நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற்ற அத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. குறிப்பாக பெங்களூருவில் அக்டோபர் 16ஆம் தேதி மழையால் தாமதமாக துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா தவறுதலாக முதலில் பேட்டிங் செய்தது.
அதனால் வேகத்துக்கு சவாலாக இருந்த ஆடுகளத்தில் சொதப்பிய இந்தியா 46க்கு ஆல் அவுட்டாகி சொந்த மண்ணில் குறைந்தபட்ச ஸ்கோர் பதிவு செய்து மோசமான சாதனை படைத்தது. பின்னர் விளையாடிய நியூசிலாந்து 402 ரன்கள் குவித்தது. அதன் பின் களம் இறங்கிய இந்தியா முடிந்தளவுக்கு போராடியும் 462 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்தியாவுக்கு பின்னடைவு:
இறுதியில் 107 என்ற சுலபமான இலக்கை துரத்திய நியூசிலாந்து 2 விக்கெட்டுகளை இழந்து எளிதாக வெற்றி பெற்றது. அதனால் இந்திய மண்ணில் 36 வருடங்கள் கழித்து ஒரு டெஸ்ட் போட்டியில் வென்ற நியூசிலாந்து சாதனை படைத்து 1 – 0* (3) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. மறுபுறம் போராடி தோற்ற இந்தியா இத்தொடரை வெல்ல கடைசி 2 போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
அதை விட இந்த தோல்வியால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்தியா பின்னடைவை சந்தித்துள்ளது. ஆம் இதுவரை 12 போட்டிகளில் 8 வெற்றி 3 தோல்விகளை சந்தித்துள்ள இந்தியா 1 டிராவை பதிவு செய்துள்ளது. இருப்பினும் முந்தைய வெற்றிகளால் 68.06% புள்ளிகளுடன் இந்தியா இப்போது முதலிடத்தில் இருக்கிறது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல்:
ஆஸ்திரேலியா 62.50%, இலங்கை 55.56%, நியூசிலாந்து 44.44%, இங்கிலாந்து 43.06% புள்ளிகளுடன் அடுத்த 4 இடங்களில் உள்ளன. இங்கே பின்னடைவு என்னவெனில் 2025 ஜூன் மாதம் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு இந்தியா தகுதி பெற இத்தொடரின் கடைசி 2 போட்டிகளிலும் வென்று 2 – 1 (3) என்ற கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவை தோற்கடிக்க சிஎஸ்கே தான் காரணம்.. அது ரொம்ப ஹெல்ப் பண்ணுச்சு.. ஆட்டநாயகன் ரவீந்திரா பேட்டி
அத்துடன் அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா அதிகபட்சமாக ஒரு தோல்வியை மட்டுமே சந்திக்கலாம். ஒருவேளை ஆஸ்திரேலியாவில் 2 தோல்விகளை சந்தித்தால் கூட இந்தியா ஃபைனலுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை இழப்பதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளது. மொத்தத்தில் இத்தொடரின் கடைசி 2 போட்டிகளில் வெல்வதுடன் ஆஸ்திரேலியாவில் 1 தோல்விக்கு மேல் பெறக்கூடாது என்ற நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



