8.22 ரன்ரேட்.. பஸ்பாலை ஊதித்தள்ளிய இந்தியா.. ஆஸியை முந்தி 147 வருடத்தில் யாரும் செய்யாத உலக சாதனை

IND vs BAN 2
- Advertisement -

கான்பூரில் வங்கதேசத்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி 2வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. செப்டம்பர் 27ஆம் தேதி துவங்கிய அப்போட்டியில் மழையால் முன்னதாகவே முடிந்த முதல் நாள் முடிவில் வங்கதேசம் 107-3 ரன்கள் எடுத்திருந்தது. 2, 3வது நாள் ஆட்டங்கள் மழையால் ரத்து செய்யப்பட்டதால் எப்படியும் இப்போட்டி டிராவில் முடிவடையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

அந்த நிலையில் 4வது நாளில் மழை வழிவிட்டதை தொடர்ந்து அதிரடியாக பந்து வீசிய இந்திய அணி வங்கதேசத்தை 233 ரன்களுக்கு சுருட்டியது. அதிகபட்சமாக மோனிமுல் ஹைக் 107* ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து ஒன்றரை நாட்களில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கிய இந்தியா சரவெடியாக விளையாடி 285-9 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

- Advertisement -

சரவெடியாக இந்தியா:

அந்த ஆட்டத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 50, 100, 150, 200, 250 ரன்களை குவித்த அணியாக இந்தியா 5 உலக சாதனைகளையும் படைத்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 72, விராட் கோலி 47, கேஎல் ராகுல் 68 ரன்கள் எடுத்த நிலையில் வங்கதேசத்துக்கு அதிகபட்சமாக மெஹதி ஹசன், ஷாகிப் அல் ஹஸன் தலா 4 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

அதன் பின் 56 ரன்கள் பின்தங்கிய நிலையில் விளையாடும் வங்கதேசம் 4வது நாள் முடிவில் 26-2 ரன்கள் எடுத்துள்ளது. ஜாகிர் ஹசன் 10, ஹசன் மஹ்முத் 4 ரன்களில் அஸ்வின் சுழலில் அவுட்டான நிலையில் களத்தில் சாதமன் இஸ்லாம் 7*, மோனிமுல் ஹைக் 0* ரன்களுடன் உள்ளனர். தற்போதைய நிலையில் 26 ரன்கள் முன்னிலை வகிக்கும் இந்தியா 5வது நாளில் வேகமாக வங்கதேசத்தை அவுட்டாக்கி பின்னர் இலக்கை சேசிங் செய்து வெற்றி பெற போராட உள்ளது.

- Advertisement -

இந்தியாவின் உலக சாதனை:

முன்னதாக பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல அதிரடியாக விளையாடுவதாக மார் தட்டி வருகிறது. அதற்கு பஸ்பால் என்ற பெயர் சூட்டிக்கொண்ட அந்நாட்டு ரசிகர்கள் எதிரணிகளை கலாய்ப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அந்த சூழ்நிலையில் இப்போட்டியில் இந்தியா 34.4 ஓவரில் 8.22 ரன்ரேட்டில் 285-9 ரன்கள் குவித்தது.

இதையும் படிங்க: 10 வருட கனவு.. இதுக்கு சரிப்பட்டு வர மாட்டேன்னு சொன்னாங்க.. அதையும் தாண்டி சாதிச்சுட்டேன்.. ஜடேஜா பேட்டி

இதன் வாயிலாக 147 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் 200+ ரன்கள் அடிக்கப்பட்ட ஒரு இன்னிங்ஸில் 8க்கும் மேற்பட்ட ரன்ரேட்டில் பேட்டிங் செய்த முதல் அணி என்ற உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது. இந்தியாவை தவிர்த்து பஸ்பால் என்று புகழ்பாடும் இங்கிலாந்து உட்பட வேறு எந்த அணியும் வரலாற்றில் 8க்கும் மேற்பட்ட ரன்ரேட்டில் 200+ ஸ்கோர் அடித்ததில்லை. அந்தப் பட்டியல்:
1. இந்தியா – 8.22, வங்கதேசத்துக்கு எதிராக, 2024* (24.4 ஓவரில் 285-9)
2. ஆஸ்திரேலியா – 7.53, பாகிஸ்தானுக்கு எதிராக, சிட்னி, 2017 (32 ஓவரில் 241-2)
3. இங்கிலாந்து – 7.36, பாகிஸ்தானுக்கு எதிராக ராவில்பிண்டி, 2022 (35.5 ஓவரில் 264-7)

Advertisement