தொடர்ந்து 5வது ஃபைனல்.. அண்டர்-19 உ.கோ வரலாற்றில் மாஸ் காட்டும் இந்தியா.. 6வது முறையாக சாதிக்குமா?

India U19 WC Final 2024
- Advertisement -

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் அண்டர்-19 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. வருங்காலத்திற்கு தேவையான தரமான வீரர்களை முன்கூட்டியே அடையாளப்படுத்தும் இந்த தொடரில் உதய் சஹரன் தலைமையில் களமிறங்கிய நடப்புச் சாம்பியன் இந்தியா தங்களுடைய லீக் சுற்றில் வங்கதேசம், அயர்லாந்து மற்றும் அமெரிக்க அணிகளை தோற்கடித்து சூப்பர் 6 சுற்றுக்கு சென்றது.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற சூப்பர் 6 சுற்றில் வலுவான நியூசிலாந்தையும் வீழ்த்தி நேபாளை எளிதாக தோற்கடித்த இந்தியா அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. அந்த நிலையில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா நிர்ணயித்த 245 ரன்களை துரத்திய இந்தியா போராடி வெறும் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஃபைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது.

- Advertisement -

6வது முறை வெல்லுமா:
பேனோனி நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் 32/4 என தடுமாறிய இந்திய அணிக்கு கேப்டன் உதய் சஹரன் 84, சச்சின் தாஸ் 95 ரன்கள் குவித்து தென்னாபிரிக்காவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடிக்க உதவினர். இதன் வாயிலாக அண்டர்-19 உலகக் கோப்பை வரலாற்றில் 9வது முறையாக இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. சொல்லப்போனால் அண்டர்-19 உலகக்கோப்பை கடந்த 1988 முதல் நடைபெற்று வருகிறது.

அப்போதிலிருந்து இந்த வருடத்தையும் சேர்த்து இதுவரை மொத்தம் 15 அண்டர்-19 உலகக் கோப்பைகள் நடைபெற்றுள்ளது. அந்த 15 தொடர்களில் இந்தியா தான் அதிகபட்சமாக 9* முறை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. குறிப்பாக 2016, 2018, 2020, 2022, 2024* என கடைசியாக நடந்த 5 அண்டர்-19 உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளுக்கு தொடர்ச்சியாக இந்தியா தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது. உலகில் இந்தியாவை தவிர்த்து வேறு எந்த அணியும் 3 முறை கூட தொடர்ச்சியாக ஃபைனலுக்கு தகுதி பெற்றதில்லை.

- Advertisement -

மேலும் ஏற்கனவே தகுதி பெற்ற 8 ஃபைனல்களில் 2000, 2008, 2012, 2018, 2022 ஆகிய 5 வருடங்களில் முறையே முகமது கைப், விராட் கோலி, உமுக் சந்த், பிரிதிவி ஷா, யாஷ் துள் தலைமையில் இந்தியா 5 சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளது. அந்த வகையில் அண்டர்-19 உலகக் கோப்பையை அதிக முறை வென்ற அணி என்ற உலக சாதனையும் இந்தியா படைத்துள்ளது. இந்தியாவை தவிர்த்து வேறு எந்த அணியும் 4 கோப்பைகளை வென்றதில்லை. அதிகபட்சமாக ஆஸ்திரேலியா 3 கோப்பைகளை வென்றுள்ளது.

இதையும் படிங்க: 32/4 டூ 203/5.. இங்கிலாந்தின் 25 வருட சாதனையை தகர்த்து புதிய படைத்த இந்தியா.. 6வது கோப்பை வெல்லுமா?

அந்த வகையில் சீனியர் கிரிக்கெட்டில் 6 உலகக் கோப்பைகளை வென்ற ஆஸ்திரேலியாவை போல அண்டர்-19 கிரிக்கெட்டில் இந்தியா முடி சூடா அரசனாக திகழ்கிறது என்றே சொல்லலாம். இதைத் தொடர்ந்து நாளை நடைபெறும் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் 2வது அரையிறுதி போட்டியில் வெல்லும் அணியுடன் பிப்ரவரி 11ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா மோதுகிறது. அதில் பரம எதிரிகள் ஆஸ்திரேலியா அல்லது பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா 6வது கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

Advertisement