ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அதனால் குரூப் ஏ பிரிவின் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்தியா கிட்டத்தட்ட சூப்பர் 8 சுற்று வாய்ப்பை உறுதி செய்துள்ளது. முன்னதாக பரம எதிரி பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்தியா வெறும் 6 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
நியூயார்க் நகரில் ஜூன் 9ஆம் தேதி நடைபெற்ற அந்த போட்டியில் இந்தியா வெறும் 119 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக அக்சர் படேல் 20, ரிஷப் பண்ட் 43 ரன்கள் எடுத்தனர். ஆனால் அதைத் துரத்தியும் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் ஆரம்பம் முதலே இந்திய பவுலர்களின் தரமான பந்தயத்தில் அதிரடி காட்ட முடியாமல் திணறினர்.
முக்கியமான வெற்றி நாயகன்:
அதனால் 20 ஓவரில் பாகிஸ்தான் 113/7 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 31 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 3 விக்கெட்டுகளை எடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்த அசாத்தியமான வெற்றியை ஜஸ்ப்ரித் பும்ரா பெற்றுக் கொடுத்ததாக ஜாம்பவான் அனில் கும்ப்ளே பாராட்டியுள்ளார்.
எனவே இந்த உலகக்கோப்பையை வெல்ல வேண்டுமெனில் அவர் தொடர் முழுவதும் அசத்துவது அவசியம் என்றும் கும்பளே தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அவர் 15வது ஓவரில் முகமது ரிஸ்வானின் முக்கியமான விக்கெட்டை எடுத்தார். ஒருவேளை அவர் 19வது ஓவரில் 2 பவுண்டரிகள் கொடுத்திருந்தால் கூட கடைசி ஓவரில் 10, 12 ரன்களை கட்டுப்படுத்த வேண்டிய சூழ்நிலையில் இந்தியா வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருந்திருக்கும்”
“ஆனால் அது போன்ற பிட்ச்சில் கடைசி ஓவரில் தேவைப்பட்ட 18, 19 ரன்களை டெயில் எண்டர்கள் எடுப்பது மிகவும் கடினமாகும். எனவே இந்த தொடரை இந்தியா வெல்ல வேண்டுமெனில் ஜஸ்ப்ரித் பும்ரா மிகப்பெரிய வேலையை செய்ய வேண்டும். பும்ரா தான் உங்களுடைய அணியின் பட்டியலில் முதல் வீரராக இருக்க வேண்டும். ஃபார்மட்டை மறந்து விடுங்கள். அவர் தான் உங்களுடைய நம்பர் ஒன் வீரர்”
இதையும் படிங்க: வங்கதேசத்தின் வெற்றியை தூளாக்கி துண்டு போட்ட ஐசிசி விதிமுறை.. ரசிகர்கள் குமுறல்.. ரூல்ஸ் சொல்வது என்ன?
“பிட்ச் பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருந்தது உண்மைதான். ஆனால் அவருடைய வேரியசன் பேட்ஸ்மேன்களை அழுத்தத்திற்கு தள்ளியது. பிட்ச்சை விடுங்கள். தம்முடைய கேரியரின் பெரும்பாலும் அவர் சவாலான பிட்ச்களில் சிறப்பாக செயல்பட்டதை நாம் பார்த்துள்ளோம். பும்ராவுக்கு எதிராக விளையாடும் எந்த பேட்ஸ்மேனுக்கு அதிரடியாக விளையாடுவது கடினம் என்று தெரியும்” எனக் கூறினார்.