காமன்வெல்த் கேம்ஸ் 2022 : போராடிய ஹர்மன், கையிலிருந்த தங்கத்தை சொதப்பி தாரைவார்த்த இந்தியா – ஆறுதலாக வெள்ளி வென்றது எப்படி

Harmanpreet kaur IND vs Aus Womens
- Advertisement -

ஒலிம்பிக் போட்டிகளுக்கு நிகரான காமன்வெல்த் 2022 போட்டிகளில் வரலாற்றிலேயே முதல் முறையாக மகளிர் 20 ஓவர் போட்டிகள் இம்முறை சேர்க்கப்பட்டது. அதில் உலகின் டாப் 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு கடந்த ஜூலை 29 முதல் லீக் சுற்றில் மோதிய நிலையில் குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா குரூப் பி பிரிவில் இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்து நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றன. அதை தொடர்ந்து ஆகஸ்ட் 6-ஆம் தேதி நடைபெற்ற அரையிறுதி சுற்றில் வலுவான இங்கிலாந்தை தோற்கடித்த இந்தியாவும் நியூசிலாந்தை தோற்கடித்த ஆஸ்திரேலியாவும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.

இதற்கிடையே ஆகஸ்ட் 7-ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு நடந்த வெண்கல பதக்க போட்டியில் இங்கிலாந்தை தோற்கடித்த நியூசிலாந்து வெண்கல பதக்கத்தை வென்று அசத்தியது. அந்த நிலைமையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதிய மாபெரும் இறுதி போட்டி ஆகஸ்ட் 7-ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்றது.

- Advertisement -

ஆஸ்திரேலியா 161:
அதில் உலக டி20 சாம்பியனான ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு அலிசா ஹீலி 7 (12) ரன்களில் அவுட்டானார். அதனால் 9/1 என்ற சுமாரான தொடக்கத்தை பெற்ற அந்த அணிக்கு அடுத்து களமிறங்கிய கேப்டன் மெக் லென்னிங் மற்றொரு தொடக்க வீராங்கனை பெத் மூனியுடன் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்து தனது அணியை வலுப்படுத்தினார். இந்த ஜோடியில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 36 (26) ரன்கள் எடுத்திருந்தபோது கேப்டன் மெக் லென்னிங்கை ராதா யாதவ் சாதுரியத்தால் ரன் அவுட் செய்து அனுப்பி வைத்தார்.

அப்போது அடுத்தடுத்த ஓவர்களில் தஹிளா மெக்ராத் மற்றும் ஹரிஷ் ஆகியோர் தலா 2 ரன்களில் ஆட்டமிழக்க 17 ஓவர்கள் வரை நங்கூரமாக நின்ற பெத் மூனி 8 பவுண்டரியுடன் 61 (41) ரன்களில் ஒரு வழியாக ஆட்டமிழந்தார். இறுதியில் ரிச்சல் ஹெய்ன்ஸ் 18* (10) ரன்கள் எடுத்ததால் 20 ஓவர்களில் ஆஸ்திரேலியா 161/8 ரன்கள் சேர்த்தது. இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஸ்னே ராணா மற்றும் ரேணுகா சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

- Advertisement -

போராடிய ஹர்மன்:
அதை தொடர்ந்து 162 ரன்கள் எடுத்தால் தங்கம் என்ற இலக்கை துரத்திய இந்தியாவுக்கு ஆரம்பத்திலேயே நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 6 (7) ரன்களில் அவுட்டாக அடுத்த ஓவரிலேயே ஷபாலி வர்மாவும் 11 (7) ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். அதனால் 22/2 என்ற மோசமான தொடக்கத்தை பெற்ற இந்தியாவின் தோல்வி உறுதியென ரசிகர்கள் கவலையடைந்த போது களமிறங்கிய கேப்டன் ஹர்மன்பிரீட் கௌர் மற்றொரு வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்கஸ் உடன் இணைந்து மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

3வது ஓவரில் சேர்ந்த இவர்கள் 15வது ஓவர்கள் வரை நிதானமாகவும் நங்கூரமாகவும் பேட்டிங் செய்து 96 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை ஓரளவு காப்பாற்றினார்கள். இதில் ஒருபுறம் ஹர்மன்பிரீட் அதிரடியாக ரன்களை சேர்க்க மறுபுறம் கம்பெனி கொடுக்கும் வகையில் பேட்டிங் செய்த ரோட்ரிகஸ் 3 பவுண்டரியுடன் 33 (33) ரன்களில் அவுட்டானர்.

- Advertisement -

சொதப்பிய இந்தியா:
அப்போது வெற்றிக்கு கடைசி 5 ஓவரில் 44 ரன்கள் தேவைப்பட்ட போது அடுத்து களமிறங்கிய பூஜா வஸ்திரகரை 1 (5) ரன்னில் காலி செய்த ஆஸ்திரேலியா அதே ஓவரில் 7 பவுண்டரி 2 சிக்சருடன் அரைசதம் கடந்து 65 (43) ரன்கள் எடுத்து வெற்றிக்கு போராடிய கேப்டன் ஹர்மன்பிரீத் கௌரையும் அவுட் செய்ததால் போட்டியில் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்பட்டது. அந்த பரபரப்பான நிலையில் கடைசி 3 ஓவரில் வெற்றிக்கு 28 ரன்கள் தேவைப்பட்ட போது அதிரடி காட்ட முயன்ற ஸ்னே ராணா 8 (6) ரன்களில் ரன் அவுட்டானதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.

அந்த நிலைமையில் கடைசி 2 ஓவரில் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்ட போது ராதா யாதவ் 1 ரன்னில் அவுட்டாக அதே ஓவரில் 2 பவுண்டரியுடன் அதிரடியாக 13 (8) ரன்கள் எடுத்து நம்பிக்கை கொடுத்த தீப்தி சர்மா எல்பிடபிள்யூ ஆனார். இறுதியில் கடைசி ஓவரில் கையிருப்பு 2 விக்கெட் மட்டுமே இருந்த நிலையில் 11 ரன்கள் தேவைப்பட்ட போது முதல் பந்தில் ரன் எடுக்காத யஸ்டிக்கா பாட்டியா 2-வது பந்தில் 2 ரன் எடுக்க முயன்று ரன் அவுட்டாக அடுத்த பந்திலேயே அடுத்து வந்த ரேணுகா சிங்கும் அவுட்டானார்.

அதனால் 19.3 ஓவரில் 152 ரன்களுக்கு இந்தியா ஆல்-அவுட்டானதா 9 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா தங்கப் பதக்கத்தை வென்றது. அந்த அணி சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஆஷ்லே கார்ட்னர் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

இப்போட்டியில் ஹர்மன்பிரீட் கவூர், ஜெமிம ரோடிருக்கஸ் ஆகியோரின் போராட்டத்தால் 118/2 என்ற நல்ல நிலையில் இருந்த இந்தியாவுக்கு எஞ்சிய வீராங்கனைகள் யாருமே 20 ரன்களை கூட தாண்டாமல் சீட்டுக்கட்டு சரிவது போல மளமளவென விக்கெட்டுகளை இழந்து வெற்றியையும் தாரைவார்த்தனர். அதனால் தங்கத்தை வெல்லும் பொன்னான வாய்ப்பை கோட்டை விட்ட இந்தியா ஆறுதலாக வெள்ளிப் பதக்கத்தை மட்டுமே வென்றது.

Advertisement