
வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக பங்கேற்று வந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் 4 போட்டிகளின் முடிவில் 3 – 1* என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றியது. அந்த நிலைமையில் ஆகஸ்ட் 7-ஆம் தேதியான நேற்று இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு ஃப்ளோரிடாவில் நடைபெற்ற சம்பிரதாய கடைசி போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், புவனேஸ்வர் குமார் உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டதால் ஹர்டிக் பாண்டியா இந்தியாவை வழி நடத்தினார். அதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டு 188/7 ரன்கள் சேர்த்தது.
நீண்ட நாட்களுக்கு பின் தொடக்க வீரராக களமிறங்கிய இஷான் கிசான் 11 (13) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்த நிலையில் அடுத்து களமிறங்கிய தீபக் ஹூடாவுடன் ஜோடி சேர்ந்த மற்றொரு தொடக்க வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் அதிரடியாக பேட்டிங் செய்து 2-வது விக்கெட்டுக்கு 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்தார். இந்த ஜோடியில் 3 பவுண்டரி 2 சிக்சருடன் தீபக் ஹூடா 38 (25) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்த சில ஓவர்களில் 8 பவுண்டரி 2 சிக்சருடன் அரைசதம் அடித்த ஸ்ரேயாஸ் அய்யர் 64 (50) ரன்களில் அவுட்டானார்.
அசத்திய பவுலர்கள்:
அந்த நிலைமையில் அடுத்து வந்த சஞ்சு சாம்சன் 15 (11) ரன்களிலும் தினேஷ் கார்த்திக் 12 (9) ரன்களிலும் அவுட்டாகி ஏமாற்றினர். இருப்பினும் கடைசி நேரத்தில் கேப்டன் ஹர்திக் பாண்டியா 2 பவுண்டரி 2 சிக்சருடன் 28 (16) ரன்கள் விளாசி நல்ல பினிஷிங் கொடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஓடீன் ஸ்மித் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 189 ரன்களை துரத்திய வெஸ்ட் இண்டீசுக்கு ஆச்சரியப்படும் வகையில் தொடக்க வீரராக களமிறங்கிய ஜேசன் ஹோல்டர் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுக்க மற்றொரு தொடக்க வீரர் சமர் ப்ரூக்ஸ் 13 (13) ரன்களிலும் அடுத்து களமிறங்கிய டேவோன் தாமஸ் 10 (11) ரன்களிலும் அவுட்டாகி மேலும் அதிர்ச்சி கொடுத்தனர்.
போதைகுறைக்கு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் நிக்கோலஸ் பூரன் மீண்டும் 3 (6) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றியதால் 50/4 என மோசமான தொடக்கத்தை பெற்ற அந்த அணிக்கு நடுவரிசையில் சிம்ரோன் ஹெட்மையர் 5 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 56 (35) ரன்கள் குவித்து வெற்றி போராடினார். ஆனால் ரோவ்மன் போவல் 9 (13) என அடுத்து வந்த வீரர்கள் அனைவரும் இந்தியாவின் தரமான பந்துவீச்சில் வந்த வாக்கிலேயே ஒற்றை இலக்க ரன்களில் பெவிலியன் திரும்பினர்.
வெற்றியுடன் நிறைவு:
அதனால் 15.4 ஓவரில் வெறும் 100 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீசை சுருட்டிய இந்தியா சார்பில் பந்துவீச்சில் ரவி பிஷ்னோய் 4 விக்கெட்டுகளையும் குல்தீப் யாதவ் மற்றும் அக்சர் பட்டேல் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். அதன் காரணமாக 88 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்ற இந்தியா 4 – 1 (5) என்ற கணக்கில் இந்த டி20 தொடரையும் வென்று சாதித்துள்ளது. இந்த வெற்றிக்கு 3 விக்கெட்டுகள் எடுத்த அக்சர் பட்டேல் ஆட்ட நாயகனாகவும் தொடர் முழுவதும் கலக்கிய அர்ஷிதீப் சிங் தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டனர்.
முன்னதாக இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் நிகழ்ந்த ஒருநாள் தொடரில் ஷிகர் தவான் தலைமையிலான இளம் இந்தியா வரலாற்றிலேயே முதல் முறையாக வெஸ்ட் இண்டீசை அதன் சொந்த மண்ணில் 3 – 0 (3) என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்து சாதனை படைத்தது. அந்த நிலைமையில் இந்த டி20 தொடரில் ரோகித் சர்மா திரும்பியதும் மேலும் அட்டகாசமாக செயல்பட்ட இந்தியா 4 – 1 (5) என்ற கணக்கில் கோப்பையை வென்று இந்த சுற்றுப் பயணத்தை வெற்றியுடன் நிறைவு செய்துள்ளது. இந்த தொடரில் சுழற்சி முறையில் வாய்ப்பு பெற்ற நிறைய இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருங்கால நட்சத்திரங்களாக தங்களிம் அடையாளத்தை வெளிப்படுத்தினர்.
உலகசாதனையுடன் நிறைவு:
முன்னதாக இந்த சுற்றுப் பயணத்தில் ஏற்கனவே ஒருசில வரலாற்றுச் சாதனைகளைப் படைத்த இந்தியா 5வது போட்டியில் பெற்ற வெற்றியையும் சேர்த்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2 வெவ்வேறு அணிகளுக்கு எதிராக அதிக வெற்றிகளை பதிவு செய்த அணி என்ற புதிய உலக சாதனையும் படைத்துள்ளது.
1. வரலாற்றில் வெஸ்ட் இண்டீசை 25 டி20 போட்டிகளில் எதிர்கொண்ட இந்தியா அதில் உலகிலேயே மற்ற அணிகளை காட்டிலும் அதிகபட்சமாக 17 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. அதேபோல் அண்டை நாடான இலங்கைக்கு எதிராகவும் பங்கேற்ற 25 போட்டிகளில் உலகில் உள்ள மற்ற அணிகளை காட்டிலும் அதிகபட்சமாக 17 வெற்றிகளை இந்தியா பதிவு செய்துள்ளது.
இதையும் படிங்க : IND vs WI : அவங்க இப்படி ஆடுனா. நாங்க எப்படி ஜெயிக்குறது? – தோல்விக்கு பிறகு பூரான் பேசியது என்ன?
2. இந்தியாவைத் தவிர உலகில் வேறு எந்த அணிகளும் 2 வெவ்வேறு எதிரணிகளுக்கு எதிராக 17 வெற்றிகளை பதிவு செய்தது கிடையாது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக அதிகபட்சமாக ஜிம்பாப்வேக்கு எதிராக பாகிஸ்தான் 16 வெற்றிகளை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.