இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 57-வது லீக் ஆட்டம் நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அஜின்க்யா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணியின் கேப்டன் அஜின்க்யா ரஹானே முதலில் தங்களது அணி பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார்.
6 ஆண்டுகால சோகத்தை முடிவுக்கு கொண்டுவந்த சி.எஸ்.கே :
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய கொல்கத்தா அணியானது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் குவித்தது. கொல்கத்தா அணி சார்பாக அதிகபட்சமாக கேப்டன் அஜின்க்யா ரஹானே 48 ரன்களையும், ஆண்ட்ரே ரசல் 38 ரன்கள் குவித்தனர்.
பின்னர் 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது துவக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 60 ரன்களிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பின்னர் பிரேவிஸ் மற்றும் ஷிவம் துபே ஆகியோரது அட்டகாசமான பார்ட்னர்ஷிப் காரணமாக வெற்றியை நோக்கி முன்னேறியது.
ஒரு கட்டத்தில் பிரேவிஸ் 52 ரன்களில் ஆட்டமிழந்தாலும், அதன்பின்னர் அதிரடி காட்டிய ஷிவம் துபே சென்னை அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். இறுதியில் சென்னை அணி 19.4 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் குவித்து 2 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் சென்னை அணி சார்பாக அதிகபட்சமாக பிரேவிஸ் 52 ரன்களையும், ஷிவம் துபே 45 ரன்களையும் குவித்தனர்.
இந்நிலையில் நேற்று இந்த போட்டியில் அடைந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இந்த தொடரில் தங்களது மூன்றாவது வெற்றியை பதிவு செய்ததோடு 6 ஆண்டுகள் தொடர்ந்து வந்த சோகத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.
இதையும் படிங்க : டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று வெளியேறிய ரோஹித் சர்மாவை வாழ்த்திய பி.சி.சி.ஐ – விவரம் இதோ
அதாவது கடந்த 2019 ஆம் ஆண்டு 180 ரன்களுக்கு மேல் கொண்ட இலக்கினை வெற்றிகரமாக சேசிங் செய்த சென்னை அணி அதன் பின்னர் கடந்த 6 ஆண்டுகளில் 12 முறை 180-க்கு மேல் இருந்த இலக்கினை எட்ட முடியாமல் தோல்வியை சந்தித்து வந்தது. இந்நிலையில் நேற்று 180 ரன்கள் என்ற இலக்கினை எட்டிய சென்னை அணி அந்த 6 ஆண்டுகால சோகத்தை முடிவுக்கு கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



