முக்கியமான போட்டியில் வலுவான வெ.இண்டிசை பந்தாடிய இந்திய பெண்கள் அணி பெற்ற மாஸ் வெற்றி – எப்படி நடந்தது?

ind w
- Advertisement -

நியூஸிலாந்து நாட்டில் ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2022 கிரிக்கெட் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 4-ஆம் தேதியன்று துவங்கிய இந்த உலகக் கோப்பையில் போட்டியை நடத்தும் நியூசிலாந்து, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து உள்ளிட்ட உலகின் டாப் 8 அணிகள் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

ICC Women's World Cup 2022

- Advertisement -

இதில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை 107 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றியுடன் இந்தத் தொடரை துவங்கியது. இருப்பினும் நியூசிலாந்துக்கு எதிரான 2வது போட்டியில் 62 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாப தோல்வி அடைந்தது.

முக்கியமான வெஸ்ட்இண்டீஸ் போட்டி:
இதை அடுத்து வெற்றி பெற்றால் மட்டுமே நாக் – அவுட் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நிலைமையில் தனது 3-வது லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை இந்தியா எதிர் கொண்டது. இதில் முதல் போட்டியில் வலுவான நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ செய்து 2-வது போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை தோற்கடித்த வெஸ்ட்இண்டீஸ் 3-வது போட்டியில் இந்தியாவை எதிர்கொண்டது.

Women's World Cup 2022 Harmanpreet Kaur

வலுவான அணிகளை தோற்கடித்து அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இன்று இந்திய நேரப்படி அதிகாலை 6.30 மணிக்கு துவங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதை அடுத்து களமிறங்கிய இந்தியாவிற்கு தொடக்க வீராங்கனை யஸ்டிகா பாட்டியா அதிரடியாக வெறும் 21 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க அடுத்து வந்த கேப்டன் மிதாலி ராஜ் 5 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.

- Advertisement -

தெறிக்கவிட்ட மந்தனா – ஹர்மன்ப்ரீட் கௌர்:
அடுத்து வந்தே தீப்தி சர்மா 15 ரன்களில் அவுட்டானதால் 78/3 என சுமாரான தொடக்கம் பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே தடுமாறியது. இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து நங்கூரமாக விளையாடிய மற்றொரு தொடக்க வீரரான ஸ்மிருதி மந்தனா உடன் ஜோடி சேர்ந்த துணை கேப்டன் ஹர்மன்பிரீட் கவூர் வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை வெளுத்து வாங்கினார். ஆரம்பத்தில் மெதுவாக விளையாடிய இந்த ஜோடி நேரம் செல்ல செல்ல எதிரணி பந்துவீச்சாளர்களை பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக பறக்கவிட்டு அதிரடி காட்டியது.

Women's World Cup

இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனைகள் விழி பிதுங்கி நிற்க மறுபுறம் தொடர்ந்து பட்டையை கிளப்பிய இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 184 ரன்கள் குவித்து இந்தியாவை நல்ல நிலைமைக்குக் கொண்டு வந்தது. இதில் 119 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உட்பட சதமடித்த ஸ்மிருதி மந்தனா 123 ரன்கள் விளாசி அவுட்டானார். அவருடன் அதிரடியாக பேட்டிங் செய்த ஹர்மன்பிரீட் கவூர் 107 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உட்பட சதம் விளாசி 109 ரன்கள் எடுத்தார். இவர்களின் அதிரடியான ஆட்டத்தால் 50 ஓவர்களில் இந்தியா 317/8 ரன்களை எடுத்தது.

- Advertisement -

இந்தியா மாஸ் வெற்றி:
இதை அடுத்து 318 என்ற கடினமான இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்க வீராங்கனைகள் டோட்டின் மற்றும் மேத்தியூஸ் ஆகியோர் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 100/0 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அந்த அணிக்கு அபார தொடக்கம் கொடுத்தனர். ஆனால் அப்போது சுதாரித்துக் கொண்ட இந்திய வீராங்கனைகள் டோட்டின் 62 ரன்களிலும் மேத்தியூஸ் 43 ரன்களிலும் அடுத்தடுத்து அவுட் செய்து போட்டியை இந்தியாவின் பக்கம் திருப்பினர்.

Women's World Cup 2022 IND vs PAK

அடுத்து வந்த வீராங்கனைகள் இந்தியாவின் அற்புதமான பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் சொற்ப ரன்களில் அவுட் ஆனதால் 40.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த வெஸ்ட் இண்டீஸ் வெறும் 162 ரன்களுக்கு சுருண்டது. ஒரு கட்டத்தில் 100/0 என இருந்த அந்த அணி 162 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்ய முடியாமல் போனது அந்த அணி ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்தது.

- Advertisement -

இதன் காரணமாக 155 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்ற இந்தியா இந்த உலக கோப்பையில் 2வது வெற்றியை பதிவு செய்து அசத்தியது. இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஸ்னே ராணா 3 விக்கெட்டுகளையும் மேக்னா சிங் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். இந்த மாபெரும் வெற்றிக்கு 123 ரன்கள் விளாசி வித்திட்ட ஸ்மிருதி மந்தனா ஆட்டநாயகி விருதை வென்று அசத்தினார்.

இதையும் படிங்க : வெ.இண்டீசை தோற்கடித்த இந்தியா நிகழ்த்திய மொத்த சாதனைகளின் பட்டியல் – இவ்வளவு சாதனைகளா?

இதன் காரணமாக இதுவரை பங்கேற்ற 3 போட்டிகளில் 2 வெற்றிகளை பதிவு செய்துள்ள இந்தியா புள்ளி பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தை பதிவு செய்து நாக்அவுட் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது. இதையடுத்து இந்த உலக கோப்பையில் இந்தியா தனது 4-வது லீக் போட்டியில் வலுவான நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை வரும் மார்ச் 12-ம் தேதி மௌன்ட் மௌங்கனி நகரில் எதிர்கொள்ள உள்ளது.

Advertisement