IND vs AUS : ஹே எப்புட்றா? இந்தியாவை விட ஆஸிக்கு அதிகமாக சுழன்ற நாக்பூர் பிட்ச் – ஆனாலும் சரிந்து இந்தியா அசத்தியது எப்படி

IND vs AUS Rohit
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் 4 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் களமிறங்கியுள்ள இந்தியா குறைந்தது 3 போட்டிகளை வென்று ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறும் லட்சியத்துடன் விளையாடுகிறது. ஆனால் அதற்கு சவால் கொடுக்க வந்துள்ள ஆஸ்திரேலியா கடைசி 2 தொடர்களில் தங்களை சொந்த மண்ணில் தோற்கடித்த இந்தியாவை இம்முறை அவர்களது சொந்த மண்ணில் தோற்கடித்து 2004க்குப்பின் டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்புடன் களமிறங்கியது. ஆனால் அதற்காக இந்தியா வேண்டுமென்றே வெற்றி பெறுவதற்கு சுழலுக்கு சாதகமான மைதானங்களை அமைத்துள்ளதாக ஸ்டீவ் ஸ்மித் முதல் இயன் ஹீலி வரை நிறைய ஆஸ்திரேலியர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

அந்த நிலைமையில் பிப்ரவரி 9ஆம் தேதியன்று நாக்பூரில் துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் சுழலுக்கு சாதகமாக இருந்த மைதானத்தில் ஆரம்பத்திலேயே ரன்களை குவிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. ஆனால் புதிய பந்தை ஸ்விங் செய்த முகமது சிராஜ் மற்றும் முகமது ஷமி ஆகியோர் ஆரம்பத்திலேயே உஸ்மான் கவாஜா மற்றும் டேவிட் வார்னர் ஆகியோரை அடுத்தடுத்த ஓவர்களில் 1 ரன்னில் காலி செய்து மிரட்டலை கொடுத்தனர்.

- Advertisement -

ஹே எப்புட்றா:
அதனால் 2/2 என தடுமாறிய அந்த அணியை அடுத்து களமிறங்கிய உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஸ்ஷேன் மற்றொரு அனுபவ வீரர் ஸ்டீல் ஸ்மித்துடன் இணைந்து நங்கூரமாக நின்று சரிவை சரி செய்ய போராடினார். குறிப்பாக அஷ்வின், அக்சர் படேல் ஆகியோரை சிறப்பாக எதிர்கொண்டு தனது தரத்தை நிரூபித்த அவர் 49 ரன்கள் எடுத்து சவாலை கொடுத்த போது அவுட்டாக்கிய ஜடேஜா அடுத்து வந்த மாட் ரென்சாவை டக் அவுட் செய்தார். அத்துடன் மறுபுறம் சவாலை கொடுக்க முயன்ற ஸ்மித்தையும் 37 ரன்களில் காலி செய்த ஜடேஜா பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்பை 31 ரன்களில் அவுட்டாக்கிய நிலையில் இடையே அதிரடி காட்ட முயன்ற அலெக்ஸ் கேரியை அஸ்வின் 36 (33) ரன்களில் போல்ட்டாக்கினார்.

அதனால் 82/2 என ஓரளவு நல்ல நிலையில் இருந்த ஆஸ்திரேலியா மடமடவென விக்கெட்டுகளை இழந்து 177 ரன்களுக்கு சுருண்டது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை எடுத்த ரவீந்திர ஜடஜா மாஸ் கம்பேக் கொடுத்த நிலையில் அஷ்வின் 3 விக்கெட்டுகள் சாய்த்தார். அப்படி மைதானம் சுழலுக்கு சாதகமாக இருக்கிறது என்பதை நன்கு உணர்ந்த கேப்டன் ரோகித் சர்மா அடுத்ததாக பேட்டிங் செய்ய களமிறங்கிய போது மெதுவாக விளையாடினால் வேலைக்காகாது என்று கருதி பட் கமின்ஸ் வீசிய முதல் ஓவரிலேயே அடுத்தடுத்த பவுண்டரிகளை பறக்க விட்டார்.

- Advertisement -

அதே சீரான வேகத்தில் அதிரடி காட்டிய ரோகித் சர்மா 9 பவுண்டரி 1 சிக்சருடன் 56* (69) ரன்கள் குவித்து இந்தியாவுக்கு நல்ல தொடக்கம் கொடுத்தார். இருப்பினும் மறுபுறம் சுமாரான பார்மில் தவிக்கும் ராகுல் தடவலாக செயல்பட்டு பெயருக்காக 76 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து கடைசி நேரத்தில் 20 (71) ரன்களில் அவுட்டானார். அடுத்ததாக அஸ்வின் பேட்டிங் செய்ய களமிறங்கிய நிலையில் முதல் நாள் ஆட்டமும் முடிவுக்கு வந்தது. தற்போது வரை 77/1 ரன்கள் எடுத்துள்ள இந்தியா இன்னும் 100 ரன்கள் பின்தங்கியுள்ளதால் இப்போட்டியில் தற்சமயத்தில் வலுவான நிலையில் உள்ளது.

இப்போட்டியின் முதல் நாளில் நாக்பூர் பிட்ச் இந்திய ஸ்பின்னர்களுக்கு சராசரியாக 2.9 டிகிரி சுழன்று நன்றாக கை கொடுத்தது. ஆனால் ஆஸ்திரேலிய ஸ்பின்னர்களுக்கு 3.4 டிகிரி சுழன்று அதிகமாக கை கொடுத்தது. இதிலிருந்து பிட்ச் இந்தியாவை விட ஆஸ்திரேலியாவுக்கு தான் அதிகமாக கை கொடுத்தது தெளிவாகத் தெரிகிறது. ஆனாலும் ஜடேஜா, அஷ்வின் போல அதிகப்படியான வேரியசன்களை பயன்படுத்தி பந்து வீசாத காரணத்தால் எந்த இடத்திலுமே ஆஸ்திரேலிய ஸ்பின்னர்கள் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை அதிக விக்கெட்களையும் எடுக்கவில்லை.

இதையும் படிங்க: IND vs AUS : ஹே எப்புட்றா? இந்தியாவை விட ஆஸிக்கு அதிகமாக சுழன்ற நாக்பூர் பிட்ச் – ஆனாலும் சரிந்து இந்தியா அசத்தியது எப்படி

மறுபுறம் குறைவான சுழலில் நிறைய வேரியஷன்களை பயன்படுத்தியதால் இந்திய ஸ்பின்னர்கள் ராஜாங்கம் நடத்தினர். அது போக சுழலை மெதுவாகத்தான் எதிர்கொள்ள வேண்டும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களின் அணுகுமுறை அந்த அணிக்கு பின்னடைவை கொடுத்தது. ஆனால் அதிரடி காட்டினால் மட்டுமே சுழலை அடக்க முடியும் என்பதை உணர்ந்து சிறப்பாக செயல்பட்ட ரோகித் சர்மா இப்போட்டியின் முதல் நாளன்று இந்தியாவை முன்னிலைப்படுத்தியுள்ளார் என்றே சொல்லலாம்.

Advertisement