IND vs AUS : ஆஸ்திரேலியாவின் பிட்ச் குற்றசாட்டை 2வது நாளில் 3வது முறையாக பொய்யாக்கிய இந்தியா – வலுவான நிலை

IND vs AUS
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோதும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பிப்ரவரி 9ஆம் தேதி நாக்பூரில் துவங்கியது. இத்தொடரில் குறைந்தபட்சம் 3 போட்டிகளை வென்று ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறும் முனைப்புடன் இந்தியா களமிறங்கியுள்ளது. அந்த நிலையில் துவங்கிய இத்தொடரின் முதல் கிரிக்கெட் போட்டியில் சுழலுக்கு சாதகமாக இருந்த மைதானத்தில் ஆரம்பத்திலேயே ரன்களை குவித்து விட வேண்டும் என்ற எண்ணத்துடன் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

ஆனால் அதற்கேற்றார் போல் பேட்டிங் செய்யாத அந்த அணி இந்தியாவின் தரமான பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து வெறும் 177 ரன்களுக்கு சுருண்டது. குறிப்பாக வார்னர், கவாஜா ஆகிய தொடக்க வீரர்கள் தலா 1 ரன்களுக்கு அவுட்டானதால் 2/2 என்ற மோசமான தொடக்கத்தை பெற்ற அந்த அணியை 3வது விக்கெட்டுக்கு 82 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு காப்பாற்றிய மார்னஸ் லபுஸ்ஷேன் 49 ரன்களும் ஸ்டீவ் ஸ்மித் 37 ரன்களும் எடுத்து ஜடேஜாவின் சுழலில் சிக்கினார்.

- Advertisement -

பொய்யாக்கிய இந்தியா:
மாட் ரென்ஷா 0, பீட்டர் ஹேண்ட்ஸ்கோப் 31, அலெக்ஸ் கேரி 36 என அடுத்ததாக வந்த முக்கிய வீரர்களையும் பெரிய ரன்களை எடுக்க விடாமல் சுருட்டிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜடேஜா 5 விக்கெட்டுகளையும் அஷ்வின் 3 விக்கட்டுகளையும் எடுத்து அசத்தினர். அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு 76 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்தாலும் தடவலாக செயல்பட்ட ராகுல் 20 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளிக்க அடுத்ததாக வந்த அஷ்வின் 23 ரன்கள் குவித்து தனது வேலையை கச்சிதமாக செய்து அவுட்டானார்.

இருப்பினும் புஜாரா 7, விராட் கோலி 12, சூரியகுமார் யாதவ் 8 என முக்கிய வீரர்களை காலி செய்த ஆஸ்திரேலியாவின் இளம் ஸ்பின்னர் டோட் முர்ஃபி 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். ஆனால் மறுபுறம் நங்கூரமாக நின்று ஆஸ்திரேலியாவுக்கு சிம்ம சொப்பனமாக மாறிய கேப்டன் ரோகித் சர்மா சுழலுக்கு சாதகமான மைதானத்தில் அபாரமான சதமடித்து 15 பவுண்டரி 2 சிக்சருடன் 120 (212) ரன்கள் குவித்து அவுட்டானார். இருப்பினும் அடுத்து வந்த கேஎஸ் பரத் 8 ரன்னில் அவுட்டானதால் இந்தியா விரைவில் ஆல் அவுட்டாகி விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் அப்போது ஜோடி சேர்ந்த ரவீந்திர ஜடேஜா – அக்சர் பட்டேல் ஆகியோர் நிதானமாக பேட்டிங் செய்து 8வது விக்கெட்டுக்கு 81 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆஸ்திரேலியாவுக்கு தொல்லை கொடுக்கும் வகையில் விளையாடி வருகிறார்கள். அதனால் 2வது நாள் முடிவில் 321/7 ரன்கள் எடுத்துள்ள இந்தியா ஆஸ்திரேலியாவை விட 144 ரன்கள் முன்னிலை பெற்று இப்போட்டியில் வலுவான நிலையை எட்டியுள்ளது. களத்தில் ஜடேஜா 66*, அக்சர் படேல் 52* ரன்களுடன் அரை சதம் கடந்து விளையாடி வருகிறார்கள்.

முன்னதாக இப்போட்டி நடைபெறும் நாக்பூர் மைதானத்தில் தங்களது பேட்டிங் வரிசையில் இருக்கும் 6 இடது கை பேட்ஸ்மேன்களை இடது கை ஸ்பின்னர்களை வைத்து தாக்குவதற்காக இரு புறங்களின் வலது பக்கத்தில் காய்ந்த தன்மையுடன் கூடிய பிட்ச் உருவாக்கப்பட்டுள்ளதாக ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்ட ஆஸ்திரேலியர்கள் விமர்சித்தனர்.

- Advertisement -

1. ஆனால் ஆரம்பத்திலேயே புதிய பந்தை ஸ்விங் செய்த ஷமி மற்றும் சிராஜ் ஆகியோர் வார்னர், கவாஜா ஆகிய தொடக்க வீரர்களை அடுத்தடுத்த ஓவர்களில் காலி செய்து பிட்ச் சுழலுக்கு மட்டும் சாதகமாக அமைக்கப்படவில்லை என்பதை நிரூபித்தனர்.

2. அதே போல் இந்திய ஸ்பின்னர்களுக்கு 2.9 டிகிரி சுழன்று கை கொடுத்த நாக்பூர் பிட்ச் ஆஸ்திரேலிய ஸ்பின்னர்களுக்கு 3.4 டிகிரி அதிகமாக சுழன்று கை கொடுத்தது. ஆனாலும் அவர்கள் நல்ல லைன், லென்த் போன்றவற்றை பின்பற்றாததால் இந்தியாவைப் போல் தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் தடுமாறுகின்றனர்.

- Advertisement -

3. அதை விட இடது கை பேட்ஸ்மேன்களை தாக்குவதற்காக வேண்டுமென்றே பிட்ச் உருவாக்கப்பட்டுள்ளதாக விமர்சித்த ஆஸ்திரேலிய அணியில் எந்த இடதுகை பேட்ஸ்மேனும் 50 ரன்கள் தாண்டவில்லை. ஆனால் இந்திய அணியில் ஜடேஜா – அக்சர் ஆகிய 2 இடது கை பேட்ஸ்மேன்கள் மட்டுமே இடம் வகிக்கும் நிலையில் அவர்கள் இருவருமே அரை சதம் கடந்து அசத்தி வருகிறார்கள்.

இதையும் படிங்க: IND vs AUS : ஜடேஜா விரலில் தேய்த்தது என்ன? முதல் நாள் ஆட்டத்தில் நடந்தது என்ன? – விவரம் இதோ

மொத்தத்தில் ஆஸ்திரேலியாவின் பிட்ச் பற்றிய குற்றச்சாட்டை 3 நாட்களில் 3வது முறையாக இந்தியா பொய்யாக்கியுள்ளது. மறுபுறம் வாயில் பேசும் ஆஸ்திரேலியா செயலில் பேச தவறுவதே இந்த அனைத்திற்கும் காரணமாக இருந்து வருகிறது.

Advertisement