இலங்கைக்கு எதிரான முதல் போட்டியை 3வது ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. ஆகஸ்ட் ஏழாம் தேதி கொழும்புவில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 248/7 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக நிசாங்கா 45, பெர்னாண்டோ 96, குசால் மெண்டிஸ் 59 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரியான் பராக் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.
அதன் பின் பேட்டிங் செய்த இந்தியாவுக்கு மீண்டும் கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக 35 ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தை கொடுத்தார். ஆனால் எதிர்ப்புறம் விராட் கோலி, கில், ஸ்ரேயாஸ், துபே, அக்சர் படேல், ரிஷப் பண்ட் உள்ளிட்ட மற்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் 25 ரன்கள் கூட தாண்டவில்லை. அதனால் கடைசியில் வாஷிங்டன் சுந்தர் 30 ரன்கள் எடுத்து போராடியும் இந்தியாவை ரன்களுக்கு சுருட்டி இலங்கை வென்றது.
மோசமான தோல்வி:
அந்த அணிக்கு அதிகபட்சமாக வெல்லலாகே 5 விக்கெட்டுகள் எடுத்தார். அந்த வகையில் முதல் போட்டியை சமன் செய்து 2வது போட்டியில் வென்றிருந்த இலங்கை இதையும் சேர்த்து 2 – 0 (3) என்ற கணக்கில் இத்தொடரின் கோப்பையை வென்றது. இதன் வாயிலாக 27 வருடங்கள் கழித்து முதல் முறையாக இந்தியாவிற்கு எதிராக ஒரு ஒருநாள் தொடரை வென்று இலங்கை அசத்தியுள்ளது.
மறுபுறம் இலங்கையை விட தரமான வீரர்களை கொண்டிருந்தும் 1997க்குப்பின் இந்தியா அவமானத் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த தோல்விக்கு சுழலுக்கு சாதகமான ஆடுகளத்தில் இலங்கையின் ஸ்பின்னர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் திறம்பட எதிர்கொள்ளாததே முக்கிய காரணம் என்று சொல்லலாம். சொல்லப்போனால் இந்த தொடரில் 3 போட்டிகளில் இந்தியா தங்களின் 30 விக்கெட்டுகளில் 23 விக்கெட்டுகளை ஸ்பின்னர்களுக்கு எதிராக விட்டது.
இதன் வாயிலாக ஒரு ஒருநாள் தொடரில் ஸ்பின்னர்களுக்கு எதிராக அதிக விக்கெட்களை இழந்து இந்தியா வரலாறு காணாத தோல்வியை சந்தித்துள்ளது. இதற்கு முன் 1996ஆம் ஆண்டு கனடா நாட்டின் டொரன்டோ நகரில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஸ்பின்னர்களுக்கு எதிராக இந்தியா 22 விக்கெட்டுகள் இழந்ததே முந்தைய மோசமான சாதனையாகும்.
இதையும் படிங்க: சின்ன கிரௌண்ட்ல பொளக்க இது இந்தியா இல்ல.. ரோஹித் அணியை இப்படி தான் சாய்ச்சோம்.. தீக்சனா பேட்டி
இத்தனைக்கும் இந்தியாவில் பெரும்பாலும் சுழலுக்கு சாதகமான மைதானங்களே இருக்கும். அங்கே பிறந்து வளரக்கூடிய இந்திய பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாட்டவர்களை விட இயற்கையாகவே தரமான சுழல் பந்துகளை சிறப்பாக எதிர்கொள்ள கூடியவர்களாக அறியப்படுகின்றனர். ஆனால் தற்போது பிறப்பிலேயே இருக்கும் அந்த திறமையை டி20 கிரிக்கெட்டின் வருகையால் மறந்து போன இந்திய பேட்ஸ்மேன்கள் இத்தொடரில் தரமான சுழலை எதிர்கொள்ள முடியாமல் அவமான தோல்வியை பெற்றுக் கொடுத்துள்ளனர்.



