முடிந்ததாக நடுவர்கள் அறிவித்தனர்.

அதனால் 1 – 0 (3) என்ற கணக்கில் கோப்பையை வென்று நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் விராட் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாமலேயே சாய்த்த இந்தியா 2024 டி20 உலக கோப்பை பயணத்தை இளம் வீரர்களுடன் வெற்றியுடன் துவங்கியுள்ளது. இந்த வெற்றிக்கு 4 விக்கெட்டுகளை எடுத்துமுக்கிய பங்காற்றிய முகமது சிராஜ் ஆட்டநாயகன் விருது வென்றார். மேலும் 2வது போட்டியில் சதமடித்து இத்தொடரை வெல்ல முக்கிய பங்காற்றிய சூரியகுமார் யாதவ் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

- Advertisement -

முன்னதாக கடைசியாக கடந்த 2020ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு பயணித்த இந்தியா 5 போட்டிகள் கொண்ட மெகா டி20 தொடரில் பங்கேற்றது. அதில் 2 சூப்பர் ஓவர் போட்டிகள் உட்பட 5 போட்டிகளிலும் நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் மண்ணை கவ்வ வைத்த இந்தியா சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் 5 போட்டிகள் கொண்ட ஒரு தொடரை 5 – 0 என்ற கணக்கில் வென்ற முதல் அணி என்ற உலக சாதனையை படைத்தது ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம்.

அதை தொடர்ந்து நடைபெற்ற இத்தொடரிலும் தோல்வியடையாமல் வெற்றியை பதிவு செய்துள்ள இந்தியா சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் நியூசிலாந்து மண்ணில் தொடர்ந்து அதிக வெற்றிகளை பதிவு செய்த அணி என்ற நியூஸிலாந்தின் சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்துள்ளது. அந்த பட்டியல்:
1. இந்தியா : 6* வெற்றிகள் (2020 – 2022)*
2. நியூசிலாந்து : 5 வெற்றிகள் (2016 – 2017)

மொத்தத்தில் நியூசிலாந்து மண்ணில் நியூசிலாந்து அணியை விட ஆதிக்கம் செலுத்தும் அணியாக திகழும் இந்தியா அந்நாட்டில் மூவர்ணக் கொடியை பட்டொளி வீசி பறக்க வைத்து விட்டுள்ளது ரசிகர்களுக்கு பெருமையான அம்சமாகும்.

Advertisement