இலங்கை, இந்தியா, தென்னாப்பிரிக்க அணிகள் முத்தரப்பு மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றன. இலங்கையில் நடைபெறும் அந்தத் தொடரில் ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையில் விளையாடும் இந்தியா முதல் லீக் சுற்றில் இலங்கை, தென்னாப்பிரிக்காவை அடுத்தடுத்து தோற்கடித்தது. அடுத்ததாக நடைபெற்ற 2வது சுற்றில் இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்தது.
அதனால் பின்னடைவை சந்தித்த இந்திய அணி மே 7ஆம் தேதி கொழும்புவில் தென்னாப்பிரிக்காவை தங்களது கடைசி லீக் போட்டியில் எதிர்கொண்டது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 50 ஓவரில் அபாரமாக விளையாடி 337/9 ரன்களை குவித்து அசத்தியது.
இந்தியா அசத்தல்:
இந்திய அணிக்கு பிரித்திகா ராவல் 1, ஹர்லின் தியோல் 4 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். இருப்பினும் நட்சத்திர வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா நங்கூரமாக விளையாடி அரை சதத்தை அடித்து 51 (63) ரன்கள் குவித்தார். அவருடன் சேர்ந்து விளையாடிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் 28 (20) ரன்னில் அவுட்டானார். அவர்களை விட மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடிய ஜெமிமா ரோட்ரிகஸ் சதத்தை அடித்து 123 (101) ரன்கள் குவித்தார்.
அவருடன் சேர்ந்து விளையாடிய தீப்தி சர்மா சதத்தை நழுவ விட்டாலும் 93 (84) ரன்கள் விளாசி இந்தியா 300 ரன்கள் தாண்ட உதவியினார். இறுதியில் ரிச்சா கோஸ் 20 (12) ரன்களை விளாசி ஃபினிஷிங் கொடுத்தார். தென்னாப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக க்ளாஸ், டீ க்ளெர்க், எம்ல்பா தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
ஃபைனலில் இந்தியா:
அடுத்து விளையாடிய தென்னாபிரிக்க அணிக்கு லாரா குடால் 4, தன்சிம் பிரிட்ஸ் 26, மியான் ஸ்மித் 39, நொண்டுமிசோ சங்கேஸ் 36, சினலோ ஜாஃப்டா 21 என முக்கிய வீராங்கனைகள் பெரிய ரன்களை எடுக்கத் தவறினர். அதனால் மிடில் ஆர்டரில் டெர்க்சன் 81, கேப்டன் சோலே ட்ரியன் 67 ரன்களை எடுத்தும் 50 ஓவரில் தென்னாப்பிரிக்கா 314/7 ரன்கள் மட்டுமே எடுத்து மீண்டும் தோல்வியை சந்தித்தது.
இதையும் படிங்க: 12 முறை அடைந்த ஏமாற்றம்.. 6 வருடங்களுக்கு பின் முதன்முறையாக சோகத்தை மாற்றிய சி.எஸ்.கே – விவரம் இதோ
அதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய மகளிரணிக்கு அதிகபட்சமாக தீப்தி சர்மா 2, அமன்ஜோத் கௌர் 3 விக்கெட்டுகளை எடுத்தனர். இதையும் சேர்த்து 4 லீக் போட்டிகளில் 3 வெற்றிகளைப் பெற்ற இந்தியா 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது. அதனால் வரும் மே 11ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொழும்புவில் நடைபெறும் இறுதிப்போட்டியில் 2வது இடத்தைப் பிடித்துள்ள இலங்கை அணியை மாபெரும் இறுதிப் போட்டியில் இந்தியா சந்திக்கிறது.



