
இலங்கை அணிக்கு எதிராக தனது சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்று வந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 3-வது மற்றும் கடைசி போட்டி நேற்று தரம்சாலாவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட் செய்வதாக அறிவித்ததை அடுத்து களம் இறங்கிய அந்த அணியின் டாப் 4 வீரர்கள் இந்தியாவின் அதிரடியான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஒற்றை இலக்க ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தார்கள்.
இதனால் 29/4 என ஆரம்பத்திலேயே படுமோசமான துவக்கத்தை பெற்ற இலங்கையை அந்த அணியின் கேப்டன் தசுன் சனாகா மீட்டெடுக்க போராடினார். முதலில் மெதுவாக ரன்களை எடுக்க துவங்கிய அவர் நேரம் செல்ல செல்ல இந்திய பவுலர்களை பந்தாடி 38 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உட்பட 74* ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்றார். இதன் காரணமாக 100 ரன்களை தொடுமா என்ற நிலையில் தள்ளாடிய இலங்கை 20 ஓவர்களில் 146/5 ரன்கள் எடுத்தது.
147 ரன்கள் இலக்கு:
இதை தொடர்ந்து 147 என்ற இலக்கை துரத்திய இந்தியாவிற்கு கேப்டன் ரோகித் சர்மா 5 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளிக்க அவருடன் களமிறங்கிய சஞ்சு சாம்சன் 18 (12) ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் அடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் மீண்டும் இலங்கை பந்துவீச்சாளர்களை ஆரம்பம் முதலே பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக பறக்கவிட்டார். தொடர்ந்து பட்டைய கிளப்பும் பேட்டிங்கை வெளிப்படுத்திய அவர் 45 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் உட்பட 73* குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து இந்தியாவின் வெற்றியை உறுதி படுத்தினார்.
அவருடன் தீபக் ஹூடா 21 (16) ரன்களும் கடைசி நேரத்தில் களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா 22* (15) ரன்கள் குவித்து அபார பினிஷிங் செய்ய 16.5 ஓவர்களிலேயே 148/4 ரன்கள் எடுத்து இலக்கை எட்டிப் பிடித்த இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முன்னதாக இந்த தொடரின் முதல் 2 போட்டிகளில் ஏற்கனவே வெற்றியை பதிவு செய்திருந்த இந்தியா இந்த போட்டியிலும் வெற்றி பெற்றதன் காரணமாக 3 – 0 என்ற கணக்கில் வைட்வாஷ் வெற்றியுடன் கோப்பையை முத்தமிட்டது.
ஹாட்ரிக் வைட்வாஷ் வெற்றி:
இந்த வெற்றியின் வாயிலாக கடைசியாக நடந்த 3 டி20 தொடர்களில் ஹாட்ரிக் வைட்வாஷ் வெற்றிகளை பதிவு செய்து இந்தியா அசத்தியுள்ளது. கடந்த நவம்பர் மாதம் டி20 கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா அப்போது நியூஸிலாந்துக்கு எதிராக நடந்த டி20 தொடரையும் சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடந்த டி20 தொடரையும் இப்போது இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரையும் தலா 3 – 0 என்ற கணக்கில் அடுத்தடுத்து கைப்பற்றி ஹாட்ரிக் வைட்வாஷ் வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார். இதன் வாயிலாக ஐசிசி டி20 தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் டி20 அணியாகவும் அவர் தலைமையிலான இந்தியா தரம் உயர்ந்துள்ளது.
மேலும் இந்த அடுத்தடுத்த வெற்றிகளின் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை பதிவு செய்த அணி என்ற ஆப்கானிஸ்தான், ரோமானியா உலக சாதனையை இந்தியா சமன் செய்துள்ளது. கடைசியாக கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த ஐசிசி டி20 உலகக் கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிராக தோற்ற இந்தியா அதன் பின் தொடர்ச்சியாக 12 வெற்றிகளை குவித்து இந்த சூப்பர் உலக சாதனையை படைத்துள்ளது.
நியூஸிலாந்தை முந்தி புதிய உலகசாதனை:
இந்த அடுத்தடுத்த வெற்றிகளால் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் சொந்த மண்ணில் அதிக வெற்றிகளை குவித்த அணி என்ற புதிய உலக சாதனையை இந்தியா படைத்தது. இது வரை இந்த உலக சாதனையை இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் தலா 39 வெற்றிகளுடன் பகிர்ந்து கொண்டிருந்தன. ஆனால் இலங்கைக்கு எதிராக நேற்று நடந்த 3வது போட்டியில் பெற்ற வெற்றியின் காரணமாக தற்போது நியூசிலாந்தை முந்தியுள்ள இந்தியா உலகிலேயே சொந்த மண்ணில் கில்லி என நிரூபித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது.
இதையும் படிங்க : இந்த 3 மேட்ச்ல நான் இப்படி அசத்தலா பேட்டிங் பண்ண இதுவே காரணம் – தொடர்நாயகன் ஷ்ரேயாஸ் பேட்டி
சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் சொந்த மண்ணில் அதிக வெற்றிகளை குவித்த நாடுகள் இதோ:
1. இந்தியா : 40* வெற்றிகள்
2. நியூஸிலாந்து : 39 வெற்றிகள்
3. தென்ஆப்பிரிக்கா : 37 வெற்றிகள்
4. வெஸ்ட்இண்டீஸ் : 32 வெற்றிகள்
5. ஆஸ்திரேலியா : 31 வெற்றிகள்