ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 24ஆம் தேதி நடைபெற்ற சூப்பர் 4 போட்டியில் இந்தியா வங்கதேச அணிகள் மோதின. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு துபாயில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு 77 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தைக் கொடுத்த சுப்மன் கில் 29 (19) ரன்களில் அவுட்டானார்.
மறுபுறம் அபிஷேக் ஷர்மா அதிரடியாக விளையாடிய போதிலும் எதிர்ப்புறம் வந்த சிவம் துபே 2 (3) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். இந்தப் பக்கம் அபிஷேக் ஷர்மா வங்கதேச பவுலர்களை வெளுத்து வாங்கி 25 பந்தில் அரை சதத்தை அடித்தார். ஆனால் எதிர்ப்புறம் வந்த கேப்டன் சூரியகுமார் தடுமாற்றமாக விளையாடினார்.
இந்தியா தடுமாற்றம்:
அதோடு மறுபுறம் 6 பவுண்டரி 5 சிக்ஸரை அடித்து பட்டாசாக விளையாடிக் கொண்டிருந்த அபிஷேக் சர்மா 75 (37) ரன்களில் ரன் அவுட்டாக முக்கிய பங்காற்றிய சூரியகுமார் அதே ஓவரில் 5 (11) ரன்னில் பெவிலியன் திரும்பினார். போதாகுறைக்கு திலக் வர்மா 5 (7) ரன்னில் அவுட்டானதால் 129/5 என இந்தியா தடுமாறியது. அப்போது பொறுப்புடன் விளையாடிய ஹர்திக் பாண்டியா 38 (29) ரன்கள் குவித்து அசத்தினார்.
இறுதியில் அக்சர் பட்டேல் 10* (15) ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் இந்தியா போராடி 168/6 ரன்களை எடுத்தது. வங்கதேசத்துக்கு அதிகபட்சமாக ரிசாத் ஹொசைன் 2 விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்து விளையாடிய வங்கதேசத்துக்கு ஓப்பனிங் பேட்ஸ்மேன் சாய்ப் ஹசன் சிறப்பாக அதிரடியாக விளையாடினார்.
ஃபைனலில் இந்தியா:
ஆனால் மறுபுறம் தடுமாறிய தன்ஜீத் ஹசன் ஒரு ரன்னில் ஜஸ்ப்ரித் பும்ரா வேகத்தில் அவுட்டானார். அடுத்து வந்த பர்வேஸ் ஹொசைன் 21 ரன்னில் அவுட்டாகி சென்றார். அதைத்தொடர்ந்து வந்த தவ்ஹீத் ஹ்ரிடாய் 7, சமீம் ஹொசைன் 0, கேப்டன் ஜாகீர் அலி 4, முகமது சைபுத்தீன் 4 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை உண்டாக்கினர். இறுதியில் மறுபுறம் தனியாளாக போராடிய சாய்ப் ஹசன் 69 (51) ரன்களில் அவுட்டானார்.
அதனால் 19.3 ஓவரில் வங்கதேசத்தை 127 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் காரணமாக 2025 ஆசியக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக இந்தியா தகுதி பெற்று அசத்தியது. அதே காரணத்தால் இலங்கை சூப்பர் 4 சுற்றுடன் வெளியேறியது.
இதையும் படிங்க: உண்மையில் இந்த விதிமுறையை மீறிய பாகிஸ்தானை ஐசிசி தண்டிக்கனும்.. இந்தியா மீது தப்பில்ல.. கவாஸ்கர் புகார்
இந்த வெற்றிக்கு அதிகபட்சமாக வருண் சக்கரவர்த்தி 2, ஜஸ்ப்ரித் பும்ரா 2, குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றினர். இப்போட்டியில் சாய்த்த 3 விக்கெட்டுகளையும் சேர்த்து ஆசியக் கோப்பையில் அதிக (31) விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை குல்தீப் யாதவ் படைத்துள்ளார். இதற்கு முன் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா 29 விக்கெட்டுகள் எடுத்ததே முந்தைய சாதனை.



