இந்தியா இன்னமும் சரியான டீம செலக்ட் பண்ணல, முதலில் அவருக்கு சான்ஸ் கொடுங்க – ரிக்கி பாண்டிங் கோரிக்கை

Ponting
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 12 சுற்று போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. அதில் குரூப் 1 புள்ளி பட்டியலில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா வெளியேறிய நிலையில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. அதே போல் குரூப் 2 புள்ளி பட்டியலில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா இதுவரை பங்கேற்ற 4 போட்டிகளில் 3 வெற்றிகளை பதிவு செய்து 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அதனால் நவம்பர் 6ஆம் தேதியன்று நடைபெறும் ஜிம்பாப்வேவுக்கு எதிரான தன்னுடைய கடைசி போட்டியில் வென்று அரையிறுதிக்குள் நுழைய இந்திய அணியினர் தீவிரமான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இருப்பினும் இந்திய அணியில் நிலவும் ஒரு சில குறைபாடுகளில் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டை பின்னுக்கு தள்ளி வாய்ப்பு பெற்ற தமிழகத்தின் மூத்த வீரர் தினேஷ் கார்த்திக் இதுவரை களமிறங்கிய 4 போட்டிகளிலும் சொதப்பலாக செயல்பட்டு வருவது பெரிய பின்னடைவை கொடுத்து வருகிறது. குறிப்பாக பினிஷிங் செய்வதற்காகவே தேர்வு செய்யப்பட்ட அவர் அந்த வேலையில் இதுவரை ஒரு போட்டியில் கூட சிறப்பாக செயல்படவில்லை. அத்துடன் அடிப்படை வேலையான விக்கெட் கீப்பிங் செய்வதிலும் முக்கிய நேரங்களில் அவர் சொதப்புவது நிறைய தமிழக ரசிகர்களையே அதிருப்தியடைய வைத்ததுள்ளது.

- Advertisement -

இன்னமும் சரியில்ல:
அத்துடன் இதற்கு முன் ஆஸ்திரேலியாவில் பெரிய அளவில் விளையாடிய அனுபவம் இல்லாததும் அவருக்கு தடுமாற்றத்தை கொடுக்கிறது. மறுபுறம் டி20 கிரிக்கெட்டில் தடுமாறினாலும் ஆஸ்திரேலிய மண்ணில் ஏற்கனவே 24 வயதிலேயே சொல்லி அடிக்கும் கில்லியாக செயல்பட்டு காபா போன்ற வரலாற்று வெற்றிகளை பெற்றுக் கொடுத்த அனுபவத்தை ரிசப் பண்ட் பெற்றுள்ளார். அதனால் மிடில் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேன்கள் இல்லாத குறையை போக்கும் வகையில் அவருக்கு வாய்ப்பளிக்குமாறு வீரேந்தர் சேவாக், கௌதம் கம்பீர் உள்ளிட்ட நிறைய முன்னாள் வீரர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அந்த வரிசையில் இணைந்துள்ள ஆஸ்திரேலிய ஜாம்பவான் கேப்டன் ரிக்கி பாண்டிங் இதுவரை இந்தியா தன்னுடைய அணியை சரி வர தேர்வு செய்யவில்லை என்று அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக ரிஷப் பண்ட் இதுவரை விளையாடாதது தமக்கு ஆச்சரியத்தை கொடுப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பிரபல இந்திய பத்திரிகையாளர் விமல் குமார் யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “அவர் விளையாடாதது எனக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது. ஏனெனில் ஒன்று அவர் மேட்ச் வின்னர், இரண்டாவது இடது கை பேட்ஸ்மேனாக திகழும் அவர் மிடில் ஆர்டரில் எங்கு வேண்டுமானாலும் களமிறங்கும் திறமை பெற்றவர்”

- Advertisement -

“மேலும் மிடில் ஆர்டரில் மேலே களமிறங்கும் நிலை வந்தால் அக்சர் படேலை இந்தியா அனுப்ப முடிவெடுத்துள்ளதாக சில செய்திகளை படித்தேன். அந்த வகையில் 2 ஸ்பின்னர்கள் அணியில் இருந்தால் ரிஷப் பண்ட் விளையாடுவதில் சிக்கல் ஏற்படும். இருப்பினும் ஆஸ்திரேலியா வந்துள்ள இந்தியா இதுவரை தங்களுடைய சிறந்த அணி என்ன என்பதை தெரியாமலேயே இருக்கிறது. அனேகமாக இங்குள்ள கால சூழ்நிலைகளை அவர்கள் அறிந்திருக்காத காரணத்தாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக கருதுகிறேன்”

“ஆனால் மேட்ச் வின்னராக திகழும் ரிசப் பண்ட் இதற்கு முன் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் மற்றும் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் என்ன செய்தார் என்பதை நான் அறிவேன். ஒருவேளை இந்த உலக கோப்பையில் அழுத்தமான பெரிய போட்டிகளில் வாய்ப்பு பெற்று அவர் பின்பகுதியில் அசத்தும் நிலைமையும் ஏற்படலாம் என்பதை யார் அறிவார்கள்” என்று கூறினார். அதாவது ஆஸ்திரேலியாவில் பெரும்பாலும் சுழல் பந்து வீச்சு எடுபடாது என்பதால் 2 ஸ்பின்னர்கள் தேவையில்லை என்று கூறும் ரிக்கி பாண்டிங் அக்சர் படேலுக்கு பதிலாக ரிஷப் பண்ட் விளையாட வேண்டும் என்று கூறியுள்ளார். அந்த வகையில் நாக் அவுட் போன்ற போட்டிகளில் அவர் வாய்ப்பு பெறுவார் என்று நம்புவதாகவும் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.

Advertisement