ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடரில் மார்ச் நான்காம் தேதி இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு முதல் அரையிறுதிப் போட்டி நடைபெறுகிறது. அதில் வலுவான ஆஸ்திரேலியா அணியை இந்தியா சந்திக்கிறது. துபாயில் தங்களது குரூப் சுற்றில் விளையாடிய 3 போட்டிகளிலும் வென்ற இந்தியா நல்ல ஃபார்மில் இருப்பதால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தும் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள்.
ஆனால் ஐசிசி தொடர்களில் எப்போதுமே சிறப்பாக செயல்படக்கூடிய ஆஸ்திரேலியா 2023 உலகக்கோப்பையில் தொடர்ச்சியாக 10 வெற்றிகளுடன் ஃபைனலுக்கு வந்த இந்தியாவை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது. மேலும் சமீபத்திய டெஸ்ட் தொடரிலும் 10 வருடங்கள் கழித்து இந்திய அணியை ஆஸ்திரேலியா தோற்கடித்தது. எனவே இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது இந்தியாவுக்கு பெரிய சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அதிர்ஷ்டம் கைகொடுக்குமா:
முன்னதாக இந்திய அணி கடைசியாக விளையாடிய 14 ஒருநாள் போட்டிகளில் டாஸ் வீசுவதில் தோல்வியை சந்தித்து மோசமான உலகச் சாதனை படைத்துள்ளது. கடைசியாக 2023 உலகக் கோப்பை ஃபைனலில் இதே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா டாஸ் வீசுவதில் தோல்வியை சந்தித்து கடைசியில் கோப்பையையும் கோட்டை விட்டது. அப்போதிலிருந்து கடந்த 14 போட்டிகளில் ஒருமுறை கூட இந்தியா டாஸ் வெல்லவில்லை.
அதிலும் கேப்டன் ரோஹித் சர்மா கடைசியாக விளையாடிய 10 ஒருநாள் போட்டிகளில் டாஸ் வீசுவதில் தோல்வியையே சந்தித்துள்ளார். இந்நிலையில் இந்த முக்கியமான நாக் அவுட் போட்டியில் எப்படியாவது டாஸ் வெல்லுங்கள் என்று ரோஹித் சர்மாவுக்கு முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா அசத்தியமான கோரிக்கை வைத்துள்ளார். ஏனெனில் டாஸ் என்பது அதிர்ஷ்டத்தைப் பொறுத்த விஷயமாகும்.
டாஸ் முக்கியம்:
இது பற்றி ஆகாஷ் சோப்ரா பேசியது பின்வருமாறு. “நாம் ஒரு டாஸ் கூட வெல்லவில்லை. டாஸ் தோற்றாலும் போட்டியில் நாம் தோற்க மாட்டோம் என்ற நம்பிக்கையுடன் ரோகித் சர்மா இருப்பது நல்லது. ஆனால் டாஸ் என்பது பிரச்சனையாகவே இருக்கிறது. 2023 உலகக் கோப்பை ஃபைனலில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பவுலிங் செய்தது இந்தியாவின் வெற்றியை பறிக்கக்கூடியதாக அமைந்தது”
இதையும் படிங்க: எங்க வீழ்ந்தியோ அங்கேயே எழுந்து நின்னுட்ட மச்சான்.. வருணை வாழ்த்திய சூரியகுமார் யாதவ் – விவரம் இதோ
“யாராவது டாஸ் முக்கியமில்லை. எதிரணியை மடக்குவதே முக்கியம் என்று சொன்னால் நான் அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஏனெனில் ஒருவேளை ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து 270 ரன்கள் அடித்து விட்டால் அதை துபாயில் எட்டுவது மிகவும் கடினம். எனவே டாஸ் என்பது என்னைப் பொறுத்த வரை மிகவும் முக்கியமானது. அதனால் ரோகித் சர்மா ப்ளீஸ் ஒரு டாஸ் வெல்லுங்கள்” என்று கூறினார்.



